புதன், 13 மார்ச், 2019

எனக்கு ஒரு சீட்.. செலவு என் பொறுப்பு.. டீல் பேசிய தொழிலதிபர்.. "டீப்" யோசனையில் திருமாவளவன்!

VCK has different plans for 2 seatstamil.oneindia.com - sherlinsekar-lekhaka.: சென்னை: வருகிற லோக்சபா தேர்தலில் ரவிக்குமாருக்கோ வன்னியரசுக்கோ சீட் இல்லையாம். பலே பிளானில் இருக்கிறாராம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் .
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இடங்கள் எது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் சார்பில் சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.
இதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடவுள்ளார். காஞ்சிபுரம் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரவிக்குமார் போட்டியிடவேண்டும் என்று திமுகவும் விரும்பியதாக ஒரு செய்தியும் பரவியது. அதே வேளையில் திருமாவளவனோடு நெருக்கமாக இருக்கும் வன்னியரசும் போட்டியிட கடுமையாக முயற்சித்து வந்தார்.

இந்நிலையில் விழுப்புரம் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்கினால் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படும் என திமுக தரப்பு கருதுகிறது ஏனெனில் அங்கு வன்னியர்களின் வாக்கு வங்கியே வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் திமுகவே இங்கு களமிறங்க முயற்சிக்கிறது. இதனால் திருவள்ளுவர் தொகுதி விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. ஆனால் கடந்த முறை திருவள்ளூரில் தோல்வியடைந்ததால் இப்போது காஞ்சிபுரத்தில் போட்டியிட வி.சி.க எண்ணுகிறது.

நிலைமை இப்படி நீடிக்கையில் விசிகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கும்போதே உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று திமுக வி.சி.கவிடம் கூறியுள்ளது. அப்போது அவர்களிடம் அதற்கு தயக்கம் இருந்ததால் இரண்டு தொகுதிகளின் தேர்தல் செலவுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று திமுக தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் திருமாவளவனும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அரைமனதாக ஒத்துக் கொண்டதாக செய்திகள் வெளியானது.
இதன் பின்னர் சின்னம் தொடர்பாக தொடர்ந்து ஆலோசித்து வந்த விசிக இரண்டு தொகுதிகளுக்கும் பண உதவி கிடைப்பதால் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதே வேளையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் திமுக சார்பில் வென்றதாகத்தான் கருதப்படும் என்று கட்சியினர் திருமாவுக்கு தூபம் போட மறுபடியும் தீவிர ஆலோசனையில் இருந்த திருமாவளவனிடம் பெரும் பணக்காரர் ஒருவர் பேசியுள்ளார்.
திருமாவளவனுக்கு நெருக்கமான அந்த தொழிலதிபர் விசிக தரப்பில் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால் இரண்டு தொகுதிக்குமான முழு செலவையும் தானே செய்வதாக கூறியுள்ளார். இந்த ஆஃபர் திருமாவளவனுக்கு பிடித்துப் போய்விட்டது என்று கூறுகிறார்கள் விசிகவினர். இதனால் தொழிலதிபருக்கு சீட்டை வழங்கிவிட்டு உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல் தனிச் சின்னத்தில் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு திருமாவளவன் வந்துள்ளார். இதன் பின்னர் தேர்தல் ஆணையத்துக்கு தங்களுக்கு தனிச்சின்னம் ஒதுக்கவேண்டும் என்று விசிக கோரியதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட திமுக தரப்பு அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்போது திமுக தரப்பை கோபப்படுத்தி தனது கட்சியினரான ரவிக்குமார் அல்லது வன்னியரசு ஆகியோருக்கு சீட் கொடுக்காமல் தொழிலதிபருக்கு சீட் கொடுப்பாரா அல்லது திமுகவின் நண்பராக இருந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு ரவிக்குமாருக்கு அல்லது வன்னியரசுக்கு சீட் வழங்குவாரா என்பதே திமுகவினர் மற்றும் விசிக தரப்பினரின் கேள்வியாக உள்ளது. என்ன செய்யப் போகிறார் திருமாவளவன்?

கருத்துகள் இல்லை: