திங்கள், 22 ஜூலை, 2019

அரசு நீட் பயிற்சி: ஒருவருக்கு கூட சீட் கிடைக்கவில்லையா?

அரசு நீட் பயிற்சி: ஒருவருக்கு கூட சீட் கிடைக்கவில்லையா?மின்னம்பலம் : அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்ற தகவலுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறி அதனை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இருப்பினும் மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவில்லை. இதனையடுத்து, நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்த 19,355 மாணவர்களில் 2 ஆயிரம் பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் அவர்களில் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்கவில்லை என்ற செய்தி வெளியானது.

இந்த சூழலில் சென்னை ராயபுரத்தில் இன்று (ஜூலை 22 ) நடைபெற்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர், “இந்த ஆண்டுதான் அரசின் சார்பில் நீட் தேர்வுக்காக பயிற்சி அளித்திருக்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் நீட் தேர்வு தேர்ச்சி சதவிகிதம் உயரும். அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற இரண்டு மாணவர்களுக்கு இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. அவர்களின் பட்டியலை வேண்டுமானாலும் தருகிறேன். சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஆகவே, யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.
அண்மையில் மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, “இந்த வருடம் தேர்வு எழுதிய 13 லட்சம் மாணவர்களில் 6 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர். அந்த 6 லட்சம் மாணவர்களும் நீட் கோச்சிங் சென்டருக்கு சென்று படித்தே தேர்ச்சியடைந்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் அரசு நீட் தேர்வு மையத்தில் படித்த இருவருக்கு மட்டுமே மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: