சனி, 21 மார்ச், 2020

தமிழக எல்லைகள் மூடல் - நாளை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு!

தமிழக எல்லைகள் மூடல் - நாளை பேருந்துகள் இயங்காது: தமிழக அரசு!மின்னம்பலம் : தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை எல்லைப் பகுதிகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுபோன்று, பிரதமர் மோடி அறிவித்தபடி, சுய ஊரடங்கைப் பின்பற்றும் வகையில் நாளை ஒரு நாள் தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. குறிப்பாகத் தமிழகத்தில் மற்ற மாநிலங்களிலிருந்து வரும் ரயில் மற்றும் பேருந்து பயணிகளும் தீவிர மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தின் 3 எல்லைப் பகுதிகளை மூடுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் கீழே குறிப்பிட்டுள்ள வாகன போக்குவரத்து தவிர, இதர போக்குவரத்துக்காக மார்ச் 22ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பால், காய்கறிகள், பெட்ரோல், சிலிண்டர் ஆகிய அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால் இறப்பு போன்ற காரணங்களுக்காகப் பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் அனுமதிக்கப்படும். பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்.
எனினும் இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர், வாகனங்களும் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பேருந்துகள் இயங்காது
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், நாளை சுய ஊரடங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ”நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் எதுவும் இயங்காது. மெட்ரோ ரயில்களும் அன்றைய தினம் இயங்காது நாளை மாலை 5 மணிக்குப் பிரதமர் தெரிவித்துள்ளபடி, தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கவிபிரியா

கருத்துகள் இல்லை: