ஞாயிறு, 21 ஜூலை, 2019

NIA என்ஐஏ: திமுகவின் முடிவிலிருந்து வேறுபடும் வைகோ

என்ஐஏ: திமுகவின் முடிவிலிருந்து வேறுபடும் வைகோமின்னம்பலம் : என்ஐஏ சட்ட மசோதாவை திமுக ஆதரித்த முடிவிலிருந்து தான் வேறுபடுவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த 15ஆம் தேதி உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். விவாதத்துக்குப் பிறகு 278 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஓட்டெடுப்பில் என்ஐஏ திருத்த மசோதாவுக்கு ஆதரவாக திமுக வாக்களித்தது. இதையடுத்து, திமுக சிறுபான்மையினருக்கு எதிரான என்ஐஏவை ஆதரித்து வாக்களித்துவிட்டது என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக விளக்கமளித்த மக்களவை திமுக கொறடா ஆ.ராசா, “என்ஐஏ மசோதாவை திமுக ஆதரித்தது குறித்து சிலர் சமூக வலைதளங்களிலும் வெளியிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை அரசியலுக்காகத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். சிலரால் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை எவரும் ஏற்க மாட்டார்கள். திமுகவை சிறுபான்மை மக்களுக்கு எதிரி எனச் சித்திரிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை தாயகத்தில் நேற்று (ஜூலை 20) செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம், என்ஐஏ சட்டத் திருத்த மசோதா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “என்ஐஏ சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக ஆதரவளித்த முடிவிலிருந்து நான் வேறுபடுகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று பதிலளித்தார்.
கவலைப்பட்ட ஸ்டாலின்
முன்னதாக நடைபெற்ற மதிமுக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பேசிய வைகோ, “தொடக்கக் காலங்களில் ஸ்டாலின் என் மீது எவ்வளவு அன்பாக இருந்தாரோ அதே அன்போடு இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். தொகுதிப் பங்கீடு சமயத்தில் மிக முக்கியமான ஒருவர் போல என்னை என் வீட்டில் வந்து சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது, ‘மக்களவைக்கு எத்தனை இடம் என்பதை விடுங்கள். நீங்கள் மாநிலங்களவைக்குச் செல்ல வேண்டும். அந்த இடம் மதிமுகவுக்கு கிடையாது. உங்களுக்குத்தான். நீங்கள் மாநிலங்களவைக்குச் சென்றால் திராவிட இயக்கத்துக்கு நல்லது என்பதால் இதைச் சொல்கிறேன். மேலும், நீங்கள் வேறு யாருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கொடுத்துவிடுவீர்கள் என்ற பயத்தினாலும் சொல்கிறேன்’ என்று என்னிடம் உறுதி வாங்கினார் ஸ்டாலின். ஆனால் சிலர் மாற்று வேட்பாளர் பிரச்சினையில் மதிமுகவுக்கும் திமுகவுக்கும் சிண்டு முடியப் பார்த்தார்கள்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்தவர், “என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்ற சூழ்நிலை உருவானபோது அதற்காக கவலைப்பட்டவர் ஸ்டாலின். அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அப்படி ஒரு சூழ்நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காக இரண்டு நாட்கள் இரவு பகல் தூங்காமல் அவர் என்ன பாடுபட்டார் என்பதும் தெரியும்” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்தவர், தன்னுடைய வற்புறுத்தலின் பேரிலேயே என்.ஆர்.இளங்கோவை நான்காவது வேட்பாளராக ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்ய வைத்ததாகவும் கூறினார்.
மேலும், “திமுக தலைவர் ஸ்டாலின் என் மீது பாசம் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் நம்பிக்கைக்குரிய விதத்தில் செயல்பட்டு வருகிறார்” என்றும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி முடித்தார் வைகோ.

கருத்துகள் இல்லை: