செவ்வாய், 23 ஜூலை, 2019

ஹிமா தாஸ் 19 நாள்களில் 5-வது சர்வதேச தங்க பதக்கங்களை வென்ற வீராங்கனை

vikatan.com : தினேஷ்
ராமையா : இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ்,
சர்வதேச தடகளப் போட்டிகளில் கடந்த 19 நாள்களில் 5-வது தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
செக் குடியரசின் நேவே மஸ்டோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியின் 400 மீட்டர் பிரிவில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 400 மீட்டர் பிரிவில் நடந்த போட்டியில், முதுகுவலியால் பந்தய தூரத்தைக் கடக்க சிரமப்பட்டார் ஹிமா தாஸ். அதன்பின்னர், தற்போதுதான் முதல்முறையாக 400 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், ஹிமா தாஸ் போட்டி தூரத்தை 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருக்கிறார். இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளின்போது, இதே தூரத்தை 50.79 விநாடிகளில் கடந்தது ஹிமா தாஸின் பெஸ்ட் டிராக் ரெக்கார்டாக இருந்துவருகிறது. இதன்மூலம் அவர், சர்வதேச தடகளப் போட்டிகளில் கடந்த 19 நாள்களில் 5-வது தங்கம் வென்று சாதித்திருக்கிறார்.


போலந்தில், கடந்த 2-ம் தேதி நடைபெற்ற Poznan Athletics Grand Prix சர்வதேச தடகளப் போட்டியின் 200 மீட்டர் பிரிவில் கலந்துகொண்ட அவர், 23.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதல் தங்கம் வென்றார். இரண்டாவதாக, போலந்து நாட்டில், கடந்த 7-ம் தேதி நடைபெற்ற மற்றொரு சர்வதேச தடகள போட்டியான Kutno Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வென்றார்.

அதன்பின்னர், செக் குடியரசில், கடந்த 13-ம் தேதி நடைபெற்ற Kladno Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றார். அதேபோல், கடந்த புதன்கிழமை நடைபெற்ற Tabor Athletics Meet-ன் 200 மீட்டர் பிரிவிலும் அவர் தங்கம் வென்றார்.

இந்த மாதத்தில் மட்டும் 4 தங்கப் பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், செக் குடியரசில் நேற்று நடைபெற்ற போட்டியின் 400 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டு தனது 5-வது தங்கப் பதக்கத்தை வென்று சாதித்திருக்கிறார், இந்த 19 வயது அஸ்ஸாம் மாணவி. `திங் எக்ஸ்பிரஸ்' (Dhing Express) என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் ஹிமா தாஸுக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பாராட்டு தெரிவித்துவருகின்றன</

கருத்துகள் இல்லை: