புதன், 18 மார்ச், 2020

தமிழ் முற்போக்கு கூட்டணி ,, இலங்கை மலையக மக்களின் அரசியல் எழுச்சி

Mano Ganesan -
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மாவட்டவாரி மற்றும் தேசிய பட்டியல் வேட்பாளர்கள் - பொதுதேர்தல்-2020
மாவட்டவாரி பட்டியல் வேட்பாளர்கள்
01 பதுளை - ஏ. அரவிந்தகுமார் - (மலையக மக்கள் முன்னணி)
02 நுவரெலியா - வி. ராதாகிருஷ்ணன் - (மலையக மக்கள் முன்னணி)
03 நுவரெலியா- பி. திகாம்பரம் - (தொழிலாளர் தேசிய முன்னணி)
04 நுவரெலியா - எம். உதயகுமார் - (தொழிலாளர் தேசிய முன்னணி)
05 கண்டி - எம். வேலுகுமார்- (ஜனநாயக மக்கள் முன்னணி)
06 இரத்தினபுரி - எம். சந்திரகுமார் - (ஜனநாயக மக்கள் முன்னணி)
07 கம்பஹா - எஸ். சசிகுமார் - (ஜனநாயக மக்கள் முன்னணி)
08 கேகாலை - எம். பரணிதரன் - (ஜனநாயக மக்கள் முன்னணி)
09 கொழும்பு - வி. ஜனகன் - (ஜனநாயக மக்கள் முன்னணி)
10 கொழும்பு - மனோ கணேசன் - (ஜனநாயக மக்கள் முன்னணி)

தேசிய பட்டியல் வேட்பாளர்கள்;
01 எம். திலகராஜ்
02 கே.ரி. குருசாமி
03 ஏ. லோரன்ஸ்
(தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நியமிக்கப்படும் தேசிய பட்டியல் எம்பிக்கள், கூட்டணிக்கு உள்வரும் கட்சி அடையாளத்தை கைவிட்டு த.மு.கூ. உறுப்பினராக கருதப்படுவர்)


Mano Ganesan -
தம்பி திலகராஜ், பற்றிய அக்கறையை வெளிப்படுத்தியுள்ள நண்பர்களுக்கு நன்றி.
அந்த அக்கறையை கூட்டணி தலைவர் என்ற முறையில் நானும் பகிர்ந்து கொள்கிறேன். அவர் நீக்கப்படவில்லை. அவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேசிய பட்டியல் எம்பியாக நியமிக்கப்படுவார். நுவரெலியா மாவட்ட பெறுபேறுகள் எதுவாக இருப்பினும் இது நிகழும்.

அந்த நியமனத்தின் பின் அவர் ஒரு கட்சி சார்ந்த எம்பியாக இல்லாமல் கூட்டணி எம்பியாக பணியாற்றுவார். இதுதான் இந்நகர்வின் நல்விளைவு. இதை திலகரும் அறிவார்.

நண்பர்கள் ஒன்றை உணர வேண்டும். கொள்கையும், நடைமுறையும் அரசியல் பரப்பில் இருக்கின்றன. இரண்டையும் ஒருசேர சமநிலையில் முன்னெடுப்பதே வெற்றிகர அரசியல் பயணம். இதை நான் அறிவேன்.

ஆகவேதான் வெளியே தெரியாத, பலருக்கு புரியாத, மிகப்பல விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் நான் இந்த கூட்டணியின் தலைவனாக பணி புரிகிறேன்.

என்னையும், திலகரையும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேறு எவரையும் விட எமது ஐக்கியம் மற்றும் கூட்டணி என்ற இயந்திரம்தான் முக்கியம். அதற்கு பிறகுதான் அனைவரும் வருகிறோம்.

ஆகவே இந்த சர்ச்சை சத்தத்தில், “தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கூட்டமைப்பு, இந்நாட்டில் ஒதுக்கப்பட முடியாத ஒரு சமூக-அரசியல் சக்தியாக உருவாகி, தேசிய பரப்பில், கடந்த ஐந்து வருடங்களாக ஐக்கியமாக பயணிக்கிறது. எதிர்கால பரப்புக்கு உள்ளேயும் அது வெற்றிகரமாக பயணித்து இந்நாட்டில் தேசிய அந்தஸ்துள்ள சக்தியாக இன்னமும் பலம் பெறும். பெற வேண்டும்” என்ற அடிப்படைகளை தயவு செய்து மூழ்கடித்து விட வேண்டாம்.

இலங்கை வரலாற்றில், தென்னிலங்கை வரலாற்றில், மலையக வரலாற்றில் எத்தனையோ “கூட்டணிகள்” வேகமாக உருவாக்கப்பட்டு, உருவாக்கபட்ட வேகத்திலேயே அழிந்து, ஒழிந்து போயுள்ளன. தேர்தல் கூட்டணிகள், தேர்தல்கள் முடிந்து, பெறுபேறுகள் வெளியாகும் முன்னமேயே காணாமல் போயுள்ளன.

ஆனால், தமிழ் முற்போக்கு கூட்டணி, கடந்த ஐந்து வருடங்களாக எத்தனையோ, தேர்தல்கள், எத்தனையோ சவால்கள் ஆகியவற்றை கடந்து நிலைத்து நிற்கிறது.

இன்று, அரசியல் ஒற்றுமையையும் கடந்து நாம் எமது கூட்டணியை, அதிகாரபூர்வமான சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட கூட்டணியாக தயாராக்கியுள்ளோம். தமிழ் இலங்கையர் சமூக-அரசியல் சமகால வரலாற்றில் நாமே இந்த அம்சத்தில் முன்னோடி. இது மகிழ்ச்சிகரமான ஒரு அடிப்படை உண்மை.

மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது வெறுமனே நுவரேலியா மாவட்டத்தை மாத்திரம் பரப்பாக கொண்ட ஒரு தொழிற்சங்கம் அல்ல. மாறாக தமுகூ, நுவரேலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா ஆகிய மாவட்டங்களையும் உள்வாங்கிய ஒரு அரசியல் இயக்கமாக வளர்ந்துள்ளது.

நுவரேலியா மாவட்டத்தை விட ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையில் நமது மக்கள் வாழும் இன்னும் பல மாவட்டங்களையும் நாம்தான் இன்று தேசிய வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம். இதை நாம் திட்டமிட்டு செய்கிறோம்.

இன்னமும் பல மாவட்டங்கள், பிரதேசங்கள் எஞ்சி உள்ளன. நடைமுறை சிக்கல்கள் காரணமாக அவை இம்முறை உள்வாங்கப்படவில்லை. எதிர்காலத்தில், அவையும் உள்வாங்கப்பட உள்ளன. எமது சிறகுகள் இன்னமும் விரியும். அந்த எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது.

ஆகவே, தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களையும், எல்லா மாவட்டங்களிலும் வெற்றிபெற வைக்க உழைப்போம்.

“ஐக்கியம், ஒற்றுமை...” என்ற தலைப்புகளில் பேசும், எழுதும் பாரம்பரிய மற்றும் சமூக ஊடக நண்பர்கள் பலவேளைகளில் இந்த அடிப்படை உண்மைகளை அறிந்து அதை பாராட்டி, தட்டிக்கொடுத்து மகிழ மறக்கின்றனர்.

ஆகவேதான் இந்த சர்ச்சை சத்தத்தில், இந்த அடிப்படை உண்மைகளை மூழ்கடித்து விட வேண்டாம் என மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

இதை பூதாகரமாக்கி அதில் குளிர்காய பிற்போக்கு மற்றும் முதுகில் குத்தும் துரோக நரிகளின் கும்பல்கள் நாக்கை தொங்கப்போட்டு கொண்டு காத்து நிற்கின்றன என்ற இருண்ட உண்மையையும், இந்த முற்போக்கு கூட்டணியின் தலைவன் என்ற முறையில் இங்கே ஞாபகப்படுத்துகிறேன்.

இந்த சர்ச்சை மற்றும் விவாதம் இங்கே இத்துடன் முடிகிறது. நன்றி.

எம் மொழி, இனம், நாடு, அரசியல் இயக்கம்... இவற்றை எமது தாயாக நாம் பார்க்கிறோம். ஆகவே எம் தாயை காப்போம்!

<மனோ கணேசன்-தலைவர்-தமிழ் முற்போக்கு கூட்டணி>

கருத்துகள் இல்லை: