திங்கள், 11 மார்ச், 2019

பொள்ளாச்சி பாலியல் கொடுமை. அதிமுக பின்னணியில் பலர் .. ஓரிருவரை கட்சியில் இருந்து நீக்கி சமாளிக்க முயற்சி

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: அதிமுக பிரமுகர் நீக்கம்!
மின்னம்பலம் :ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகி பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அதிமுக பிரமுகர் நாகராஜைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுக தலைமை.
பொள்ளாச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் என்ற ரிஸ்வந்த். கம்ப்யூட்டர் என்ஜினியரான இவர், ஃபேஸ்புக் மூலமாக அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்களிடம் பழகி வந்துள்ளார். சபரிராஜனின் நண்பர் மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசுவுக்குச் சொந்தமாக சின்னப்பம்பாளையம் ஊஞ்சவேலாம்பட்டியில் பண்ணை வீடு உள்ளது. ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமாகும் பெண்களை இந்த வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் சபரிராஜன். தன்னுடைய மற்ற நண்பர்களான சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த சதீஷ், பக்கோதிபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகியோர் உதவியுடன் ஆபாசப்படம் எடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி அவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 12ஆம் தேதியன்று பொள்ளாச்சி தனியார் கல்லூரி மாணவி ஒருவரை காரில் அழைத்துச் சென்றுள்ளார் சபரிராஜன். பண்ணை வீட்டுக்குப் போகும் வழியிலேயே அவரது நண்பர்களான திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் காரில் ஏறியுள்ளனர். அவர்கள், அந்த மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதை சதீஷ் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ பதிவுகளைக் காட்டி, அந்த மாணவியை அவர்கள் நான்கு பேரும் மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, கடந்த 24ஆம் தேதியன்று அம்மாணவியும் அவரது சகோதரரும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் இது பற்றிப் புகார் கொடுத்துள்ளனர். இதற்கு அடுத்த நாள், அம்மாணவியின் வீட்டுக்குச் சென்றனர் சபரிராஜனின் ஆதரவாளர்கள் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன். புகார் கொடுத்த அம்மாணவியின் அண்ணனனை அடித்து உதைத்துள்ளனர். அங்கிருந்த மக்கள் அவர்கள் நால்வரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். அதில், பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளரான பார் நாகராஜனை மட்டும் போலீசார் விட்டுவிட்டனர். மற்ற மூவரை மட்டுமே கைது செய்தனர். இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மார்ச் 5ஆம் தேதியன்று திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.
பார் நாகராஜனுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி, எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். “உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பெண் அதிகாரியை கொண்டு, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும்” எண்ரூ கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டஸ் செயலாளர் தென்றல் செல்வராஜ் ஆறு கட்டமாகப் போராட்டம் நடத்தினார்.
இவ்விவகாரத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு முயன்று வருவதாக, இன்று கருத்து தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில், அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் ஏ.நாகராஜ் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: