வெள்ளி, 15 மார்ச், 2019

சவுக்கு : திட்டமிட்டு உக்கிரமாக்கப்படும் இந்து தீவிரவாதம்


அரவிந்த் லிம்பாவலி பேசுவதைக் கேட்டபோது, அவர் எனக்கு ஒரு அர்த்தமுள்ள மனிதராகவே தோன்றினார். என்னுடைய இருளடைந்த நகரமான பெங்களூருவில் நகரமயமாக்கலைக் கொண்டுவருகையில் கட்சி பாகுபாடற்ற ஒரு பொறியாளராகவே எனக்குத் தெரிந்தார். கர்நாடகாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான இவரது ட்வீட்டுகள் அங்கன்வாடிகள் , ஏரிகள், சாலைகள் , பிக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகள் போன்றவற்றை மையமிட்டதாகவே இருக்கின்றன, சட்டமன்றத் தேர்தலின்போது , பாஜகவைச் சேர்ந்த இவர் குப்பை மேலாண்மை, மின்சாரம், கல்வி குறித்த ட்வீட்டுகளை அதிகம் பகிர்ந்துள்ளார் என சுயாதீன ஊடகமான ‘சிட்டிசன் மேட்டர்ஸ்’ ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
எப்படிப் பார்த்தாலும், பொதுவாக அன்புடன் பழகும் தன்மை கொண்ட லிம்பாவலி பொறுப்பான அரசியல்வாதியாகவே தெரிகிறார். ஆனால், ஒருவரின் அறிவும் பொறுப்புணர்வும், பீதி, மனப்பிரமை ஆகியவற்றின் பலிபீடத்தில் காவு கொடுக்கப்படும் காலம் இது.
மார்ச் 1ஆம் தேதி, லிம்பாவலி வழக்கத்திற்கு விரோதமான இந்த ட்வீட்டை வெளியிட்டார்: கடந்த 5 ஆண்டுகளில், மோடி அரசு வெளிநாட்டு எதிரிகளுக்குப் பாடம் புகட்டியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்நாட்டு எதிரிகளை நாம் அகற்ற வேண்டும். அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட தேசத்தை உருவாக்க இது நாம் செய்ய வேண்டிய முக்கியச் செயலாகும்.
#GaddarList(துரோகிகள்) இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்”.
(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: #GaddarListஎன்னும் ஹேஷ்டேகில் பல் துறைகளைச் சேர்ந்ததுரோகிகள்அடையாளம் காட்டப்படுகிறார்கள். இவர்களில் பெரும் அறிஞர்கள், எழுத்தாளர்கள், முக்கியமான ஊடகவியலாளர்கள் ஆகியோர் அடக்கம். இந்த ஹேஷ்டேக் எப்படிச் செயல்படுகிறது என்பதற்கான மாதிரி: https://bit.ly/2J5Uig0.)
பெரும்பாலும் இந்துக் குடும்பங்கள், பள்ளி, கல்லூரி, சமுகம் ஆகிய குழுக்களிடையே செயல்படும் வாட்ஸ் அப் குழுக்களின் மாதிரிகளைப் பார்க்கும்போது இதே உணர்வு வெளிப்படுகிறது: துரோகிகளைப் பிடியுங்கள் என்பதுதான் அவர்களுடைய குரல். இந்த தூரோகிகளில் ஊடகம், எதிர்க்கட்சிகள், முஸ்லிம்கள், குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினர் ஆகியோர் அடங்குவர்.
இத்தகைய கருத்துகள், முன் எப்போதையும்விட இந்து சமூகத்தைத் தீவிரப்போக்குடையதாக மாற்றிவருகின்றன. இது மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இவற்றை எதிர்கொண்டு கட்டுப்படுத்தாவிட்டால், இந்தியாவின் ஒற்றுமையை, பன்முகத்தன்மையை, பல கலாச்சார, பல மதங்கள் சார்ந்த தேசமாகத் தழைக்கும் இந்த நாட்டின் தன்மையை இது கடுமையாகப் பாதிக்கும்.
இந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் தலைவர், மிஷெல் பக்கேலெட், சகிப்புத்தன்மை பரவலாகக் குறைந்துவருவது பற்றிப் பேசியபோது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதன் பிளவுபடுத்தும் அரசியலால் பலவீனமாகும் என்று கூறினார். “சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள் போன்ற வரலாற்றுரீதியாகப் பின் தங்கிய, விளிம்பு நிலைக்கு உள்ளானவர்கள் குறி வைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன’ என்று சிலியின் முன்னாள் அதிபரான மிஷெல் பக்கேலெட் தனது ஆண்டு அறிக்கையில் கூறியிருந்தார். 
அரசியல் ஆதரவு பெற்ற பெரும்பான்மைவாதம்தான் இந்தப் பிளவுபடுத்தும் தன்மையின் மையம். இதுவே வன்முறைப் போக்கு கொண்ட இந்துக் குழுக்களைக் காக்கிறது. தேசியவாதம் எனும் போர்வையில் இந்து தீவிரப்போக்கு விரைவுபடுத்தப்பட்டு, சிறுபான்மையினரையும்,  ஆளும் கட்சியை விமர்சிக்கத் துணிபவர்களையும் தாக்குதவற்கான சாக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 
இந்து தீவிரத்தன்மையின் மனப்பிரமைகள் சில காலமாகவே வெளிப்படையாகத் தெரிகின்றன. அவை வருமாறு:
* படையெடுத்து வந்தவர்கள் இந்து சமூகத்தை அழித்தனர், இது திருப்பிக் கொடுப்பதற்கான நேரம்.
* இந்துக்கள் – கல்வி, பொது, தனியார் வேலைவாய்ப்புகள், நீதி ஆகியவற்றில் முன்னுரிமை பெற்றவர்கள் – இந்தியாவில், பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர்.
* சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் – இந்தியாவின் மிகவும் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் – பல காலமாகத் திருப்திப்படுத்தப்பட்டுவருகின்றனர்…
இதுபோன்ற நம்பிக்கைகள் எல்லாம் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபோது வெளிப்படையாக விவாதிக்கப்படாத உதிரி நம்பிக்கைகளாக இருந்தன. எள்ளி நகையாடப்பட்டன.
இன்று, இந்த வெகுஜன மாயை, குடும்பத்தினர், சகாக்கள், நண்பர்கள் மத்தியில் சகஜமாக இருப்பதாக நான் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாயை சார்ந்த உரையாடல்கள், வாட்ஸ் அப் குழுக்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. என் குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் சார்ந்துள்ள மீடியா குழுமமும் அண்மையில் இந்த மாயையில் நம்பிக்கை கொண்ட தீவிரமான தனிநபர்களைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது.
ஒரே பல்லவி
தீவிரத்தன்மை கொண்ட இந்துக்கள் பொதுவான சில வாதங்களை முன்வைக்கின்றனர். அவற்றில் சில இப்படி அமைகின்றன:
முதலில், அவர்கள் நாடு 70 ஆண்டுகளில் செயல்பட்டதைக் காட்டிலும் இப்போது சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவதாக, இதற்கு மாறான புள்ளிவிவரங்களை அளித்தால், அவர்கள் ஊடகத்தை இனியும் கவனிப்பதில்லை, அவற்றின் மீது நம்பிக்கை இல்லை என்கின்றனர்.
மூன்றாவதாக, மோடி ஆட்சியின் மோசமான அம்சமாக உள்ள சிறுபான்மையினர் மீது அதிகரிக்கும் தாக்குதல், இன்னும் மோசமாக, காஷ்மீர் முஸ்லிம்களுக்கு மேகலாயா கவர்னர் பரிந்துரைத்தது போல, நாஜி ஜெர்மனி உத்திகளை உள்ளடக்கிய, “முஸ்லிம்களை அவர்கள் இடத்தில் வைப்பது” பற்றிய வெளிப்படையான பேச்சைச் சுட்டிக்காட்டுவோமானால். இந்த இடத்தில் தான் அவர்கள் முகமுடி கழன்று விழுந்து, முரட்டுப் பிடிவாதம் வெளிப்படுகிறது. 800 ஆண்டுகளாக நாம் ஆக்கிரமிப்பாளர்களால் அடக்கி வைக்கப்பட்டதற்கு என்ன செய்வது என்று கேட்பார்கள். அல்லது என் நண்பர் ஒருவர் அண்மையில் கேட்டது போல, முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் 70 ஆண்டுகளாக வெளிப்படுத்தும் சகிப்பின்மையை என்னவென்று சொல்வது என்றும் கேட்கலாம்.
இவற்றில் பல கருத்துகள், நாடு தழுவிய வலைப்பின்னலைக் கொண்ட சங் பரிவாரால் உருவாக்கப்பட்டு, ஆயுதமாக்கப்படுபவை. பணம் பெற்றும், பெறாமலும் மேற்கொள்ளும் ஆன்லைன் ட்ரால்களை (இணையப் பரிகாசங்கள், அவதூறுகள்) மேற்கொள்ளும் குழுவினர் “ஐடி செல்” எனக் குறிப்பிடப்படுகிறார்கள். இந்தக் குழு ஒருகாலத்தில் விளிம்பு நிலையில் இருந்து இப்போது மையத்துக்கு வந்துள்ளது. வேகமாக ஆட்களைத் திரட்டி, தீவிரத்தன்மையை விதைக்க எளிதாக இருக்கும் வாட்ஸ் அப் பரப்பில் இந்தக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. கற்பனையான லவ் ஜிகாத் சதி, பசுப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் மீது குற்றம் சாட்டுதல், இன்னமும் எஞ்சியுள்ள சில சுயேச்சையான மீடியா நிறுவனங்கள், பாகிஸ்தானிடம் பணம் பெறும் “தேசவிரோதிகள்” போன்றவற்றை முன்வைத்து “இந்துக்களின்” கவலைகளை இவர்கள் பரப்புகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான பெரும்பாலான ஆதாரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை, திரிக்கப்பட்டவை அல்லது மொத்தமாகப் பொய்யானவை, அதிகம் செய்யாமல் அல்லது சொல்லாமல் இருப்பதற்காக, தாமதமாகச் சொல்வதாக அல்லது சொல்லாமல் இருப்பதாக அல்லது எதையும் செய்யாமல் இருப்பதாக விமர்சிக்கப்படும் பிரதமர் உள்ளிட்ட, ஆளும்கட்சி அரசியல்வாதிகளால் இவை திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. மீடியா தனது பணியைச் செய்திருந்தால் இந்தச் சொல்லாடல் வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால், இந்தியாவின் பெரும்பாலான வெகுஜன மீடியா – ஒரு காலத்தில் இதழியலின் தூணாக இருந்தவை உட்பட – மிரட்டி அமைதியாக்கப்பட்டுவிட்டன அல்லது அவை தங்கள் வணிக, விளம்பர நலனைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அதே நேரத்தில், ப்ரைம்டைம் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள், தேசபக்தியின் பெயரால் வெறியைத் தூண்டும் திரைப்படங்கள், பாடல்கள், கோஷங்கள் ஆகியவற்றால் தேசியவாதம் திட்டமிட்ட ரீதியில் தூண்டிவிடப்படுகிறது. இத்தகைய முயற்சிகளில் பல இந்துத்துவத்தைப் பெருமைப்படுத்துபவை. அல்லது சிறுபான்மையினரை குறிவைப்பவை.
இத்தகையச் சூழலில், உலகின் எந்த பகுதியையும்விட அதிகப் பொய்ச் செய்திகள் உலவும் நாட்டில், உண்மை, நம்பிக்கை, அறிவார்ந்த தன்மை ஆகியவற்றின் வெளிச்சத்தை அணைத்துவிட்டு இருளில் மூழ்குவது எளிதாக இருக்கிறது. இந்த இருளில், மனப் பிரமைகளும் திட்டமிட்ட முயற்சிகளும் எளிதாக ஒன்றாகக் கலந்துவிடுகின்றன. இத்தகைய சூழலில் பொது துவேஷத்தையும் கோபத்தையும் தூண்டிவிடச் சிறு தூண்டுதல் போதுமானது. அதுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது.

இருப்பினும், இந்த இருளை விரட்டலாம், துவேஷ அலையைத் தடுக்கலாம். இதற்கு இந்தியர்கள் – குறிப்பாக இந்துக்கள் – எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். புல்வாமா தாக்குதலுக்குப்பிறகு வட இந்தியாவில், காஷ்மீர் மாணவர்கள், வணிகர்கள் துன்புறுத்தப்படும் வீடியோக்களில் மிகவும் கவலை அளிக்கும் அம்சம் பார்வையாளர்களின் செயல்படாத தன்மைதான். இந்த வாரம் இதற்கு விதிவிலக்காக, காஷ்மீர் பழ வியாபாரி காவிப் படையினரால் தாக்கப்படும்போது, பார்வையாளர் ஒருவர் தலையிட்டுத் தடுத்திருக்கிறார்.
இனியும் நம்பிக்கை உள்ளதா?
அதிக எண்ணிக்கையிலான இந்துகள் சங் பரிவாரின் இந்தத் திட்டமிட்ட சதிக்கு இரையாகியிருந்தாலும், பெரும்பாலானோர் இத்தகைய வன்முறை, முரட்டுப் பிடிவாதத்தை நிராகரிப்பார்கள் என நம்ப விரும்புகிறேன். அரசியல் சாசனம் மற்றும் இந்தியாவின் அடிப்படை கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் கோடிக்கணக்கானவர்கள் இருப்பார்கள் என்றும் நம்ப விரும்புகிறேன். தற்போதைய ஆதாரங்களுக்கு எதிராக, நான் நம்பிக்கை கொள்ளவே விரும்புகிறேன்.
லிம்பாவலி, உள்ளுக்குள் இருக்கும் பகைவர்களை அடையாளம் காண்பது பற்றிக் கூறியபோது, அவருடன் நெருக்கமாகச் செயல்படும் உள்ளூர் குடிமைச் சமூகக் குழுவான ‘ஒயிட்பீல்ட் ரைசிங்’ தீவிர எதிர்வினை ஆற்றியது. “எங்கள் மக்கள் பிரதிநிதி எனும் முறையில், மக்களுக்கு நீங்கள் வெளியிட்டுள்ள வெளிப்படையான மிரட்டல் குறித்து மிகவும் ஏமாற்றம் அடைகிறோம்” என அவர்கள் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தனர். “ஒருவரை #gaddar (துரோகி) ஆக்கும் அம்சங்கள் என்ன என கூற முடியுமா? அது கேள்விகள் கேட்பதா? ஆதாரம் கேட்பதா? தயவுசெய்து தெளிவுபடுத்த முடியுமா?” என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

லிம்பாவலி அளித்த பதில் இதுதான்:
“இந்திய மண்ணில் உள்ள பாகிஸ்தான் ஆதரவாளர்க்ளைக் கண்டறிந்து அகற்றுவதில் என்ன தவறு? நம் எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது முக்கியம்.
என் ட்வீட்டால் ஏன் சிலருக்குப் பதற்றம் எனப் புரியவில்லை.
ஜாமத் இ இஸ்லாமி மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது: இணைப்பு
சட்டமன்ற உறுப்பினர் எதிர்ப்பைக் கண்டு பின்வாங்கவில்லை. ஏனெனில் தான் நடத்தும் இத்தகைய வேட்டையில் தனது ஆதரவாளர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவருக்குத் தெரியும். தனது கட்சியின் ஆதரவு தனக்கு உண்டு என்றும் தெரியும்.  ஆனால் ஒயிட்பீல்ட் ரைசிங் விடவில்லை.
“எனில். ரா, காவல்துறை, ராணுவம் ஆகியவை தன் வேலையைச் செய்யட்டும். அவர்கள் இதில் வல்லுனர்கள். இதைப் பல காலமாகச் செய்துவருகின்றனர். அவர்கள் துரோகிகளின் பட்டியல் கேட்டார்களா? நீங்கள் ஏன் பட்டியல் போடுகிறீர்கள்” என வாதிட்டனர்.
விரைவில் மற்ற உள்ளூர் மக்களும் ஒயிட்பீல்ட் ரைசிங் அமைப்புடன் இணைந்துகொண்டனர். “மக்கள் பிரதிநிதி என்ற முறையில் உங்களுக்கு, நடவடிக்கை எடுப்பதற்கும் தூண்டி விடுவதற்குமான வேறுபாடு தெரியும். உங்கள் ட்விட்டர் கருத்து முதலானவை கூட்டத்தினரைத் தூண்டிவிடுவதாகவே அமையும்” என்று ஒருவர் கூறினார். “உங்கள் வார்த்தைகள் மோசமானவை, நல்ல நோக்கம் அற்றவை” என இன்னொருவர் கூறினார்.
இது போன்ற குரல்களில்தான் பொறுப்பான, மதச்சார்ப்பற்ற தேசமாக இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது. இந்தக் குரல்கள் மேலும் லட்சக்கணக்கில் பெருக வேண்டும்.
சமர் ஹலர்ங்கர்
(சமர் ஹலர்ங்கர், தரவுகள் சார்ந்த லாப நோக்கிலாத பொது நலன் இதழியல் முயற்சியான இந்தியா ஸ்பெண்ட் எடிட்டர். )
நன்றி: தி ஸ்க்ரால்
https://scroll.in/article/915757/by-design-and-delusion-the-project-to-radicalise-hindu-india-gains-momentumதமிழில்: சைபர்சிம்மன்

கருத்துகள் இல்லை: