செவ்வாய், 9 ஜூன், 2020

புலி வதை முகாம்களில் சிக்கிய அப்பாவிகளின் கதைகள் .. டாக்டர் நோயல் நடேசன்

ஆயுதங்களின் மேல் மோகம் கொண்ட  மனநோயாளிகளல்ல-6 
 by noelnadesan : கைதிகளுக்கு காலை உணவாக பாண் தரப்படும் என முன்னரே சொல்லி இருந்தேன் அல்லவா? அந்தப் பாண் கொண்டு வரப்படும் பெட்டிகளில் பேக்கரியின் பெயரும் துணுக்காய் என்று எழுதப்பட்டதையும் பார்த்து இப்பகுதி துணுக்காய்க்கு சமீபத்தில் இருக்கிறது என்பதை ஊகித்துக்கொண்டேன். முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் உதவியாளர் நெல்லிநாதன் என்பவர் துணுக்காய் பகுதியில் அமைந்துள்ள இக்காட்டு முகாமில் ஒரு துணியும் இல்லாமல் நிர்வாணமாக வைக்கப்பட்டிருந்தார்.
யோசனையாலும் சித்திரவதைகளாலும் மண்டையில் அடிப்பதாலும் ஐந்து கைதிகளுக்கு மனநோய் பிடித்துக்கொண்டது. இவர்கள் பைத்தியமாக நடிப்பதாக சொல்லி மேலும் மேலும் அடிப்பார்கள். உணவு கொடுக்க மாட்டார்கள். முகாமில் ஒரு பகுதியில் இருந்த சகதிக்குள் பைத்தியம் பிடித்தவர்களை கட்டிவிடுவார்கள். சில நாட்களின் பின் ஒரு நாள் அவர்களை எங்கேயோ அழைத்துச் சென்றார்கள்.
https://noelnadesan.com/
அழைத்துச் சென்ற சுமார் பதினைந்து நிமிடங்களின் பின் துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள் கேட்டது. பைத்தியமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் முகாமுக்கு திரும்பவும் கொண்டுவரப்படவில்லை.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுபவர்கள் விசாரணை முடிந்து திரும்பி வரும்போது நடக்க முடியாமல் தான் வருவார்கள். சிலர் பெரிய இரத்தக் காயங்களுடன் தான் வருவார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் போது எனக்குப் பயமாக இருந்தது. இது ஆரம்ப விசாரணை என்றும் மீண்டும் ஒரு விசாரணை இருக்குமெனவும் பேசிக்கொண்டார்கள்.


விசாரணை ஆரம்பமாகி பத்தாவது நாள் விசாரணைக்காக எனது இலக்கமும் வாசிக்கப்பட்டது. நண்பகல் பன்னிரண்டு மணிபோல் சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க புலியின் மேசையின் முன் நிலத்தில் இருத்தப்பட்டேன். கறுத்த துணியினால் எனது கண்களைக் கட்டினார்கள். விசாரணை ஆரம்பமாகியது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எதுவித தயக்கமும் இன்றி பதில் சொன்னேன். ஆனால் எல்லாக் கைதிகளுக்கும் அப்படி பதில் அளிக்க முடியாத கேள்விகளாக அவை இருந்தன. உறவு முறைகள் உறவினரின் முகவரிகள் உறவினரின் பிறந்த திகதிகள் குடும்ப விபரங்கள் போன்ற ஞாபகத்தில் இல்லாத சாதாரண விடயங்கள் எல்லாம் கேட்க்கப்பட்டன.

“ஏன் உன்னைப் பிடித்தார்கள்”எனக் கேட்கப்பட்டதும் தெரியாது என்றேன். முதுகுப் பக்கமாக அடி விழுந்தது. ஏன் அடித்தார்கள் என்றோ, யார் அடித்தார்கள் என்றோ தெரியவில்லை. துடித்துப்போனேன். கொலைகாரப்புலிகள் வயரினால் பல தடவைகள் அடித்தார்கள். நீ ……….க்கு உளவு வேலை பார்க்கவில்லையா? எனக்கேட்டு பச்சைமட்டையினாலும் அடித்தார்கள். (தென்னை ஓலை மட்டை) உன்னைப்பற்றி ஊரில் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. உண்மையைச் சொல் வரதராஜ பெருமாளை அசோகா ஹோட்டலில் சந்தித்து என்ன பேசினாய் என்று கேட்டுக் கேட்டு அடித்தார்கள்.

மது அருந்துவாயா? புகைப் பிடிப்பாயா? என்று எல்லாம் கேட்டார்கள்.

எத்தனை பெண்களுடன் உடலுறவு செய்திருக்கிறாய்?

எத்தனை காதலிகள் உண்டு?

உனது காதலியுடன் உடலுறவு கொண்டு விட்டாயா?

காதலியின் பெயர் என்ன?
காதலியின் முகவரி என்ன?
காதலி அழகா? வெள்ளையா? கறுப்பா?

என்றெல்லாம் விசாரித்தார்கள். இவ்வாறாக சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்றது. முட்டுக்காலில் எல்லாம் அடித்ததினால் என்னால் ஒழுங்காக நடக்கமுடியவில்லை. ஒரு வாறாக எனது இடத்திற்கு வந்து சேர்ந்தேன்.

இந்த விசாரணை விபரம் மேல் இடத்திற்கு போய் வந்ததும் மீண்டும் ஒரு விசாரணை இருக்கும் என கூறினார்கள். முதல் விசாரணை நடைபெற்று பதினைந்து நாட்களின் பின் மறு விசாரணைக்காக அழைக்கப்பட்டேன். கண்கள் கட்டப்பட்டதும் வேறு ஒரு புலி விசாரணை செய்தார். நீ பெரிய சுத்தல்காரன் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்று சாகப்போகிறாய். நான் கேட்பவற்றை எல்லாம் ஒத்துக்கொண்டால் தப்புவாய் என அடித்துக்கொண்டே விசாரணையை ஆரம்பித்தார்.

நிமிடத்திற்கு ஒரு அடி விழுந்தது. பின் பக்கமாகவும் வேறு யாரோ அடித்தார்கள். எனது நினைவு மயங்கும் வரை அடித்தார்கள். பின்னர் கண் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் தடி ஒன்றை நீட்டி அதைப் பிடித்துக் கொண்டு வரும்படி என்னை அழைத்துச் சென்றார். கண் கட்டப்பட்டு இருந்ததால் எங்கு கொண்டு செல்லப்படுகிறேன் என்பது தெரியவில்லை. சுமார் ஐநூறு யார் நடந்திருப்பேன் கண் கட்டை நீக்கினார்கள் புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடத்தினுள் இருந்தேன். அங்கு கண் கட்டப்பட்ட நிலையில் ஒரு கைதி கிடத்தப்பட்டிருந்தார். அவரின் மீது நாலு புலிகள் சேர்ந்து ஒரு பெரிய இரும்பு றோதையை உருட்டினார்கள். அதன் கணத்தைப் பார்க்கும் போது ஐநூறு கிலோவுக்கும் மேல் இருக்கும் போல் தோன்றியது. அக் கைதி உருளையை மேலே உருட்டும் போது முதலில் பெரிய சத்தமாக அலறினார். பின்னர் சத்தமே வரவில்லை. மூர்ச்சையாகிவிட்டார்.

அவருக்கு தண்ணீர் தெளிக்கும்படி அச்சித்திரவதைக் கூடப் பொறுப்பாளர் காந்தி என்பவர் கூறினார். மூர்ச்சை தெளிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறிது நேரத்தில் அக்கைதி வெளியே அனுப்பப்பட்டார்.
ஒரு கைதி கதிரை ஒன்றுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தார். அவரின் கை விரல் நகங்களுக்குள் நீளமான ஊசி ஏற்றப்பட்டது. ஒவ்வொரு விரலாக குற்றினார்கள். ஒவ்வொரு விரலுக்குள்ளும் ஊசி செருகும் போது அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் நகத்தைப் பிடுங்க எத்தனித்தார்கள். அற்குள் கேட்டதை எல்லாம் கைதி அவர்கள் சொன்னபடி ஒத்துக்கொண்டார். அவருக்கு சித்திரவதை முடிந்தது.

காஞ்சோண்டி எனப்படும் ஒருவகை சுணை இலை அப்பகுதிக் காட்டக்குள் இருந்து கொண்டுவரப்பட்டு கைதிகளின் உடல் எங்கும் பூசப்பட்டது. நிர்வாணமாக்கி இந்த இலையினால் தடவினார்கள். மயிர்க்கொட்டி பட்டால் தடிப்பது போல் தடித்த உடல் முழுவதும் சொறி ஏற்பட்டது. நாலைந்து நாட்களுக்கு உடல் அரிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இச்சித்திரவதை அங்குள்ள பல கைதிகளுக்கு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வேறொரு கைதி கால்களும் கைகளும் கதிரைகளுடன் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்தார். அருகில் ஒரு சூளையில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதில் இரும்புக் கம்பிகள் காச்சப்பட்டிருந்தன. மேற்படி கைதியிடம் விளக்கம் நடந்து கொண்டுடிருந்தது. காச்சப்பட்டு தணல் போல் இருந்த கம்பியினால் கைதியின் குதிக்காலில் சூடு போட்டார்கள். சித்திரவதைக் கூடம் கூச்சலால் அதிர்ந்தது. பின்னர் ஏதோ கேட்டார்கள். மீண்டும் வேறொரு கம்பியை எடுத்து துடையில் சுட்டார்கள் முதுகிலும் சுட்டார்கள். கைதி உணர்விழந்துவிட்டார்.

முள்ளுக் கம்பியினால் செய்யப்பட்ட சவுக்குப் போன்ற ஆயுதத்தால் ஒரு கைதியை இரு புலிகள் மாறி மாறி அடித்தார்கள். அவர் உடல் எங்கும் காயப்பட்டு இரத்தம் வடிந்தது. காயத்துக்குள் உப்புத்தூளும், மிளகாய்த்தூளும் தடவப்பட்டது. விசாரணை தொடர்ந்தது. அவர்கள் கேட்டப்படி எல்லாம் கைதி சொன்னார் புலிகள் திருப்திபட்டார்கள்.
ஒரு கைதிக்கு இருகால்களும் தனித்தனியே இழுத்துக் கட்டப்பட்டது, இருகைகளும் உயர்த்திக் கட்டப்பட்டது. கைதியின் இரு காதுகளிலும் கிளிப் (இடுக்கி) இணைக்கப்பட்டது. அதில் மனிசாரம் பாச்சப்பட்டது. கைதி புலிகளுடன் ஒத்துப் போகவில்லை. பின்னர் நிர்வாணமாக்கப்பட்டார். ஆணுறுப்பில் கிளிப் பொருத்தப் பட்டு மின்சாரம் பாச்சப்பட்டது. கைதிபட்ட வேதனை சொல்ல முடியாது புலிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் ஆம் ஆம் என கூக்குரலிட்டார்.

நீ இந்திய ஆமிக்கு பத்து பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்தாய் அல்லவா என்றதும் கைதி ஆம் ஆம் என கத்தினார். அடுத்த கேள்விக்கு கைதி மௌனம் சாதித்ததும் மீண்டும் ஆணுறுப்பில் மின்சாரம் பாச்சப்பட்டது. நீ ஐந்து பெண்களை கற்பழித்தாய் அல்லவா என்றதும் கைதி ஆம் ஆம் என அலறினார். புலிகள் திருப்திபட்டு கட்டுக்களை விலக்கினார்கள். கைதி பிணம் போல் சாய்ந்தார்.

என்னை அழைத்து விசாரித்தார்கள். நீ ஊரில் நாலு புலிகளை இந்திய இராணுவத்திற்கு காட்டி கொடுத்தாய் அல்லவா என்றார்கள். நான் இல்லை என்றேன். உடனே எனது உடல் எல்லாம் காஞ்சோண்டி பூசப்பட்டது. உடல் எல்லாம் அரிப்பு அரித்தது மீண்டும் அதையே கேட்டார்கள். நான் மறுத்தேன். முள்ளுக் கம்பி சவுக்கால் அடித்தார்கள். காயத்தில் மிளகாய்த் தூள் போட்டார்கள். உடல் எல்லாம் தடித்து விட்டிருந்தது. அத்துடன் காயத்திலிருந்து இரத்தமும் வடிந்துகொண்டிருந்தது. மிளகாய்த் தூளைப்போட்டதும் என்னால் தாங்க முடியவில்லை. அம்மா அம்மா என அலறினேன்.

“அம்மாவை இந்தியன் ஆமிக்கு குடன்ரா” எனக் காந்தி என்ற புலி கூறிச் சிரித்தார். உனது ஊரில் நாலு புலிகளை இந்தியன் ஆமிக்கு காட்டிக் கொடுத்தாய் இதற்கு எம்மிடம் ஆதாரம் இருக்கிறது. நீ மறுத்தால் அடுத்து உனக்கு கரண்ட் பிடிக்கப்படும் என மின்சாரம் பாச்சும் இடத்திற்கு கொண்டு போய் சங்கிலியால் பிணைத்தார்கள் நான் அலறினேன். புலிகள் சிரித்தார்கள். எந்த ஒரு இயக்கத்திலும் சேராத தமிழ் மகனுக்கு புலிகள் செய்யும் கொடுமையை எண்ணிக்கலங்கினேன். இப்படிப்பட்ட கொடியவர்களின் கைகளில் தமிழீழம் போனால் மக்கள் என்ன ஆவார்கள். இந்த நேரத்தில் என் மனதில் ஓர் வைராக்கியம் உண்டானது. என்ன சித்திரவதை செய்தாலும் நான் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்வது இல்லை என முடிவு எடுத்தேன்.

சித்திரவதை கூடப் பொறுப்பாளர் அதாவது இறைச்சிக்கடை பொறுப்பாளர் காந்தி எனது பைலை படித்துப்பார்த்தான், என்ன நினைத்தானோ தெரியாது எனது விலங்குகளை அவிழ்த்து என்னை பங்கருக்குள் போகும்படி பணித்தான். பங்கருக்குள் போடப்பட்டேன். பங்கர் ஒரே இருட்டாக இருந்தது. அது மூடு பங்கர் பகல் இரவு எதுவும் தெரியவில்லை. எத்தனை நாள் பங்கருக்குள் இருந்தேனோ தெரியாது. பங்கருக்குள் இருந்தபோது கண் கட்டப்பட்டு இருந்தது. 2 நேரம் உணவு தரப்பட்டது. இரண்டு தடவை மலம் கழிக்க அனுமதிக்கப்பட்டேளன்;. நாலு தடவை நீர் தந்தார்கள் மூன்று நாட்கள் அந்த பங்கருக்குள் இருந்ததாக பின்னர் அறிந்தேன்.
மீண்டும் முகாமில் கொண்டுவந்து விடப்பட்டேன்.

இறைச்சிக்கடை என்று செல்லமாக அழைக்கப்படும் சித்திரவதைக் கூடம் முகாமில் இருந்து சுமார் ஐநூறு யார் தூரத்தில் காட்டுக்குள் இருந்தது. சித்திரவதை செய்யப்படும் கைதிகளின் கூச்சல் ஏனைய கைதிகளுக்கு கேட்க முடியாத தூரத்தில் இறைச்சிக்கடை இருந்தது.

தொடரும்

கருத்துகள் இல்லை: