புதன், 18 மார்ச், 2020

ஸ்பெயினில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேசிய மயமாக்கம்... கொரோனா .. வீடியோ


மின்னம்பலம் : கொரோனா வைரஸ் எதிரொலியாக ஸ்பெயினில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு மீண்டும் மருத்துவமனைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் முதன் முறையாக இதுபோன்ற ஒரு முக்கிய நடவடிக்கைகள் ஸ்பெயினில் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் பிரதமரான பெட்ரோ சன்செஸின் அறிவுறுத்தலின்படி, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பின் காரணமாக ஸ்பெயின் நாட்டின் மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசின் கட்டுப்பாட்டுக்குள் ,கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் சல்வடார் இல்லா, வெளியிட்டுள்ளதாக தி கார்டியன் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மருத்துவர்கள் மட்டுமல்லாமல், மருத்துவம் படித்து வரும் நான்காம் ஆண்டு மாணவர்களும் உதவிக்காக அழைக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ள சல்வடார் இல்லா, மருத்துவம் சார்பான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுடன் அரசு தொடர்பில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் சீனாவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. ஸ்பெயினில் இதுவரை 11,826 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள், மேலும் 533 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து கடந்த வாரம் கொரோனா பாதிப்பை ஸ்பெயின் அரசு தேசிய பேரிடராக அறிவித்தது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டதுடன் அவசியம் இல்லாமல் நாட்டு மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில், உணவகங்கள், மதுவிடுதிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. உணவு மார்கெட்டுகள் மற்றும் மருந்தகங்களைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் மருத்துவத் துறையினருக்கு தங்கள் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்கள் மற்றும் பால்கனிகளிலிருந்து கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் திட்டமிடப்பட்டு ஒரே நேரத்தில் அனைவரும் கைகளைத் தட்டிய வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கவிபிரியா
-பவித்ரா குமரேசன்

கருத்துகள் இல்லை: