செவ்வாய், 12 மார்ச், 2019

Full report பொள்ளாச்சி பாலியல் கொடுமை: நடந்ததும் நடப்பதும்!

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: நடந்ததும் நடப்பதும்!மின்னம்பலம் : பொள்ளாச்சியில் இளம்பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.
பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிராஜன் என்ற ரிஸ்வந்த், மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த சதீஷ், பக்கோதிபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகிய நால்வரும் நண்பர்கள். திருநாவுக்கரசு குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணை வீடொன்று சின்னப்பம்பாளையம் ஊஞ்சவேலாம்பட்டியில் உள்ளது. ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகும் பெண்களை, இந்த வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் சபரிராஜன். பொள்ளாச்சி சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பல கல்லூரி மாணவிகளை சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் கும்பல் தனியறையில் அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அதை வீடியோவாக எடுத்து அந்த பெண்களை மீண்டும் மீண்டும் மிரட்டிச் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் 12ஆம் தேதி இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு கல்லூரி மாணவியும் அவரது சகோதரரும் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவியின் சகோதரர் சில நபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டார். அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட நால்வரையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஏ.நாகராஜ் என்பவர் அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக, நேற்று (மார்ச் 11) அதிமுக தலைமை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
எதிர்க்கட்சியினர் போராட்டம்
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ். இந்த அயோக்கியர்கள் பல கல்லூரி மாணவிகளை ஏமாற்றி வீடியோ எடுத்துள்ளனர் என்று தெரிந்ததும் கடந்த மாதம் 26ஆம் தேதியே இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்ததாகத் தெரிவித்தார்.
“பிப்ரவரி 28ஆம் தேதியன்று பொள்ளாச்சியிலுள்ள ஐந்து இடங்களில் தெருமுனை கூட்டம் நடத்தி, பாதிக்கப்பட்டவர்கள் பயப்படாமல் வந்து புகார் கொடுக்க வேண்டும் என்றும், இதனை போலீசார் முறையாக விசாரிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். மார்ச் 2ஆம் தேதியன்று இது குறித்துச் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள் நூறு பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 4ஆம் தேதியன்று அனைத்துக் கட்சியினருடன் திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், 5ஆம் தேதி வாயில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு உதவி ஆட்சியரிடம் பெண் அதிகாரிகளைக் கொண்டு இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனு கொடுத்தோம்” என்று தெரிவித்தார் தென்றல் செல்வராஜ். ஆனால், தங்களது கோரிக்கைகளுக்கு போலீசார் செவிசாய்க்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

“எனக்குத் தெரிய தமிழகத்தில் காலை பத்தரை மணிக்குத்தான் நீதிமன்றம் திறக்கும். அதற்குப் பிறகுதான் காவல் நீட்டிப்புக்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்து வருவார்கள். ஆனால், நேற்று (மார்ச் 11) காலை ஒன்பது மணிக்கே, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் இந்த வழக்கிலுள்ள குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். வழக்குரைஞர்கள், செய்தியாளர்கள் நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பாகவே அவர்களை மீண்டும் கோவை சிறைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். பொள்ளாச்சியின் ஜெயமான அதிமுக பிரமுகரின் மகனுக்கு இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது. அதை மூடி மறைக்கத்தான் போலீசார் தீவிரமாக வேலை செய்வதாகச் சந்தேகப்படுகிறோம்” என்றார் தென்றல் செல்வராஜ்.
மாதர் சங்கம் புகார்
மார்ச் 7ஆம் தேதியே, இந்த வழக்கில் இந்த மாவட்டத்தைச் சேராத ஒரு பெண் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் கோரிக்கை விடுத்ததாகக் கூறினார் கோவை மாவட்ட அனைத்திந்திய மாதர் சங்க செயலாளர் ராதிகா. “இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை வேண்டும். 2012ஆம் ஆண்டு முதல் பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவிகள், பெண்கள் தொடர்பான வழக்குகளை எல்லாம் மறு விசாரணைக்கு எடுக்க வேண்டும். நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இந்த வழக்கை நான்கு நபர்கள் மட்டுமே தொடர்புடைய வழக்காகக் கருதக் கூடாது. இன்னும் பலருக்கு இந்த விவகாரத்தில் நிச்சயமாகத் தொடர்பு இருக்கும்.
இது போன்ற பெண்களுக்கு எதிரான பல்வேறு பாலியல் புகார்களில், ஆளும் கட்சியை சேர்த்த ஒரு எம்பியோ அல்லது எம்எல்ஏவோ குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என காவல் துறை அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தாக வரலாறு இல்லை. இந்த விவகாரத்தில், பொள்ளாச்சி அதிமுக எம்பி மகேந்திரனே நேரடியாகச் சந்தித்து குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என உங்களிடம் மனு கொடுத்திருக்கிறார் என்றால் இதில் அரசியல் பின்புலம் உள்ளது என்று தானே பொருள் என்றும் சொன்னோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு வெளிப்படையான, நேர்மையான விசாரணை நடக்கும் என்று எஸ்பி சொன்னார்.
ஒரு வட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஒருவரைக் கட்சியை விட்டு நீக்க ஒன்றியச் செயலாளர் அறிவிப்பு கொடுத்தாலே போதும். இந்த நாகராஜைக் கட்சியை விட்டு நீக்க முதல்வரும் துணை முதல்வரும் கூட்டாக அறிக்கை வெளியிடும்போதே இதில் அரசியல் உள்ளது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இப்போது உள்ள நிலைமையைப் பார்த்தால், உண்மை வெளியே வர வாய்ப்புகள் இல்லை போலத் தெரிகிறது. நாளை மறுநாள் எங்கள் அமைப்பு மூலமாக உயர் நீதிமன்றத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசெல்ல முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார் ராதிகா.
ஆளும் கட்சி தொடர்பு?
தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு.நாகராஜன் இது பற்றிக் கூறுகையில், “தன்னை கடத்திக் கொண்டுபோய் பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து மிரட்டுவதாகப் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை நான்கு பேர் சேர்ந்து ‘புகாரை வாபஸ் வாங்கு’ என்று கூறி அடித்துள்ளனர். அவர் கொடுத்த புகாரின் பேரில், அதிமுக பிரமுகரான ‘பார்’ நாகராஜன் உட்பட நான்கு பேரைக் கைது செய்து நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். போலீசார் கொண்டு போயிருந்த எப்ஐஆரை பார்த்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரித்துவிட்டு, ‘இது பொய்யாகப் போடப்பட்ட வழக்கு என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் உங்களை ஜாமீனில் விடுகிறேன்’ என்று எல்லோரையும் சொந்த ஜாமீனில் விட்டுள்ளார்.

ஒரு துண்டறிக்கை வெளியிட்டதற்காகவே பல பேரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறை வைக்கத் தெரிந்த போலீசாருக்கு, அப்பாவிக் கல்லூரி மாணவிகளை ஏமாற்றிப் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்துப் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த கொடுங்குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்கள் மீது நீதிபதியே விசாரித்து பெயிலில் விடுமளவுக்கு எளிதான செக்ஷனில் வழக்கு போட்டுள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக இரு நூறுக்கும் அதிகமான பெண்களை இந்த குழு நாசப்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கில் வீடியோ பதிவுகள் உள்ளன. இதில், ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு தொடர்புள்ளது என்ற அச்சம் பொதுமக்களிடையே இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலே தான் போலீசாரின் நடவடிக்கைகள் உள்ளன” என்று தெரிவித்தார்.
குண்டர் சட்டம் பரிந்துரை
நேற்று மாலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன். “பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் பேரில் கடந்த 24ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 25ஆம் தேதி சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு கடந்த 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 வீடியோக்கள் மட்டுமே உள்ளன.
மாணவியை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட நாகராஜ், பொள்ளாச்சி 34ஆவது வார்டு ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்துள்ளார். அவருக்கு ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் தொடர்பு இல்லை” என்று தெரிவித்தார். புகார் அளித்த பெண்ணின் சகோதரரை மிரட்டிய வழக்கு மட்டுமே நாகராஜ் மீது உள்ளதாகக் குறிப்பிட்டார்.
தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை

“கல்லூரி மாணவி பாலியல் சித்திரவதை குறித்த புகாரில் வேறு குற்றவாளிகள் யாரும் இல்லை. இதில் அரசியல் தொடர்பும் இல்லை. இது குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு ஆண்டுகளாக தற்கொலை செய்துகொண்ட பெண்களின் விபரங்கள் குறித்து விசாரிக்கப்படும். முதற்கட்ட விசாரணையிலேயே குற்றவாளிகளிடம் இருந்து தேவையான தகவல்கள் கிடைத்துள்ளன. தேவைப்பட்டால் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார் பாண்டியராஜன்.
கடந்த மார்ச் 5ஆம் தேதி திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டபோது, சில செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் பாண்டியராஜன். அப்போது, “சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் தான் திருநாவுக்கரசுக்குப் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுக்கும் வித்தையைச் சொல்லிக் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். தேவைப்பட்டால், அந்த பெண்ணையும் கைது செய்வோம்” என்று கூறியுள்ளார்.
இதனால், காவல் கண்காணிப்பாளர் பாண்டிய ராஜன் அன்று சொன்னது உண்மையா..? இன்று சொன்னது உண்மையா...? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை: