தினத்தந்தி : மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் சட்டசபையில்
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். எனவே அவரது தலைமையிலான காங்கிரஸ்
அரசு தப்புமா? என்பது இன்று தெரிந்துவிடும்
போபால்,
மத்திய பிரதேச மாநில அரசியலில்
ஏற்பட்டு வந்த பரபரப்பு இன்று (திங்கட்கிழமை) உச்சக்கட்டத்தை எட்டி
உள்ளது.முதல்-மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிற
அந்த மாநிலத்தில், அந்த கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிர்
ஆதித்ய சிந்தியா கடந்த 10-ந் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
அவர் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அந்தக் கட்சியில்
சேர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக அவர்கள் கவர்னருக்கும், சபாநாயகருக்கும் கடிதங்கள் அனுப்பி வந்தனர். 230 இடங்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் என 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அந்தக் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் அரசு, சிறுபான்மை அரசாக மாறியது. காங்கிரஸ் அரசு, சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சூழல் உருவானது.
குதிரைப்பேரம்
நடைபெறாமல் தடுக்கிற வகையில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான
பாரதீய ஜனதா கட்சியும் அதிரடி நடவடிக்கையில் இறங்கின. பாரதீய ஜனதா
எம்.எல்.ஏ.க்கள் 10-ந் தேதி இரவோடு இரவாக அந்தக் கட்சி ஆட்சி செய்யும்
அரியானா மாநிலம் குருகிராமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அதேபோன்று
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 92 பேரும், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு
அளித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும், அந்தக் கட்சி ஆட்சி
செய்யும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு 11-ந் தேதி அனுப்பி
வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், கவர்னர் லால்ஜி
தாண்டனை முதல்-மந்திரி கமல்நாத் 13-ந் தேதி சந்தித்து பேசினார். அதைத்
தொடர்ந்து முதல்-மந்திரி கமல்நாத், 16-ந் தேதி (இன்று) சட்டசபையை கூட்டி
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்
என்று கவர்னர் லால்ஜி தாண்டன் உத்தரவிட்டார். சட்டசபையில் இன்று நம்பிக்கை
வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக ஜெய்ப்பூர் சென்றிருந்த
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று போபாலுக்கு விமானம் மூலம் திரும்பினர்.
அவர்கள் தத்தமது வீடுகளுக்கு செல்லாமல் போபாலிலேயே தங்கியுள்ளனர்.
இதே
போன்று அரியானா மாநிலம், குருகிராமில் முகாமிட்டிருந்த பாரதீய ஜனதா
எம்.எல்.ஏ.க்களும் இன்று அதிகாலை போபால் திரும்பினர். 5 நாட்களுக்கு
பிறகு பாஜக எம்.எல்.ஏக்கள் அனைவரும் மாநிலம் திரும்பியுள்ளனர். பாஜக
எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை பாரதீய ஜனதா தலைமை கொறடா நரோத்தம் மிஷ்ரா,
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அனைவரும் தவறாமல் சபைக்கு வர வேண்டும் என்று
உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஆளும் காங்கிரஸ் கட்சியும் தனது எம்.எல்.ஏ.க்கள்
அனைவரும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கண்டிப்பாக சபையில் ஆஜராகி இருக்க
வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய
பிரதேச மாநில சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு கூடுகிறது.
முதலில் கவர்னர் லால்ஜி தாண்டன் உரை நிகழ்த்துவார். மத்திய பிரதேச மாநில
சட்டசபையில் மொத்த இடங்கள் 230 ஆகும். 2 இடங்கள் காலியாக உள்ளன. 6
மந்திரிகள் ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டதால் சபையின் மொத்த பலம் 222 ஆக
குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படுகிறது. 6
மந்திரிகள் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரசின் பலம் 114-ல் இருந்து 108 ஆக
குறைந்துள்ளது.
காங்கிரஸ் அதிருப்தி
எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவு எடுக்காத
நிலையில், இன்று என்ன நடக்கும் என்று எளிதில் கணித்து விட முடியாத சூழல்
உள்ளது. கமல்நாத் அரசு பிழைக்குமா அல்லது கவிழுமா என்பது ஓட்டெடுப்புக்கு
பின்னர்தான் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக