வெள்ளி, 15 மார்ச், 2019

திமுக கூட்டணி: சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு!

திமுக கூட்டணி: சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்பு!மின்னம்பலம் : திமுக கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, முஸ்லீம் லீக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் எந்தெந்தக் கட்சி எந்தெந்த இடங்களில் போட்டியிடுகின்றன என்பதற்கான அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 15) வெளியிட்டார். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, கோவை ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ராமநாதபுரம் தொகுதி அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் தி.நகரில் நடைபெற்றது. அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “முன்னாள் மக்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவருபவருமான பி.ஆர்.நடராஜன் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். எழுத்தாளர் சு.வெங்கடேசன் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியில் போட்டியிடவுள்ளார்” என்று அறிவித்தார். இவர்களுக்கு வாக்காளர்கள் ஆதரவு தந்து வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வேட்பாளர்கள் குறிப்பு
கோவை : பி.ஆர். நடராஜன்
கோவை மக்களவை தொகுதியின் வேட்பாளராக முன்னாள் எம்.பியும், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் (வயது 68) போட்டியிடுகிறார். 1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட பி.ஆர்.நடராஜன் கட்சியின் மாநகர செயலாளராகவும், மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகளும், மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். கட்சியின் முழுநேர ஊழியராக கடந்த 42 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகவும், கோவை மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து தலையீட்டை செலுத்துபவராகவும் பி.ஆர்.நடராஜன் திகழ்கிறார்.
தமிழகத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி மறைந் கே. ரமணி அவர்களது மகள் திருமதி வனஜா இவரது துணைவியார் ஆவார். இவர்களுக்கு ஆர்த்தி, அருணா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
மதுரை: சு. வெங்கடேசன்
தமிழக இலக்கிய சூழலில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுபவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் (வயது 49), மதுரை மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 29 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் உறுப்பினராகவும், 28 ஆண்டுகளாக முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
2011ம் ஆண்டு எழுதிய முதல் நாவலான காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை, உட்பட 16 நூல்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் ஆனந்த விகடன் வார இதழில் 119 வாரம் வெளியான “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற நாவலின் ஆசிரியரும் ஆவார். தமிழ்மொழி தொடர்பான தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்வதில் முதன்மை பங்கு வகித்தவர். தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். கட்சி நடத்திய பல்வேறு மக்கள் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருப்பவர்.மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர். மனைவி பி.ஆர். கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் (தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் இன்று (மார்ச் 15) பிற்பகல் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் முத்தரசன், மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, சுப்பராயன், கோ.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, “திருப்பூர் தொகுதியில் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் கே.சுப்பராயனும், நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் முன்னாள் எம்.பி செல்வராசும் போட்டியிடுவர்” என்று தெரிவித்தார்.
திருப்பூர்: கே.சுப்பராயன்
முன்னாள் எம்.பியான சுப்பராயன், திருப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து 1984, 1996 என இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2004 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2018ஆம் ஆண்டு கோவையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் செயற்குழுவில் மாநிலத் துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார்.
நாகப்பட்டிணம் (தனி) : எம்.செல்வராசு
1989, 96, 98 என மூன்று முறை நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட எம்.செல்வராசு, தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினராக பணியாற்றிவருகிறார். 2009ஆம் ஆண்டு நாகை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ்.விஜயனிடம் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
ராமநாதபுரம்: முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி
ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளராக நவாஸ் கனியை அறிவித்துள்ளார் காதர் மொய்தீன். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் கனி, “ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்பளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ராமநாதபுரத்தைச் சார்ந்தவன். என்னை வெற்றிபெற வைத்தால் மீனவர் பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்வேன்” என்று உறுதியளித்தார். நவாஸ் கனி தமிழகத்தின் மிகப்பெரிய கூரியர் நிறுவனமான எஸ்டி கூரியர் நிறுவனத்தின் தலைவர் ஆவார்

கருத்துகள் இல்லை: