வியாழன், 29 மார்ச், 2018

Facebook என்ற மாயவலை. .. எந்த ஒரு நேர்மையான ஏழை அரசியல்வாதியும் தேர்தலில் ஜெயிக்கவே முடியாத சூழல்

savukkuonline :Jeevanand Rajendran ·: Facebook போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெருவாரியான மக்களின் சந்தேகம் Facebook எப்படி சம்பாதிக்கிறது? எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம் லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது ? ஃபேஸ்புக் எதை வியாபாரம் செய்கிறது, எதை வைத்து லாபம் ஈட்டுகிறது என்பதை அறிந்தீர்கள் என்றார் அதிர்ந்து விடுவீர்கள் நாம் தான் சமூக வலைதளத்தின் வியாபார பொருள், நாம் பகிரும் தகவல்கள், இடும் லைக் ஆகியவைவை தான் அந்த நிறுவனத்தின் வியாபாரம்.
எளிமையாக ஒரு உதாரணத்தை பார்ப்போம், ஒரு 25 வயது திருமணம் ஆகாத  பெண், அவரின் ப்ரொபைல் போட்டோ அவர் சற்றே பருமனாக இருப்பதை தெரிவிக்கிறது. அவர் உடல் எடையை குறைக்கும் விடயங்களை அதிகம் படிக்கிறார், ஆரோக்கியம் சார்ந்த குழுவில் இருக்கிறார் என்று வைத்து கொள்வோம். இந்த தகவலை சந்தைக்கு  விற்பதன் மூலம்  அந்த பெண்ணின் தேவையை அவர் சொல்லாமலே மற்றவர்கள் அறிந்து கொண்டு அவருக்கு ஏற்றவாறு விளம்பரங்கள் அவர் சுவரில் இடம் பெற செய்ய முடியும். உடல்  எடை குறைக்கும் மருந்து, பிட்னஸ் கருவிகள் போன்றவற்றை நேரடியாக விளம்பரம் செய்ய முடியும். 
அல்லது அவர்  நட்பு வட்டத்தில் உள்ள ஒரு நண்பர் அவருடைய நண்பர் இது போன்ற ஒரு எடை குறைப்பு மருந்து /சேவை பயன்படுத்தி அதை புகழ்ந்து எழுதிய விமர்சனத்தை பகிர்ந்தால் அது  இவரின்  சுவரில் வருமாறு பார்த்துக்கொண்டால் அந்த பொருளை வாங்கும் சாத்திய கூறு அதிகம்.
இப்படி நம் தகவல்கள் சந்தைப்படுத்தி லாபம் ஈட்டுவது பொதுவான யுக்தி அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுவே இந்த தகவல்களை பயன்படுத்தி ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடிந்தால் ? ஒரு மிகவும் சக்தி வாய்ந்த நாட்டின் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை நாம் நினைத்தவாறு மாற்ற முடிந்தால் ?  நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறதல்லவா ?
அது நடந்திருக்கிறது அதுவும் அமெரிக்கா, இந்தியா, கென்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் தேர்தல்களில்.
Cambridge Analytica (CA) என்ற நிறுவனம் சுமார் 5 கோடி மக்களின் Facebook தகவல்களை முறைகேடாக பயன்படுத்தி அதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற தகவலை நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது  இணைப்பு
கேம்பிரிட்ஜ் அநலிட்டிக்காவின் பின்னணி 
1993ஆம் ஆண்டு Strategic Communication Laboratories Group (SCL ) என்ற நிறுவனம் பிரிட்டனில் தொடங்கப்பட்டது, அந்த நிறுவனம் அரசாங்கத்திற்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தகவல் தொடர்பு (PR) நிறுவனமாக செயல் பட்டு வந்தது.   பெயருக்கு பொதுத் தொடர்பு நிறுவனம் என்று சொல்லிக் கொண்டாலும் இது போன்ற பி.ஆர் நிறுவனங்களின் பணி லாபி செய்வதே.   தமிழில் சொல்வதென்றால் ப்ரோக்கர் வேலை.
அந்த நிறுவனம் உண்மையில் செய்து வந்த பணி டேட்டா பிரைவசி  சட்டங்கள் வலுவாக இல்லாத கென்யா, கம்போடியா போன்ற நாடுகளில் இவர்களின் மென்பொருளினை வைத்து field trial செய்து வந்தது.  தொடக்கத்தில் மறைமுகமாக இந்த வேலைகளை செய்து வந்த இந்நிறுவனம், பின்னாளில், சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகமாகி, அதை வியாபாரத்துக்கும் மார்க்கெட்டிங் பணிக்கும் பயன்படுத்துவது பரவலாகத் தொடங்கியதும்  உளவியல் போர் மற்றும் உளவியல் சமூக மாற்றம் போன்றவற்றில் கை தேர்ந்தது என்று வெளிப்படையாகவே அறிவித்துக் கொண்டது.
2013ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த Steve Banaon  (டிரம்ப்பின் தேர்தல் பிரச்சார குழு தலைவர் ) அந்த நிறுவனத்தை Mercer என்ற அரசியல் பிரமுகரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். பொதுவாக ஒரு நபரின் வயது, முகவரி , மதம் அவற்றை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு செய்திகளை தயாரித்து அளிப்பது நடைமுறை. ஆனால் முதல்முறையாக அதையும் தாண்டி உளவியல் ரீதியாக அடையாளம் கண்டு, தாங்கள் அடைய வேண்டிய இலக்கிற்காக மக்களை மனோ ரீதியாக தயார் செய்ய முடியும் என்று SCL முன்வைத்த கருத்து அவருக்கு பிடித்துப் போய், 15 மில்லியன் டாலர் முதலீட்டுடன் CA என்ற புதிய நிறுவனத்தை அமெரிக்காவில் கூட்டாக தொடங்குகிறார்கள்.
உளவியல் ரீதியாக ஒருவரை எப்படி அடையாளம் காண்பது
Aleksandr Kogan என்ற ரஷ்ய வழி வந்த அமெரிக்கரை இவர்கள் பயன்படுத்தினர். “This Is My Digita lLife” என்ற Facebook  ஆப்பை இவர் உருவாக்கி சுமார் 7 மில்லியன் டாலர் செலவு செய்து பிரபலப்படுத்தினார். அது ஒரு வினா விடை/ புதிர் விளையாட்டு போன்று வடிவமைக்க பட்ட செயலி.  கேள்விகள் அனைத்தும் உளவியல் சம்பந்தப்பட்டது. இந்த கேள்வி முறையை உளவியல் துறையில்  பொதுவாக OCEAN என்று அறியப்படும் இணைப்பு.  3 லட்சம் அமெரிக்கர்கள் இந்த செயலியை பயன்படுத்தி தங்களை பற்றிய உளவியல் விபரங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இதை தவிர மறைமுகமாக, இந்த செயலியை பயன்படுத்திய நபர்களின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அவர்களின் நண்பர்கள் என நூல் பிடித்து அத்தனை நபர்களின் விபரங்களையும் சேகரித்து உள்ளனர். மொத்தமாக ஒரு நபரை பற்றி 5000 தகவல் புள்ளிகள்  அவர்கள் கையில் இருப்பதாக தெரிவித்தனர்.
பிக் டேட்டாவும், தேர்தலும் 
எந்த ஒரு தேர்தலிலும் ஒரு கட்சிக்கு என்று இருக்கும் பிரதான ஓட்டு வங்கியை பெரிய அளவில் மாற்ற முடியாது ஆனால் ஸ்விங் வோட்டர்ஸ்  தான் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள். அவர்களை அடையாளம் கண்டு செய்ய வேண்டியது இரண்டு
1) அவர்கள் எண்ண ஓட்டத்தை மாற்றும் அளவு தினமும் செய்திகளை, கட்டுரைகளை வாசிக்க செய்வது.
2)  தேர்தல் அன்று அவர்களை ஒட்டு போட செய்வது
உதாரணம் 1:
ஒரு நபர் கேன்சர் நோயால் அவரோ அவரின் குடும்பமோ பாதிக்கப்பட்டிருக்கலாம்.  உணவு பழக்க வழக்கத்தினால் தான் இத்தகைய நோய் ஏற்படுகிறது என்ற எண்ணம் அவரிடம் இருக்கலாம். அவரின் சுவரில் பெரும்பாலும் இயற்கை உணவு பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள் கண்ணில் படுமாறு செய்வது. அதன் பின் ஒரு கட்சி மரபணு மாற்று விதைகளை ஆதரிக்கிறது, அவர்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் உண்டான தொடர்பு போன்ற ஆய்வு கட்டுரைகளை அவர்கள் சுவரில் தெரியுமாறு செய்வது.   இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் அவ்வளவுதான்.  இயற்கை விவசாயமே அழிந்து போய் விடும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது.
உதாரணம் 2:
ஒரு வெள்ளை இன காவலர் கறுப்பினத்தவரை அடித்து கொன்றுவிட்டார் என்று fake news தயார் செய்து ஒரு கறுப்பினர் சுவரில் அந்த செய்தி வரச் செய்யலாம்.
இப்படி தொடர்ந்து ஒரே விதமான எதிர்மறை/பொய் செய்திகள் சமூக வலைத்தளம் மூலம் வந்து கொண்டே இருக்கும். திரும்ப திரும்ப ஒரே சாரம் உள்ள செய்தியை பல்வேறு விதமாக சொல்லிக்கொண்டே இருந்தால், அது ஒரு கட்சியை ஆதரிக்க/எதிர்க்க மனம் நம்மை அறியாமல் தயார் ஆகி விடும்.  நாம் இப்படித் தயார் ஆவதை நாம் உணரவே மாட்டோம்.    நமது ஆழ்மனதில் இது நம்மையே அறியாமல் பதியும்.
இது தவிர ஒரு தொகுதியில்  ஜாதி, மதம், கொள்கை, ஆண் பெண் விகிதாச்சாரம்  போன்றவற்றை அடிப்படையாக கொண்டு மக்களை பிரித்து அடையாளம் கண்டு. அவர்களுக்கு ஏற்றாற் போல் வேட்பாளர் தேர்வு செய்வது , கன்டென்ட் தயாரித்து குழுக்களாக நேரடி பிரச்சாரம் செய்வது என்று வலைத்தளத்திற்கு அப்பார் பட்டும் இந்த வேலையினை செய்யலாம் .
இதன் பின் மிக முக்கியம் தயார் செய்த அவர்களை ஓட்டு போட செய்வது, அந்த குறிப்பிட்ட நாளில் அவர்கள் ஓட்டு சாவடி விபரங்களை தெரிவிப்பது. அவர்கள் நண்பர்கள், பிரபலம்   ஓட்டு போட்டு பகிர்ந்த செய்தியை தெரிவிப்பது. இப்படி peer pressure செய்து ஒருவரை உந்தி ஓட்டு போட செய்வது.
CA மற்றும் இந்தியா 
CA வலைதளத்தில், 2010 பீகார் சட்டமன்ற தேர்தலில் குறிவைத்த 90% தொகுதிகளை வென்றதாக தெரிவித்துள்ளனர்.

அந்த தேர்தலில் JD (U) 115 சீட்டும், பாஜக 91 சீட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
SCL பிரைவேட் லிமிடெட் என்ற ஒரு நிறுவனம் 2011ஆம் ஆண்டு தொடங்கப்படுகிறது.  இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் அலெக்சாண்டர் ஜேம்ஸ் நிக்ஸ் , அலெக்சாண்டர் ஓக்ஸ் , அம்ரிஷ் குமார் தியாகி, அவனீஷ் குமார் ராய் . இவர்கள் யார் என்று பார்ப்போம்

JD (U) வின் மூத்த தலைவர் KC தியாகியின் மகன் தான்  அம்ரிஷ் குமார் தியாகி, இவர் Oveleno Business Intelligence (OVI)என்ற மற்றொரு நிறுவனம் நடத்தி வருகிறார்,  அந்த  வலைத்தளத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் JDU தங்களின் வாடிக்கையாளர்கள் என்று பட்டியல் இட்டு உள்ளனர். அந்த வலைத்தளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இணைப்பு.

அலெக்சாண்டர் நிக்ஸ் CA நிறுவனத்தின் CEO. Channel 4 தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில்  எப்படி லஞ்சம், விலைமாது போன்றவற்றை பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்துவோம் என்று பேசியதை தொடர்ந்து  அவர் பதவி விலகிவிட்டார்.  இணைப்பு
மற்றொரு உரிமையாளர் அவனீஷ் குமார் ராய். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் 1984 முதல் அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். 2009 ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைவர் மகேஷ் சர்மாவிற்காக தேர்தல் வியூகம் வகுத்தார் ஆனால் எதிர்பாராத விதமாக மகேஷ் சர்மா 16000 வோட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
தன் வியூகம் எப்படி தோல்வி அடைந்தது என்று கண்டு பிடிக்க அவர் behavioral dynamics என்ற நிறுவனத்தின் உதவியை  நாடினார்., அந்த நிறுவனத்தின்  உரிமையாளர் நீகேள் ஓக்ஸ் (இவரின் சகோதரர் அலெக்ஸானாடர் ஓக்ஸ்  தான் SCI நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரர்). இவர்கள் ஒரு மாதம் பிஹாரில் தங்கி வாக்காளர்களை பேட்டி எடுத்து அவர்களின் முகபாவங்களை ஆராய்ந்து அவர்கள் கூறியது  உண்மையா/பொய்யா என்று முடிவு செய்து, இந்தியாவில் உள்ள ஜாதி/மத பாகுபாடு தேர்தலில் அதன் பங்கு என்று சகலத்தையும் ஆராய்ந்து  தோல்விக்கான காரணத்தை கண்டு பிடித்தனர்.
அதன் பின்  2011 அவனீஷ் ராய் மற்றும் அம்ரிஷ் தியாகி இருவருக்கும் நிக்ஸ்ஸின் அறிமுகம் கிடைக்கிறது, அப்பொழுது கூட்டாக உருவானது தான் இந்த SCL பிரைவேட் லிமிடெட்.   அவர்கள் இணைந்து 2014 நடக்கவிருக்கும் பொது தேர்தலில் ஏதாவது கட்சியை தங்கள் வாடிக்கையாளர் ஆக்க முடிவெடுத்தனர். நிக்ஸ் காங்கிரஸ் கட்சியை குறிவைக்க தொடங்கினார், ஆளும் கட்சி என்பதால் அவர்களிடம் அதிகம் பணம் இருக்கும் என்ற எண்ணம். காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து தங்களால் அவர்களை ஜெயிக்க வைக்க முடியும் என்று சேல்ஸ் பிட்ச் செய்து வந்தனர்.
இது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணி ஒருவர் இவர்களை சந்திக்கிறார், அந்த பெண்மணி காங்கிரஸ் கட்சி எப்படியாவது தோல்வி அடையவேண்டும் என்று கூறுகிறார். அதற்கான நிதியை குஜராத்தை சேர்ந்த அமெரிக்கர் ஏற்பாடு செய்வதாக கூறுகிறார். இதை NDTV யிடம் ராய் அளித்த பேட்டியில் உறுதி செய்கிறார்


பாஜக இந்த நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறைக்க அவசரம் காட்டுகிறார்கள் ஆனால் வலைத்தளத்தில் உள்ள செய்தியை மாற்றுவது அவ்வளவு எளிது அல்ல.
அம்ரிஸ் தியாகி  இப்பொழுது முடக்கபட்ட வலைதளத்தில் பாஜகவின் மிஷன் 272+ இல் பெரும் பங்கு ஆற்றியதாக கூறுகிறார்.

2014 தேர்தலில் 07820078200 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து உறுப்பினர் சேர்க்கும் திட்டத்தை பாஜக தொடங்கியது நினைவு இருக்கலாம். அப்படி கொடுத்த அனைத்து உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தொகுப்பது , அவர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்து /கட்டுரை பரப்புவது போன்றவற்றை  செய்துவந்துள்ளது.

பெரும்பாலும் இத்தகைய பரப்புரைகள் பாஜக  நேரடியாக செய்யாது.   மாறாக தங்கள் ஆதரவு வலைத்தளம், குழுமம் மூலம் செயல்படுத்தி அதன் உறுப்பினர்கள் மூலம் பரப்பப்படும்.
உயர் சாதி இந்துக்களிடம் கல்வி, வேலையில் ஒதுக்கீட்டால் எப்படி தகுதி இருந்தும் ஒருவருக்கு வேலை கிடைப்பது இல்லை என்றும், நடுத்தர வர்க்க மக்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை மேம்படுத்துவோம் என்றும் ஆட்களை பொறுத்து ஒவ்வொருவரையும்  தயார் படுத்தி வந்தது. அந்த பரப்புரையில் மறைமுகமாக, இடஒதுக்கீடே, கல்வியில் கோட்டியிடும் தன்மையையும் (Competetiveness) மற்றும், திறமையையும் அழிக்கிறது என்ற செய்தி இருக்கும்.
பாஜகவின் 2014 வெற்றிக்கு அதன் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒரு பெரும் காரணம் என்பதை அனைவரும் அறிவோம். அனால் அதன் பின்னணியில் இவ்வளவு அதிநவீன தொழில்நுட்பம் , பணம் , பலம் இருப்பது யாருக்கும் தெரியாது.
CA ஒரு சக்திவாய்ந்த தொழில்நுட்பம் என்று  பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் முன்னாள் தலைவர் 2017 ஆம் ஆண்டு கூறுகிறார்.


கென்யாவை சேர்ந்த சமூக ஆர்வலர் , CA நம்முள் ஏற்படுத்திய தாக்கத்தை மாற்ற பல வருடங்கள் ஆகும், கோடிக்கணக்கில் நம் வரிப்பணத்தை பயன்படுத்தி நமக்குள் பகையை வளர்த்துள்ளனர் என்று கூறுகிறார்

இந்தியாவிலும் அதே நிலைமை தான். 2012 ஆம் ஆண்டுக்கு பின் நம் நட்பு வட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தை சற்று சிந்தித்து பாருங்கள். எத்தனை நண்பர்கள் கருத்தியல் ரீதியாக நம்மை விட்டு விலகி சென்றனர் ? எத்தனை வன்முறை வலைதளத்தில் இருந்து தொடங்கியது ?  2012ம் ஆண்டுக்கு முன்பாக அரட்டை அடித்துக் கொண்டு,  நகைச்சுவையாகவும், அன்பாகவும் விவாதம் நடத்தி வந்த நாம், இப்போது வார்த்தைகளில் முழுக்க முழுக்க வன்முனையை பயன்படுத்தும் அளவுக்கு எப்படி மாறியிருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.  ஃபேஸ்புக்குக்கு முன்பு இருந்த ஆர்குட்டை பயன்படுத்தியவர்களுக்கு, இந்த சூழல் எப்படி மாறியுள்ளது என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த சூழ்நிலை தொடர்ந்தால் எந்த ஒரு நேர்மையான ஏழை அரசியல்வாதியும் தேர்தலில் ஜெயிக்கவே முடியாத சூழல் உருவாகும். இத்தகைய பின்புலம் உள்ள நிறுவனம் ஜெயித்த பின் எவ்விதமான பிரதிபலனை அரசாங்கத்திடம் இருந்து பெற முயலும் என்பதை நினைத்து பாருங்கள். முதலில் பொருட்களை விற்பதில் ஆரம்பித்து இன்று நாட்டின் அதிபரை தேர்ந்தெடுக்கும் அளவு நம் தகவல்களை நமக்கு எதிராக திரும்பியுள்ளனர்.  நாளை ஒரு ஆயுத வியாபாரி தனது லாபத்திற்காக, இந்த நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்தினால், இரு நாடுகளுக்கிடையே போரை உருவாக்கவும் இந்த நிறுவனம் சற்றும் தயங்காது.
இத்தனை நடந்தபின் Facebook நிறுவனர் மார்க் ஸூக்கர்பேர்க் இந்த தவறை ஒத்துக்கொண்டு இதனை மேலும் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்   இணைப்பு. இது ஒன்றும் புதிதல்ல இவர் பலமுறை இது போல் நிகழ்வுகள் ஏற்படும் போது இதே போல் மன்னிப்பு கோரியுள்ளார்.
இன்று ஃபேஸ்புக்கில் வன்மத்தோடு நடக்கும் விவாதங்களும், மோதல்களும் நம்மை நிதானமிழந்து, மனதளவில் வன்முறையாளர்களாக மாற்றி வருகிறது.    இந்த வன்முறைக்கு முக்கிய காரணம், வன்முறையையும், இன துவேஷத்தையும்,  வெறுப்பையும் வளர்த்து, அதன் மூலமாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் பிஜேபியும், அதன் சங் பரிவார் அமைப்புகளுமே என்பதை மறந்து விடக் கூடாது.   அவர்களின் மோசமான நோக்கத்தை நாம் புரிந்து கொண்டோமேயானால், மிக எளிதாக அவர்களின் பிரச்சாரத்தை ஊடுருவிப் பார்த்து அதை கடந்து செல்ல முடியும்.
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல், கொள்கை, கோட்பாடுகள் இருந்தாலும், நாம் அனைவரும் மனிதர்களே.   ரத்தமும் சதையுமான மனிதர்கள்.  நம்மில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ, உதவி தேவைப்பட்டாலோ, நாம்தான் பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டும்.   நாம் மனிதர்கள்.   இந்த அடிப்படை உண்மையை மறக்கச் செய்வதே, கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா மற்றும் சங் பரிவாரின் நோக்கம்.
WhatsApp செயலி உருவாக்கி அதனை Facebook இடம் விற்ற பிரையன் அனைவரும் தங்கள் Facebook கணக்கை டெலீட் செய்ய சொல்லி அறிவுறுத்துகிறார்.
நாம் Facebook கணக்கை மூடுகிறோமோ இல்லையோ ஆனால்  செய்யவேண்டியது ஒன்று தான், நமக்கு பகிரப்படும் தகவல்கள் உண்மையானதா, பொய்யானதா என்பதனை முடிந்த அள்வு உறுதிப்படுத்திய பின் ஏற்றுக்கொள்வதோ பகிரவோ வேண்டும். எதிரி தானே அவனை பற்றி வரும் தகவல் பொய்யென்றும் தெரிந்தும் அதை பகிர்ந்தால் இந்த அயோக்கித்தனத்திற்கு நாமும் துணை போகிறோம் என்று அர்த்தம்.  நாளை நமக்கும் இதுவே நடக்கும்.

கருத்துகள் இல்லை: