வெள்ளி, 26 ஜூலை, 2019

கர்நாடகத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு வாய்ப்பு?

தினமணி : பெங்களூரு: மஜத மற்றும் காங்கிரசின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 16 பேரின் நிலை குறித்து சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை, சட்டசபையை முடக்கிவைத்து, சில மாதம் கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பாக கர்நாடக மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் மதுசூதனன் கூறுகையில், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் குறித்து சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை, சட்டசபையை முடக்கி, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி கவர்னர் பரிந்துரை செய்யலாம். இந்த சூழ்நிலைகளில், நாங்கள் ஆட்சி அமைக்க அவசரப்பட மாட்டோம்.
அவர்களின் ராஜினாமா ஏற்கப்படும் வரை சட்டசபையின் பலம் , நியமன எம்எல்ஏ.,வை சேர்த்து, 225 ஆக இருக்கும். பெரும்பான்மைக்கு தேவை 113 எம்எல்ஏக்கள். நாங்கள் ஆட்சியமைத்த பின்னர், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டால், எங்களிடம் சுயேட்சைகளை சேர்த்து 107 பேரின் ஆதரவு தான் இருக்கும். பெரும்பான்மைக்கு 6 பேரின் ஆதரவு இன்னும் தேவை.

அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால் அல்லது தகுதிநீக்கம் செய்யப்பட்டால், சட்டசபை பலம் 210 ஆக குறைந்துவிடும். பெரும்பான்மைக்கு 106 பேர் ஆதரவு தேவை. சுயேட்சை ஆதரவுடன் நாங்கள் பெரும்பான்மை பெற்று விடுவோம். சபாநாயகர் மற்றும் சுப்ரீம் கோர்ட் முடிவு எடுக்க காலதாமதம். என்பதால், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் பரிந்துரை செய்யலாம். நாங்கள் ஆட்சி அமைக்கும் வரை இது தொடரும். நாங்கள் மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.




இதனிடையே, கொறடா உத்தரவை மீறியதற்காக, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யும் படி மஜத மற்றும் காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என பா.ஜ.,வால் கணிக்க முடியவில்லை. ராஜினாமா கடித விவகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகர் காலம் தாழ்த்தினால், அதிருப்தியாளர்கள் சுப்ரீ்ம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: