வெள்ளி, 26 ஜூலை, 2019

இனி தவறு செய்யமாட்டோம் ரவுடி மாணவர்கள் உறுதிமொழி

இனி தவறு செய்யமாட்டோம்: ரூட் தலைகள் உறுதிமொழி!  மின்னம்பலம்:  சென்னையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரூட் தல எனப்படும் மாணவர்கள் இன்று (ஜூலை 26) காவல்துறை அதிகாரி முன்னிலையில் ’இனி நாங்கள் தவறு செய்யமாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்றனர். இதுதொடர்பான வீடியோவை காவல் துறை வெளியிட்டுள்ளது.
சென்னை ரூட் தல பெயரில் கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வன்முறைகளில் ஈடுபட்டு வருவது பேருந்து ஓட்டுநர்களுக்கும் , பொதுமக்களுக்கும் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காவல் துறையினர் நேற்று பச்சையப்பன், மாநில, நியூ கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகச் சென்னையில் 90 ரூட் தலைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இந்த மாணவர்களின் விவரங்களைச் சேகரித்த போலீசார் அவர்களை அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். இந்நிலையில் இன்று அந்த மாணவர்கள் காவல் துறை முன்பு உறுதிமொழி ஏற்றனர். அம்பத்தூர் காவல் துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், ”இனி எந்த விரும்பாத செயல்களும் செய்யமாட்டோம். எங்கள் பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம் தவறினால் சட்டப்படியான நடவடிக்கைக்குக் கட்டுப்படுவோம் என்று உறுதியளிக்கிறோம்” என ஒரேகுரலில் உறுதிமொழி ஏற்றனர். இதைத்தொடர்ந்து பிரமாணப் பத்திரம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, இனி வன்முறைகளில் ஈடுபடும் மாணவர்கள் ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தலையோ, ஆபத்தையோ ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால், ரயில்வே சட்டப்படி கைது நடவடிக்கை தொடரும் என, ரயில்வே பாதுகாப்புப்படை டிஐஜி அருள் ஜோதி எச்சரித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: