வெள்ளி, 12 ஜூன், 2020

பீலா ராஜேஷ் மாற்றப்பட்ட பின்னணி .. 236 கொரோனா இறப்புக்கள் மர்மம்

tamil.oneindia.com -veerakumaran : சென்னை: தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்தில் நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் மறுபடியும் நியமிக்கப்பட்டுள்ளார். மீண்டும் வந்தார் ராதாகிருஷ்ணன்... Beela Rajesh திடீர் பணியிடமாற்றம் கொரோனா பரவல் மட்டுமின்றி, இந்தப் பணியிட மாற்றத்தின் பின்னணியில் வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
கண்டிப்பாக, கொரோனா பரவல் என்பது ஒரு முக்கியமான காரணம்தான். ஏனெனில் இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்து விட்டது. அதிலும் சுமார் 80 சதவீதம் அளவுக்கு தலைநகர் சென்னையில் பாதிப்பு நிலவி வருவது அரசுக்கு மிகப் பெரும் தர்மசங்கடமாக மாறியுள்ளது.

பிரஸ்மீட்டில் மீண்டும் பீலா ராஜேஷ்.. கொரோனா சிகிச்சைக்கு டபுள் மடங்கு படுக்கை வசதி- அதிரடி அறிவிப்பு



சென்னை கொரோனா இறப்பு எண்ணிக்கை

இந்த நிலையில்தான், சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான ஒரு, செய்தி, பீலா ராஜேஷ் பணியிட மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. அந்த செய்தி கட்டுரையில், சென்னையில் மட்டும் சுமார் 236 கொரோனா மரணங்கள் அரசின் கவனத்திற்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சில ஆதாரங்களையும் அந்த கட்டுரையில் இணைத்திருந்தது அந்த நாளிதழ். இந்த செய்தி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மறைக்கும் நோக்கம் இல்லை என்ற முதல்வர்

இந்த நிலையில், நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா மரணங்கள் விஷயத்தை யாரும் மறைக்க முடியாது. அவ்வாறு மறைக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் நேற்று முன்தினம் நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்திருந்தார் பீலா ராஜேஷ். அப்போது அவரிடம் இதுபோன்ற இழப்பு விதத்தில் வித்தியாசம் இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதில் அளித்த பீலா ராஜேஷ், முன்பு அரசு மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுவதால், இறப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறைக்கு கிடைப்பதில் தாமதம் ஆகி இருக்கலாம். அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இறப்பு விஷயங்களை அந்த கமிட்டி சேகரிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது.

குற்றச்சாட்டுகள்

ஏனெனில், கொரோனா போன்ற நோய்த் தொற்று பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது சுகாதாரத்துறை தான். ஆனால், சுகாதாரத் துறைக்கு தெரியாமல் சென்னையில் மட்டும் இத்தனை மரணங்கள் நடந்துள்ளது. அது குறித்த கேள்விக்கு இனிமேல் அந்த நம்பர்களை கேட்டுப் பெறுவோம் என்று பீலா ராஜேஷ் பதிலளிக்கிறாரே, என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினார். சுகாதாரத்துறை செயலாளர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக முணுமுணுப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் பீலா ராஜேஷ் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


ராதாகிருஷ்ணன் அனுபவம்

ராதாகிருஷ்ணன், பீலா ராஜேஷுன் ஒப்பிடும்போது நீண்ட அனுபவசாலி. பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார். சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்து மக்கள் உயிரை காப்பாற்றியவர். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைப்பதிலும், தகவல்களை பெறுவதிலும், அவர்களுக்கு பணி பங்கீடு செய்வதிலும் ராதாகிருஷ்ணன் நிபுணத்துவம் பெற்றவர். அந்த விஷயத்தில்தான் பீலா ராஜேஷ் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக ராதாகிருஷ்ணன் அழைக்கப்பட்டுள்ளார்.

தாமதம் தவிர்க்கப்படும்

மேலும் சென்னை மாநகராட்சியில் தொடர்ச்சியாக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இது போன்ற பேரிடர் காலங்களில் கைகொடுக்கும். ஏற்கனவே, சென்னைக்கான கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டு இருந்தாலும், சுகாதாரத் துறை செயலாளராக மற்றொருவர் பணியில் இருக்கும்போது இவருக்கு முழு அதிகாரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முடிவுகளை எடுப்பதற்கு கால தாமதமாகி வந்தது. இது அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்துக்கு சென்றதாக தெரிகிறது. எனவே காலதாமதத்தை தவிர்க்க வேண்டுமென்றால் முழு அதிகாரமும் இவரிடம் இருப்பது முக்கியம் என்பதால் சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.



மக்களுக்கு நம்பிக்கையூட்ட நடவடிக்கை

2012 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக சுகாதாரத் துறை செயலாளராக பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன். இதுபோன்ற பேரிடர் காலத்தில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மறுபடியும் நியமிக்கப்படுவார் என்று நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. மற்றொரு பக்கம் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளுக்கும் மனச்சோர்வு நிலவுகிறது. மக்களுக்கு நம்பிக்கையூட்டவும், அதிகாரிகளுக்கு புத்துணர்ச்சி வழங்கவும், ஆக்டிவாக செயல்படக்கூடிய ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்படுவது சரியான முடிவாக இருக்கும் என்று முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கருதியதால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

எதிர்பார்த்த முடிவு

பீலா ராஜேஷ் மாற்றப்படுவார் என்று கடந்த ஒரு வாரமாகவே பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான், இன்று அந்த முடிவு வெளியாகியுள்ளது. அதற்கு, அவர் கொடுத்த அந்த பேட்டியும், அதனால் எழுந்த சர்ச்சையும்தான், முக்கிய காரணம் என்று, தலைமைச் செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன

கருத்துகள் இல்லை: