வியாழன், 11 ஜூன், 2020

அன்பு கோச்சுக்கப் போறான். அவன் கூப்ட்டான்னா அவன் நிகழ்ச்சிக்கு முதல்ல போயிரு

டான் அசோக் :கலைஞர் பிறந்தநாளின்போது கனிமொழி எம்.பி ஒரு பதிவு எழுதியிருந்தார். ஊரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் நேராக கலைஞர் அறைக்கு வந்து, “என்ன கண்டுக்க மாட்டேங்குற...,” என்றாராம். சுற்றி நின்றவர்களுக்கெல்லாம் பதற்றம் தொற்றி இருக்கிறது. கலைஞர், “உங்க ஊர்ல கூட்டத்துக்கு வந்தேன். உன்ன தேடுனேன். காணோமே.. எங்க போயிருந்த,” என்றாராம். இவர், “ஒரு வேலையா வெளியூர் போயிட்டேன். அதான் உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன். நல்லாருக்கியா?” என சாதாரணமாக அந்த உரையாடல் தொடர்ந்திருக்கிறது. அந்தப் பெரியவர் அண்ணா காலத்தில் இருந்து கலைஞரைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண திமுக தொண்டராம்.
இன்று ஜெ.அன்பழகன் மறைவுக்கு உதயநிதி ஒரு அஞ்சலிக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தலைவர் ஸ்டாலினுக்கும் ஜெ.அன்பழகனுக்குமான உறவை, அதையொட்டிய சம்பவங்களை எழுதியிருக்கிறார். எது என்றாலும் பூசிமெழுகாமல் தலைவர் ஸ்டாலினிடம் நேருக்கு நேராக ஜெ.அன்பழகன் சொல்லிவிடுவாராம். கோபம் என்றாலும் எந்த தயக்கமும் இன்றி வெளிப்படுத்திவிடுவாராம். தலைவர் ஸ்டாலினும், “அன்பு கோச்சுக்கப் போறான். அவன் கூப்ட்டான்னா அவன் நிகழ்ச்சிக்கு முதல்ல போயிரு,” என உதயநிதியிடம் சொல்வாராம்.

 நான்கைந்து நாட்களுக்கு முன்னால் அன்பழகன் அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு ஸ்டாலின் போனபோது, “ஏன் இவர் இப்படி ரிஸ்க் எடுக்கிறார்,” என்று நாமெல்லாம் மிகவும் கவலைப்பட்டோம். மீண்டும் ஜெ.அன்பழகன் உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டவுடன் மறுபடியும் மருத்துவமனைக்கு அதிகாலையிலேயே சென்றிருக்கிறார். இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு கதறி அழுதிருக்கிறார். அய்யா வீரபாண்டி ஆறுமுகம் இறந்தபோது கலைஞர் தலையிலடித்துக்கொண்டு அழுத காட்சிதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
இதெல்லாம் திமுக தலைமையின், திமுக தொண்டர்களின், திமுக என்னும் பேரியக்கத்தின் தனித்துவங்கள். குணங்கள். நிற்க.
இன்று காலை ஃபேஸ்புக்கில் ஒருவன் என்னை “எச்ச **** 200ரூ திமுக கொத்தடிமை,” என திட்டினான். கெட்ட வார்த்தையை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதி இருந்தான். அவன் ஃப்ரொஃபைல் போய் பார்த்தேன். டிக்டாக்கில் 100% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொண்டு, படிப்பை பார்ப்பனர்களுக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு மீசையை முறுக்கும் ஆண்ட பரம்பரை! அவன் ப்ரொஃபைல் பிக்சரில் ஓ.பி.எஸ் சிரித்துக்கொண்டிருந்தார். எனக்கு அவனை எண்ணி பாவமாக இருந்தது. ஜெயலலிதா வாழும்வரை அவரது கார் டயரையும், ஜெயலலிதா போனபின் இடைப்பட்ட சில நாட்களுக்கு சசிகலாவின் பாதங்களையும், பின்னர் மோடியின் ஷூவையும் பார்த்தே வாழும் ஆட்களைத் தலைவர்களாகக் கொண்டவர்களுக்கு திமுகவையும், கலைஞரையும், ஊரில் இருந்து கலைஞரைப் பார்க்க வந்த பெரியவரையும், ஜெ.அன்பழகன்களையும், தளபதி ஸ்டாலினையும் நான் எப்படி புரியவைப்பேன்? தங்கள் தலைவி எப்படி இறந்தார் என்பதே தெரியாத ஒரு கூட்டத்திற்கு, தொண்டன் இறந்ததற்காக தலையிலடித்துகொண்டு அழும் தலைவர்களைப் புரிந்துகொள்ள முடியுமா?
ஜெ.அன்பழகன் எனும் திமுக மாவட்டசெயலாளருக்கு தன் தலைவரிடம் இருந்த உரிமையும், கம்பீரத்தையும் பற்றிய உதயநிதியின் கடிதத்தைப் படித்தால் ஓ.பி.எஸ்ஸுக்கும், ஈ.பி.எஸ்ஸூக்கும் தங்களை நினைத்து ஒரு பெருமூச்சாவது வருமா? உயிரோடிருப்பது என்பது வேறு வாழ்வது என்பது வேறு என்பதை எப்படி விளக்குவது?
இந்த கோணத்தில் எல்லாம் சிந்தித்துப்பார்த்தால், இவர்களுக்கு சில விஷயங்களைப் புரியவைப்பது கடினமான காரியம் மட்டுமல்ல, முடியாத காரியமும் கூட என்பது புரியும். இவர்களைப் பார்த்து ஆ...ஆ...ஆ... என கமல் மாதிரி நம்மால் கத்தி அழத்தான் முடியுமே தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
-டான் அசோக்
ஜூன்11, 2020

கருத்துகள் இல்லை: