சனி, 27 ஜூலை, 2019

எடியூரப்பாவுக்கு குமாரசாமி கட்சியினர் வெளியில் இருந்து ஆதரிக்க வேண்டுமாம் .. எம் எல் ஏக்கள் மற்றும்

எடியூரப்பாஎடியூரப்பாவுக்கு குமாரசாமி வெளியில் இருந்து ஆதரவு?வெப்துனியா : கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கு குமாரசாமி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூர்: கர்நாடகாவில் 15 எம்.எல். ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து பா.ஜனதா சட்டசபை தலைவர் எடியூரப்பா நேற்று புதிய முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.
பதவி ஏற்றதும் எடியூரப்பா மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், “நெசவாளர்களின் ரூ.100 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவியுடன் சேர்த்து தலா ரூ.4 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “திங்கட்கிழமை (29-ந்தேதி) சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட முடிவு செய்துள்ளேன். அதன் பிறகு 30-ந்தேதி நிதி மசோதா நிறைவேற்றப்படும்” என்றார்.
இந்த நிலையில் ஆட்சியை பறிகொடுத்த குமாரசாமி நேற்று மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று எம்.எல். ஏ.க்கள் கருத்து தெரிவித்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சில மாறுபட்ட கருத்துக்கள் உருவானது.


மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், “எடியூரப்பாவின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை நாம் ஆதரிக்க வேண்டும். ஆட்சியில் பங்கு கொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரிக்கலாம்” என்று கூறினார்கள்.
இதற்கு சில எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்து விட்டு திடீரென பா.ஜ.க. பக்கம் சாய்ந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்று அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
என்றாலும் பா.ஜ.க. ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிக்க வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானவர்கள் வலியுறுத்தினார்கள்.

சில எம்.எல்.ஏ.க்கள் ஒருபடி மேலே சென்று பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பாரதிய ஜனதா கட்சி அதை ஏற்றுக் கொண்டால் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம் என்றும் அந்த எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த கருத்துக்கு கூட்டத்தில் ஒருமித்த முடிவு உருவாகவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால்தான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு தோல்வி கிடைத்தது. எனவே காங்கிரசுடன் கூட்டணியை தொடரக் கூடாது என்றும் அந்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

எம்.எல்.ஏ.க்களின் மாறுபட்ட கருத்து காரணமாக மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் சந்தித்து பேசலாம் என்று கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் மதசார் பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஜி.டி. தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சிலர் எடியூரப்பா ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை குமாரசாமியிடம் ஒப்படைத்து இருக்கிறோம். அவர் முடிவு எடுத்தால் அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் எழுந்துள்ள இந்த திடீர் கருத்து கர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பையும், அதிரடி மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது

கருத்துகள் இல்லை: