வெள்ளி, 15 மார்ச், 2019

ஒரு சென்சார்தான் 2 விமான விபத்துகளுக்கும் காரணம்?! சிக்கலில் போயிங்

விபத்து
போயிங்ம.காசி விஸ்வநாதன் vikatan : இதுவரைக்கும் நடந்த இரண்டு கோர விமான விபத்துக்களுக்குக் காரணம் ஒரே ஒரு மென்பொருள்தான் என்றால் நம்புவீர்களா?<"இந்த ஒரு சென்சார்தான் 2 விமான விபத்துகளுக்கும் காரணம்?! சிக்கலில் போயிங்"விமான தயாரிப்பை பொறுத்தவரை போட்டி என்பது இரண்டே நிறுவனங்களுக்குத்தான். ஒன்று போயிங், மற்றொன்று ஏர்பஸ். உலகமெங்கும் இயங்கும் விமான சேவைகளை வாங்கி வைத்திருக்கும் விமானங்கள் இந்த நிறுவனங்களுடையதுதான். காரணம் இவை தயாரிக்கும் விமானங்களில் இருக்கும் தரமும் கொடுக்கப்படும் கூடுதல் வசதிகளும்தான். ஆனால், தற்போது போயிங் நிறுவனம் இந்த விஷயத்தில் பெரும் சிக்கல் ஒன்றைச் சந்தித்துவருகிறது. உலகம் முழுவதும் 50-க்கும் மேலான நாடுகளில் போயிங் 737 MAX 8/9 ரக விமானங்களைப் பறக்க தற்போது தடைவிதிக்கப்பட்டுள்ளது.
போயிங் நிறுவனத்தின் புதிய ரக விமானங்களான இவை 737 MAX 8 கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இரண்டு கோரமான விபத்துகளைச் சந்தித்துள்ளன. முதல் விபத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் நிகழ்ந்தது. லயன் ஏர் (Lion Air) சேவையின் விமானம் ஜாவா கடலில் விழுந்ததில் 189 பேர் உயிரிழந்தனர். இப்போது இரண்டாவதாக எத்தியோப்பியா நாட்டில் மேலும் ஒரு பயங்கர விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான 737 MAX 8 விமானம் தரையில் மோதி 157 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து விபத்துகள் நடப்பதால் இந்த விமானம் பறக்க பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகம் உலகமெங்கும் எழுந்துள்ளது. முதலில் சீனா இந்த ரக விமானங்கள் தங்கள் வான் எல்லையில் பறக்கக் கூடாதென தடைவிதிக்க இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, நியூஸிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா எனப் பல நாடுகள் இப்போது 737 MAX 8 பறக்கக் கூடாதென உத்தரவிட்டுள்ளனர்.
என்ன மாதிரியான விமானம் இது?
பயணிகள் சொகுசு விமானமான இந்த போயிங் 737 MAX 8 ரக விமானங்களை முதன்முதலில் 2017-ம் ஆண்டு மலிண்டோ ஏர்லைன்ஸ் என்னும் நிறுவனம் வாங்கி பயன்படுத்தியது. 39.2 மீட்டர் நீளம், 12.2 மீட்டர் உயரம், 35.9 மீட்டர் நீள இறக்கைகள் கொண்டுள்ளது இதில் ஒரே சமயத்தில் 210 பயணிகள்வரை இதில் பயணம் செல்லலாம். இதில் LEAP-1B என்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதை CFM international என்ற நிறுவனம் தயாரிக்கிறது. எரிபொருள் சேமிப்புதான் இதன் ஹைலைட். ஒரு விமானத்தின் விலை 121 மில்லியன் டாலர்கள் (இந்தியா ரூபாயில் சுமார் 837 கோடி). இதுவரை 376 737 MAX விமானங்கள், போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன.
எங்கு தவறு நடந்தது?
எத்தியோப்பியா விபத்தைப் பற்றிய விசாரணை முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டு அதில் இருக்கும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இந்த விபத்து நடந்ததற்கு உண்மையான காரணம் என்பது சில நாள்களில் தெரியும். ஆனால், இந்த விபத்துக்கும் கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த விபத்திலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அது என்ன என்று பார்ப்பதற்கு முன் இந்தோனேசியா லயன் ஏர் விபத்து நடந்தது எப்படி என விரிவாகப் பார்ப்போம்.

இந்த விபத்து நடந்ததற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது MCAS என அழைக்கப்படும் Manoeuvring Characteristics Augmentation System தான். இந்த சிஸ்டம் 737 MAX விமானங்களில் ஏற்படும் `Stalling' என்ற பிரச்னையைத் தீர்க்கக் கொண்டுவரப்பட்டது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் இந்த 737 MAX வடிவமைக்கப்பட்டபோது பெரிய இன்ஜின்கள் விமான இறக்கைகளுக்குக்கீழ் பொருத்தப்பட வேண்டியது இருந்தது. இதனால் இடத்துக்காக மற்ற விமானங்களைவிடச் சற்றே மேலே இந்த இன்ஜின்கள் பொருத்தப்பட்டன. இதனால் எரிபொருள் திறன் அதிகரித்தாலும் விமானத்தின் 'nose' என அழைக்கப்படும் பகுதி சற்றே மேல் நோக்கி இருந்தது. இதனால் விமானம் 'stall' ஆகும் ஆபத்து இருந்தது. அதாவது பறக்கும்போது ஓர் அளவுக்கு மேல் விமானம் மேல் நோக்கி இருந்தால் ( 'angle of attack' ஒரு புள்ளியைக் கடந்தால்) பறக்கும் தன்மையை இழந்துவிடும். Angle of attack 15-20 டிகிரியைத் தாண்டினால் இது நடக்கும். இதைத் தடுக்கத்தான் MCAS இதில் சேர்க்கப்பட்டது. இது Angle of attack அதிகமாகும்போது தானாக ஆன் ஆகி விமானத்தைக் கீழ்நோக்கிச் செலுத்தும். இதில்தான் பிரச்னை இருந்திருக்கிறது.
Angle of attack
இந்தோனேசிய விபத்தைப் பொறுத்தவரையில் போயிங் 737 MAX விமானத்தில் இருந்த சென்சார் ஒன்று தேவையில்லாத நேரத்தில் MCAS-ஐ ஆன் செய்துள்ளது. இதனால் விமானி விமானத்தை மேலேற்ற முயற்சி செய்ய இந்த MCAS விமானத்தைக் கீழ் இறக்க முயன்றுள்ளது. இந்த யுத்தத்தில் MCAS வென்று விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தப் புதிய சிஸ்டம் குறித்து போதிய தகவல்களை விமானிகளிடமும் சேவை நிறுவனங்களுடனும் தெரிவிக்கவில்லை எனப் போயிங் மீது ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் பல இருந்துவருகின்றன. Autopilot செயல்பாட்டில் இல்லாதபோதுதான் இவை செயல்பாட்டுக்கு வர வேண்டும். ஆனால், இருக்கும்போதே இவை செயல்பாட்டுக்கு வருகின்றன என விமானிகள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர். இதில் சோகம் என்னவென்றால் இதில் இருக்கும் சென்சார்கள் அவ்வப்போது தவறான தகவல்களைத் தரும் அப்படி நடந்தால் MCAS-ஐ ஆஃப் செய்ய வேண்டும் எனப் போயிங் நிறுவனமே எச்சரிக்கை ஒன்றை நவம்பர் மாதம் விடுத்திருந்தது. இப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்ற போயிங்கின் தொனிதான் இன்று உயிர்களை பலிகேட்டிருக்கிறது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரேடார் தகவல்களை வைத்துப் பார்க்கையில் எத்தியோப்பியா விபத்திலும் இந்தோனேசியா விபத்தில் நடந்ததே நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இரண்டுமே டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளன. மேலேறிக் கீழிறங்கிய விதமும் ஒரே மாதிரியே இருந்திருக்கிறது. இதனால் MCAS தான் இதற்கும் காரணமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால், விசாரணை முழுவதுமாக முடிந்தால்தான் தெளிவான தகவல்கள் வெளிவரும்.
இந்தோனேசிய விபத்துக்குப் பிறகு, இதைப் போன்று மீண்டும் நடக்காமல் இருக்க ஒரு சாப்ஃட்வேர் அப்டேட் விரைவில் வழங்கப்படும் என்று போயிங் கூறிவந்தது. ஆனால், அதற்குள் அடுத்த விபத்தும் நிகழ்ந்துவிட்டது. இதற்காக முழுதாகக் கணினிகள்தான் காரணம் என பொதுவாகக் கூறிவிட முடியாது. 1977-ல் மில்லியனில் 4 விபத்துகள் நடந்த நிலை இன்றைய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மில்லியனில் 0.4 ஆகக் குறைந்துள்ளது. டேக்-ஆஃப், லேண்டிங் என இரண்டையும் சுயமாக செய்யும் அளவுக்கு இவை இன்று வளர்ந்துள்ளன. ஆனால், புதிய புதிய ஆட்டோமேஷன்கள் செய்யும்முன் போதிய சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதுதான் முக்கிய கேள்வியாக இருக்கிறது.  
அடுத்துவரும் அப்டேட்டையாவது அவசர அவசரமாக வெளியிடாமல் அனைத்து முறையில் சோதனையிட்டு பின் வெளியிட வேண்டியது போயிங்கின் கடமை. விமானிகளையும் புதிய தொழில்நுட்பங்களுக்கு அந்த நிறுவனம் பழக்கப்படுத்த வேண்டும். இனியாவது பாதுகாப்புக்கு முழுவதுமாக இந்த நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. இந்திய விமான பயணிகளும் பெரிதாக அச்சப்பட வேண்டியதில்லை. இந்த ரக விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மட்டுமே இங்கு வைத்திருக்கிறது. அவற்றையும் பறக்கக் கூடாதென தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது மாற்று விமானங்களை லீஸில் எடுக்கும் முயற்சியில் இருக்கிறது ஸ்பைஸ்ஜெட்.

கருத்துகள் இல்லை: