வெள்ளி, 15 மார்ச், 2019

ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது எப்.ஐ.ஆர்.. பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் அரசியல்..

Pollachi Sexual Abuse case: FIR registered against Sabarisan tamil.oneindia.com - veerakumaran. சென்னை: பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின்பேரில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு எதிராக சென்னை போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தால், தமிழகமே கொந்தளித்துப் போயுள்ளது. இந்த நிலையில், தன் மீது திமுக திட்டமிட்டு பழி சுமத்தி வருவதாக சில தினங்களுக்கு முன்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்து இருந்தார்.
ஆனால் இதன் பிறகும் சமூகவலைத்தளங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை தொடர்புபடுத்தி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இது போல சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக ஸ்டாலின் மருமகன், சபரீசன் தகவல் பரப்பி வருவதாக சென்னை காவல் துறையில் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் அளித்தார்.

சபரீசன் தனது தகவல் தொழில்நுட்ப அணி மூலமாக இவ்வாறு புரளிகளை கிளப்பி வருவதாகவும் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்த புகாரின் பேரில் அவருக்கு எதிராக சென்னை போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அரசியல் செய்தால்தான், காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது என்பதால், நாங்கள் இதை அரசியலாக்குவோம் என்று திமுக எம்பி கனிமொழி பொள்ளாச்சியில் நடத்திய போராட்டத்தின்போது பேசியிருந்தார்.
இப்போது சபரீசனுக்கு எதிராக பொள்ளாச்சி ஜெயராமன் புகார் கொடுத்து, அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே இது மீண்டும் அரசியல் போட்டியாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆதாரமில்லாமல் கருத்து தெரிவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: