செவ்வாய், 17 மார்ச், 2020

தமிழ்நாட்டுல இருந்து பதவி கேட்டு வராதீங்க... உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட... எச்சரித்து அனுப்பிய அமித்ஷா!

bjp
bjpnakkheeran.in - இரா. இளையசெல்வன் : தலைவர் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவராக தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகனை நியமித்திருக்கிறார் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!
bjpதலைவர் நியமிக்கப்பட்டதில் நிம்மதிப் பெருமூச்சு கமலாலயத்தில் எழுந்தாலும் அப்பதவியை எதிர்பார்த்திருந்த சீனியர் தலைவர்களுக்கு ஏக வருத்தம். தங்களது ஆதரவாளர்களிடம் கோபத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர்.
தமிழக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் கவர்னராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி காலியாகவே இருந்தது. இந்த பதவியைக் கைப்பற்ற முன்னாள் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, கேசவ விநாயகம், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், முருகானந்தம், கருப்பு முருகானந்தம், கே.டி.ராகவன் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட பெருந்தலைகள் முட்டி மோதின.


புதிய தலைவரை நியமிப்பது குறித்து முன்னாள் தேசிய தலைவர் அமித்ஷாவும் இன்னாள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தினர். தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குறித்த ஒரு பட்டியலை தயாரித்து அவர்களைப் பற்றிய முழு ரிப்போர்ட் வேண்டும் என மத்திய உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா. பட்டியலில் இருந்தவர்களைப் பற்றி விசாரித்த உளவுத்துறை, ஒருவரை பற்றிக்கூட நல்ல ஒப்பீனியனை தரவில்லை. ஒவ்வொருவர் மீதும் பல புகார்களை தெரிவித்திருந்தது. இதனால் தமிழக தலைவர்கள் மீது அமித்ஷாவுக்கு நம்பிக்கை இல்லை.

இருப்பினும் தமிழக தலைவர்கள் ஒவ்வொருவரும் அவரவரின் டெல்லி லாபியைக் கொண்டு முயற்சித்தனர். இதனையறிந்த அமித்ஷா, தமிழகத்திலிருந்து பதவி கேட்டு யாரும் டெல்லிக்கு வரக் கூடாது என எச்சரித்திருந்தார். யார் மீதும் நம்பிக்கை இல்லை; ஒருவர் கூட மக்களுக்கு நெருக்கமானவராக இல்லை என்கிற வருத்தத்தில் தேசிய தலைவர்கள் இருந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. அதேசமயம், பல மாதங்களாக தலைவர் இல்லாததால் கட்சிப் பணிகள் முடங்கி கிடக்கிறது என்கிற புகார்கள் பா.ஜ.க. தலைமையகத்தை முற்றுகையிட்டதை உணர்ந்து, டெல்லி தேர்தல் முடிந்ததும் தலைவர் நியமிக்கப்படுவார் என்கிற உறுதியை தமிழக பா.ஜ.க.வினருக்கு கொடுத்திருந்தார் ஜே.பி.நட்டா! ஆனால், டெல்லி தேர்தல் முடிந்ததும் வெடித்த கலவரத்தால் தமிழக பா.ஜ.க. தலைவர் விவகாரம் கிடப்பில் விழுந்தது. இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை நடந்த ஆலோசனையில்தான் எல்.முருகனை தேர்வு செய்திருக்கிறார்கள். ஜே.பி.நட்டாவுக்கு மிக நெருக்கமானவர் முருகன்.

"ராஜ்யசபா எம்.பி.க்களாக கடந்த முறை அ.தி.மு.க.வும், தற்போது தி.மு.க.வும் அருந்ததியர் சமூகத்திற்கு முக்கியத்துவம் தந்து கொங்கு மண்டலத்தை மையப் படுத்தி அரசியல் செய்வதால் பா.ஜ.க.வும் அருந்ததியருக்கு வாய்ப்பளிக்கும் முகமாக முருகனை தேர்வு செய்திருக்கிறது. தலித் சமூகத்திற்கு பா.ஜ.க. எதிரி என்பது போல தமிழகத்தில் சித்தரிக்கப்பட்டு வருவதை உடைப்பதற்காகவும், தலைவர் பதவியையே ஒரு தலித்திற்கு கொடுத்துள்ளோம் என்பதை உணர்த்தவும்தான் இந்தத் தேர்வு'' என்கின்றனர் பா.ஜ.க. தலைமைக்கழக நிர்வாகிகள்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த எல்.முருகன் சட்டப்படிப்பில் முதுகலை படித்திருக்கிறார். மனித உரிமைகள் சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் முருகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். தமிழிசையின் சிபாரிசில்தான் தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியும் முருகனுக்கு கிடைத்திருக்கிறது. முரசொலி நிலம் விவகாரம் தொடர்பாக ஆணையத்திலிருந்து தி.மு.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பியது இந்த முருகன்தான்.
அவரிடம் நாம் பேசியபோது, "தொண்டர்களில் ஒருவனாக இருந்து தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்ப்பதே என்னுடைய தலையாய பணி. தலைவர் பதவியை அதிகாரமாக நினைக்காமல் சேவைக்கான வாய்ப்பாகவே கருதுகிறேன்'' என்கிறார்.

முருகன் நியமனம் குறித்து சீனியர் தலைவர்கள் சிலரிடம் பேசிய போது, "அ.தி.மு.க.வில் ராஜ்யசபா சீட் ஜி.கே. வாசனுக்கு தரப்படுகிறது. இதற்கு முழு காரணம் எங்களின் தேசிய தலைமை தான். அமித்ஷாவின் சிபாரிசு இல்லாமல் வாசனுக்கு சீட் கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது. இந்த வாய்ப்பை தமிழக பா.ஜ.க.வினருக்கு தந்திருக்க லாமே! கட்சி பணிகளை செய்வ தில்லை, கட்சியை வளர்க்கவில்லை என எங்களை குறை சொல்லிக்கொண்டே இருக்கும் தேசிய தலைமை, கிடைக்கிற வாய்ப்புகளையும் யாருக்காகவோ எதற்காகவோ ஒதுக்கினால் எங்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

எங்களைப் பற்றி சிந்திக்காத போது கட்சியைப் பற்றி நாங்கள் எப்படி சிந்திக்க முடியும்? நாடு முழுக்க ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை முன்னிறுத்தி விட்டு, தமிழகத்தில் ஒரு ஊழல் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து வருவதை மக்கள் ரசிக்கவில்லை. பா.ஜ.க.வை பற்றி மக்கள் கோபம் காட்டுகிறார்கள். அப்படியிருக்க, கட்சியை எப்படி வளர்க்க முடியும்?

ராஜ்யசபா சீட்டில் என்ன தவறுகளை செய்திருக்கிறதோ அதேதான் தலைவர் நியமனத்திலும் செய்திருக்கிறது எங்கள் தலைமை. ஒரு பொறுப்பான பதவியிலிருப்பவரை தலைவராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? மக்களுக்கு அறிமுகமில்லாத நபரை நியமித்து கட்சியை எப்படி வளர்க்கப் போகிறார்கள்? தெரியவில்லை. ஆக, முருகனின் நியமனம் பல விதங்களிலும் சீனியர்களி டம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது'' என்கின்றனர் மிக அழுத்தமாக. புதிய தலைவரின் செயல்பாடுகளில் இருக்கிறது பா.ஜ.க.வின் இமேஜ்.
<

கருத்துகள் இல்லை: