திங்கள், 8 ஜூன், 2020

தெலுங்கான .பத்தாம் வகுப்பில் ஆல் பாஸ்: முதல்வர்

மின்னம்பலம் : தமிழகத்தில் பத்தாம் வகுப்புத்
தேர்வை ரத்து அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதே சமயத்தில் பல்வேறு மாநிலங்களிலும் தேர்வு நடைபெற்றதாகத் தெரிவித்து, ஜூன் 15 ஆம் தேதி தேர்வை நடத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாகத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் 11 மாநிலங்கள் பொதுத் தேர்வை நடத்தி முடித்து விட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 8) தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதுபோன்று தமிழகத்தில் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது மாநில மாணவர்களின் நலன் கருதி முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
தெலங்கானாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

> தெலங்கானா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி, தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 5 லட்சத்து 34 ஆயிரத்து 903 பேர் பத்தாம் வகுப்புத் தேர்வை எதிர்கொள்ள இருந்தனர். ஊரடங்கு காரணமாகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட சூழலில், தற்போது மாணவர்களின் நலன் கருதி அவர்களது இன்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வரும் இந்த சூழ்நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்ததாக ஏ.என்.ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திலும் மாணவர்களின் நலன் கருதித் தேர்வு ஒத்தி வைக்கப்படுமா என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின், ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: