ஞாயிறு, 10 மார்ச், 2019

அதிமுக. 8 லட்சம் பேருக்கு 500 ரூபாய் = 40 கோடி ! அனைத்து தொகுதிகளுக்கும் இந்தப் பணம் உறுதி

ஓட்டுக்கு எவ்வளவு? கழகங்களின் கரன்சி வியூகம்!மின்னம்பலம் : நீரின்றி அமையாது உலகு என்பது போல கரன்சி இன்றி அமையாது தேர்தல். இன்னும் கொஞ்சம் உடைத்துச் சொல்வதானால், கோடிகளின்றி அமையாது தேர்தல்.
கூட்டணி முடிவு செய்யப்படுவதில் தொகுதிகளை விட அதிக முக்கியத்துவம் கோடிகளுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. கூட்டணி முடிவாகி வேட்பாளர்கள் தேர்வாவது கூட, ‘எவ்வளவு செலவு செய்வார்கள்?’ என்பதைப் பொறுத்துதான். இன்றைய நிலவரத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 50 கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்கள்.
‘உங்கள் வாக்குகள் விற்பனைக்கு அல்ல’ என்று தேர்தல் ஆணையமும், பொது நலன் கருதி பல்வேறு நிறுவனங்களும் விளம்பரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் போக்கும், வாக்குகளுக்கு பணம் வாங்கும் போக்கும் இன்றும் நின்றபாடில்லை.
இந்த அடிப்படையில் கழகங்கள் ஒவ்வொன்றும் வாக்களர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதையும் தேர்தல் வியூகங்களில் முக்கியமான வியூகமாக வகுத்து வைத்துள்ளன.

மக்களவைத் தேர்தலிலும், 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக தனது கூட்டணி வியூகத்தை வகுத்திருக்கிறது. அதேநேரம் பத்து லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் ஒவ்வொரு வாக்குக்கும் பணம் கொடுக்க முடியாது. வாக்குச் சாவடி முகவர்களிடம் அவரவர் பூத்துகளில் நமக்கு உறுதியாகக் கிடைக்கக் கூடிய வாக்குகள், எதிரான வாக்குகள், பணம் கொடுத்தால் நமக்குத் திரும்பக் கூடிய வாக்குகள் என பட்டியலிட்டுக் கொடுப்பார்கள்.
அந்த வகையில் ஒரு தொகுதியில் அதிகபட்சம் 8 லட்சம் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளன கட்சிகள்.
அதிமுக 500+2000
அதிமுகவில் பணத்துக்குப் பஞ்சமில்லை. ஜெயலலிதா இல்லாமல் அதிமுக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் என்பதால் எல்லா வகையிலும் வெற்றிக்கான வியூகங்களை அமைத்து வருகிறது அதிமுக தலைமை. அதில் முக்கியமான வியூகம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதுதான். ஏற்கனவே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடும் தமிழக அரசின் திட்டம் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வாக்காளர்களை கவனிக்கவும் திட்டமிட்டுள்ளது அதிமுக.
அதன்படி மக்களவைத் தொகுதிகளில் ஒரு வாக்குக்கு 500 ரூபாய் வீதம் அளிக்க முடிவெடுத்துள்ளது அதிமுக. 8 லட்சம் பேருக்கு 500 ரூபாய் என்றால் 40 கோடி ரூபாய் வருகிறது. இரட்டை இலை சின்னம் நிற்கும் அனைத்து தொகுதிகளுக்கும் இந்தப் பணம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற இடைத்தேர்தல் 21 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது. இந்தத் தொகுதி வாக்காளர்களுக்கு என கூடுதல் ஆஃபர் அளித்திருக்கிறது அதிமுக. அதாவது அந்த 21 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் வழக்கமான 500 ரூபாயோடு, சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக ஒரு வாக்குக்கு 2 ஆயிரம் ரூபாய் என்று மொத்தம் 2,500 ரூபாய் வழங்க வியூகம் வகுத்து அதற்கான களப் பணிகளும் தொடங்கிவிட்டன என்கிறார்கள் அதிமுகவில்.
திமுக 250
அதிக வருமானம் பெற்ற கட்சிகளில் இரண்டாவது இடம் பெற்ற கட்சி என்று திமுகவைப் பற்றி செய்திகள் வந்தன. ஆனால் கட்சிக்குள் விசாரித்தால் தேர்தல் செலவுக்கும், வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதற்கும் திமுக தலைமை வழக்கம்போலவே இந்த முறையும் தாராளம் காட்டவில்லை என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். இதனால் வேட்பாளர்கள் தலையில்தான் பணச் சுமை வைக்கப்படுகிறது.
அதுவும் சில தொழிலதிபர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சீட் அளித்து அந்தத் தொகுதி மேலும் சில தொகுதிகளின் செலவை தொழிலதிபர்களிடம் வசூலிக்கும் ஃபார்முலாவும் திமுகவிடம் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி திமுகவில் ஒரு ஓட்டுக்கு 250 ரூபாய் என்ற அளவில் இப்போது திட்டமிடப்பட்டிருக்கிறது. வேட்பாளர்களின் வசதிக்கேற்ப இந்தத் தொகை மாறலாம் என்றும் கூறுகிறார்கள். 8 லட்சம் ஓட்டுக்கு 250 ரூபாய் என்று கணக்கிட்டு 20 கோடி ரூபாயை சில குறிப்பிட்ட வேட்பாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு திமுக தலைமை வழங்கும் என்று தெரிகிறது.
அமமுக
டிடிவி தினகரன் மேல் ஏற்கனவே ஆர்.கே.நகர் வெற்றியை இருபது ரூபாய் டோக்கன் கொடுத்துப் பெற்றார் என்ற விமர்சனம் இருக்கிறது. அதை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளுக்கும் செலவு செய்யும் திட்டம் தினகரனிடம் இல்லை என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள் வட்டாரத்தில். 21 சட்டமன்றத் தொகுதிகளில் தீவிரமாகச் செலவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ள தினகரன், மக்களவைத் தொகுதிகளில் தனக்கு சாதகமாகக் கருதும் 18 தொகுதிகளை மட்டுமே குறிவைத்து செயல்படுகிறார்.
அதுவும் அந்த 18 தொகுதிகளில் தனக்கான ஆதரவு அடர்த்தியாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே பணப் பாசனத்தை நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.
எனவே 40 தொகுதிகளிலும் யார், எந்தத் தொகுதியில் நின்றாலும் ஜெயிக்கப் போவது காந்தித் தாத்தாதான் என்பதே வேதனையான கள நிலைமை.

கருத்துகள் இல்லை: