புதன், 13 மார்ச், 2019

கண்கட்டி வித்தைக்காரர் மோடி- குமரியில் தாக்கிய ஸ்டாலின்

கண்கட்டி வித்தைக்காரர் மோடி- குமரியில் தாக்கிய ஸ்டாலின்
மின்னம்பலம் : திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோடு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது,
“பல்வேறு நாடுகளுக்கும் போய் வந்துகொண்டு மோடிதான் ஒளிர்கிறார். இந்தியா இருட்டில்தான் இருக்கிறது. வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி என்றார் மோடி. ஆனால் மோடி காலத்தில் தளர்ச்சி தளர்ச்சி தளர்ச்சியாகவே இருக்கிறது நாட்டின் நிலைமை. மோடி வந்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி வாக்களித்தனர். ஆனால் புதிய வேலைவாய்ப்புகள், திட்டம், தொழிற்சாலை எதுவுமில்லை. கறுப்புப் பணம் ஒழிப்பதுதான் முதல் வேலை என்றார். ஆனால் நல்ல பணத்தை எல்லாம் ஒழித்துவிட்டார்.
கறுப்புப் பணம் எந்த நாட்டில் இருக்கிறது என்பதையாவது சொல்லியிருக்கிறாரா? கண்கட்டி வித்தைக்காரனைப் போல செயல்படுகிறார் மோடி. திருடனைக் கண்டுபிடிப்பதற்காக ஊரில் உள்ள அனைவரையும் கைது செய்து அதில் இருந்து திருடனைக் கண்டுபிடிக்கிறேன் என்கிற அதிபுத்திசாலியாக இருக்கிறார் மோடி.

ரஃபேல் ஊழல் அம்பலமானதும் பொய் என்றார்கள். ஆவணத்தை அம்பலப்படுத்திய இந்து ராம் ஆவனத்தை திருடிவிட்டார் என்கிறார்கள். அவர் மிரட்டப்படுகிறார். அவர் பயப்படவில்லை. ஹிந்து ராமுக்கு திமுக சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி அவர்களே... இந்து, ராம் ஆகிய இரண்டு வார்த்தைகளை வைத்துதான் நீங்கள் வெற்றிபெற்றீர்கள். இப்போது இந்த இரண்டுமே உங்களுக்கு எதிராகப் போய்விட்டது” என்று ஸ்டாலின் பேசும்போது ராகுல் கூர்ந்து கவனித்தார்.
ஸ்டாலினுடைய பேச்சை வரிக்கு வரி ராகுலின் அருகே அமர்ந்திருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி காதுக்குள் மொழிபெயர்த்து சொன்னார்.
தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், “ அடிக்கல் நாட்டு விழா என்றால் ஆட்சிக்கு வந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் நடத்துவார்கள். அதன் பின் திறப்பு விழாக்கள்தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போதுதான் மோடி கடந்த 30 நாட்களில் 155 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்திருக்கிறார் என்று பத்திரிகை செய்தி கூறுகிறார். நரேந்திர மோடி பார்க்கும் ஒரே வேலை அடிக்கல் நாட்டும் வேலைதான்” என்ற ஸ்டாலின் மோடியின் காமராஜர் பாசத்தைப் பற்றியும் பேசினார்.
“மோடிக்கு திடீரென காமராஜரை நினைவு வந்திருக்கிறது. 1966ல் பசுவதை தடைச ட்டம் கோரி சங் பரிவார் டெல்லியில் ஊர்வலம் போகிறார்கள். அன்றைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜரின் வீட்டிலேயே தீவைத்தவர்கள் காமராஜரைப் பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
விபிசிங் பிரதமராக இருந்தபோது, சென்னை விமானநிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டக் கோரிக்கை வைத்து நிறைவேற்றியவர் கலைஞர். காமராஜரின் பிறந்தநாளை கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்தவர் கலைஞர். இப்போது வடக்கே பட்டேல் பெயரைச் சொல்லியும் தெற்கே காமராஜர் பெயரையும் சொல்லி ஓட்டுக் கேட்ட முயசிக்கிறார்கள். மோடியப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஓட்டு வாங்க தங்கள் கட்சித் தலைவர் பெயரைக் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்” என்ற ஸ்டாலின் மாநில அரசான எடப்பாடி அரசையும் கடுமையாகத் தாக்கினார்.
“2004 ஆம் ஆண்டு இதே கூட்டணி 40க்கு 40 இடங்களைக் கைப்பற்றியது. இதே அணி இப்போதும் அதே மாதிரி வெற்றிபெறும். இன்னும் சில வாரங்களில் ஆட்சிச் சக்கரம் ராகுல் காந்தியின் கைகளுக்கு வரும். அப்போது கலைஞர் தன் ஆட்சி சாமானியரின் ஆட்சி என்று கூறியது போல, ராகுல் காந்தியும் சாமானியர்களின் ஆட்சியை நடத்த வேண்டும். நான் ராகுல் காந்தியை மீண்டும் பிரதமராக தமிழகத்தின் சார்பில் முன் மொழிகிறேன். காரணம் அவர் மோடி அல்ல ராகுல் என்பதற்காகவே” என்று முடித்தார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை: