
முருங்கைக்கு இந்தளவுக்கு பில்டப்பு கொடுக்கத் தொடங்கி பதினைந்து
வருடங்களையும் தாண்டிவிட்டது. இப்பவும் அதே விளம்பரங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் பகிர்ந்துகொண்டே இருக்கிறார்கள். உலக சந்தையில் பொடிசெய்யப்பட்ட முருங்கை இலைக்கு பெரிய மவுசு உண்டு. ஆரஞ்சைவிட ஏழு மடங்கு வைட்டமின் C, வாழைப் பழத்தைவிட மூன்று மடங்கு பொட்டாசியம், கேரட்டைவிட நான்குமடங்கு வைட்டமின் A, ஜோகட்டைவிட அதிக கல்சியம், ஸ்பினாச்சை விட அதிக இரும்பு என்றெல்லாம் பகிரப்படுவது சுத்தப்பொய். முருங்கை ஒரு சத்தான கீரைதான். முருங்கையின் தாவரப்பெயர்(Moringaceae) தொடங்கம் பல மொழிகளிலும் தமிழ் சொல் மூலம் பெறப்பட்ட சொற்களே பாவிக்கப் படுவது தமிழுக்கு பெருமைதான். இருந்தும் மீண்டும் ஒருமுறை உறுதியாக சொல்லுகிறேன், மேற் குறிப்பிட்டவாறு முருங்கை பற்றி பகிரப்படும் அத்தனையும் பொய்தான், தயவுசெய்து பொய்களை பரப்பாதீர்கள்.
முருங்கை இலை உண்மையில் சத்துக்கள் நிறைந்த கீரையாக இருந்தாலும் சக கீரை இனங்களோடு ஒப்பிடும்போது பெரிதாக ஒரு விசேசமும் இல்லை.
அவற்றில் Thyme, Mustard greens, Arugula, Basil, புதினா, Peppermint, வெந்தய இலை, கொத்தமல்லி இலை, ஸ்பினாச் போன்ற இலை வகை மரக்கறிகள் முருங்கை இளையைவிட எவ்வளவோ சிறப்பானவை. மலிவாக கிடைக்கும் பருப்புக் கீரை(purslane), பசலிக்கீரை, கங்குங் கீரை, குப்பைக்கீரை, முளைக் கீரை போன்ற கீரைகள்கூட பல இடங்களில் முருங்கை இலையை வென்று விடுகின்றன இருந்தாலும் அவற்றை முருங்கைக்கு சமனானவை என்றே கூறுவேன். நான் இங்கு குறிப்பிட்ட சில இலை வகை உணவுகளில் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான Omega 3 கொழுப்பு உண்டு. அந்த விடயத்தில் முருங்கையின் இடம் பரிதாபத்துக்கு உரியது.
முருங்கை இலையானது நீர்பற்று(78.66% water) கொண்ட இலையாகும். விரைவாக காய்ந்து விடுவதை அவதானித்து இருப்பீர்கள். பால் 88.3%, carrot 83%, orange 86.7% என்னும் அளவில் நீர் பதத்தை கொண்டுள்ளன. நான் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை இலை கறிவகைகளிலும் Thyme தவிர மற்றெல்லாம் தொண்ணூறு வீதம் அல்லது அதற்கும் மேலான நீர் பிடிப்பை கொண்ட இலைகளாகும். ஆகவே ஒன்றை இன்னொன்றோடு ஒப்பிடும்போது நீர் பதம் கருத்தில் எடுக்கப்படல் வேண்டும்.
ஆரஞ்சைவிட ஏழு மடங்கு வைட்டமின் C, வாழைப் பழத்தைவிட மூன்று மடங்கு பொட்டாசியம், கேரட்டைவிட நான்குமடங்கு வைட்டமின் A, ஜோகட்டைவிட அதிக கல்சியம், ஸ்பினாச்சை விட அதிக இரும்புச் சத்து என்றெல்லாம் எப்படி அவர்களால் கதைவிட முடிகிறது என்றால் காய்ந்த முருங்கை இலையை பெருமடங்கு தண்ணீரை கொண்ட உணவுகளோடு ஒப்பிடுகிறார்கள். தண்ணீரை அகற்றும்போது அதில் உள்ள சத்துக்களின் செறிவு அதிகரிக்கிறது. ஆகவே இங்கு முருங்கை இலை என்பது வேறு முருங்கை பொடி என்பது வேறு. அப்படி காயவைத்து தயாரிக்கப்படும் முருங்கை பொடியில் கல்சியம் மற்றும் இரும்பு சத்து ஆகியனவே கருத்தில் எடுக்கக் கூடியவை. ஈரல், சூடை மீன், நெத்திலி, எள்ளு மற்றும் black beans போன்றனவற்றில் கல்சியம் மற்றும் இரும்பு போன்றன மட்டும் அல்லாது இன்னும் பல சத்துக்கள் தேவைக்கு அதிகமாகவே உண்டு. முருங்கையை விட பாலில் உள்ள கல்சியம் இலகுவாக சமிபாடு அடையக் கூடியது. முருங்கையில் உள்ள antinutrients சில சத்துக்களை உறிஞ்சுவதற்கு தடையாகவும் உள்ளது. பால், தயிர் ஆகிய இரண்டு மட்டுமே சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் B12 கிடைக்கும் ஒரே வழி. கடல் உணவுகளிலும் Organ meatகளிலும் தேவைக்கு அதிகமாக B12 உண்டு. ஆகவே நான் இங்கு முடிவாக கூறவருவது முருங்கையிலையையும் பத்தோடு பதினொன்றாக உங்க உணவோடு சேர்த்துக் கொண்டால் போதுமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக