திங்கள், 26 மார்ச், 2018

தலைமன்னார் - தனுஷ்கோடி 12 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்


தலைமன்னார் - தனுஷ்கோடி கடல் பகுதியை 12 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்தினத்தந்தி :தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே கடல் பகுதியை நீந்திக் கடப்பதில் சென்னை என்ஜினீயரிங் மாணவர் புதிய சாதனை படைத்தார். ராமேசுவரம், சென்னை முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவருடைய மகன் ராஜேசுவரபிரபு (வயது 21). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வருகிறார். நீச்சலில் ஆர்வமுள்ள இவர் இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரையுள்ள 32 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடக்க திட்டமிட்டார். இதற்காக அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று முன்தினம் தலைமன்னாருக்கு படகில் சென்றார். அவருடன் நீச்சல் குழுவினரும் சென்றிருந்தனர். நேற்று அதிகாலை 3.06 மணி அளவில் தலைமன்னார் பகுதியில் ஊர்மனை என்ற இடத்தில் இருந்து ராஜேசுவரபிரபு கடலில் குதித்து நீந்தத்தொடங்கினார். அவருக்கு பாதுகாப்பாக இலங்கை-இந்திய கடற்படையினரும், மீட்புக் குழுவினரும் படகில் வந்தனர்.


தொடர்ந்து கடலில் நீந்திய அவர் நேற்று பிற்பகல் 3.04 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். மொத்த தூரத்தையும் நீந்திக்கடக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 11 மணி நேரம்; 58 நிமிடம் ஆகும்.

அரிச்சல்முனை கடற்கரையில் அவருடைய பெற்றோர் சுந்தரலிங்கம்-ஜெயலட்சுமி, உறவினர்கள், சுற்றுலா பயணிகள் காத்து நின்று அவருக்கு வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்தனர். இதுகுறித்து ராஜேசுவர பிரபு கூறியதாவது:-

நான் 12 வயது சிறுவனாக இருந்தது முதல் நீச்சல் போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டேன். எனது பெற்றோரும், பயிற்சியாளர்களும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். சென்னை கோவளம், தூத்துக்குடி, மராட்டிய மாநில கடல் பகுதிகளில் நீந்தியுள்ளேன். இந்த பகுதிகளில் எல்லாம் இல்லாத அளவுக்கு தலைமன்னார்-தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதி வேறுவிதமாக உள்ளது. அதிகாலை 3 மணி அளவில் கடலில் குதித்த நான் சூரிய உதயம் வரை அதிகமாக அடித்த கடல் அலையாலும், நீரோட்டத்தாலும் நீந்துவதற்கு மிகவும் சிரமப்பட்டேன்.

காலையில் தான் என்னால் வேகமாக நீந்த முடிந்தது. இந்த பகுதியில் கடல் நீரோட்டமும், ஜெல்லி மீன்களும் அதிக அளவில் உள்ளன. அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கூட அதிக நீரோட்டம் உள்ளது. இந்த நீரோட்டத்தின் காரணமாக கரையை அடைவதற்கு நேரமாகி விட்டது. எனது இந்த சாதனைக்கு அனுமதி அளித்த மத்திய-மாநில அரசுகளுக்கும், என்னை வரவேற்று பாதுகாப்பு அளித்த இந்திய-இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கும், மீட்புக் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே கடந்த 1994-ம் ஆண்டு 12 வயது சிறுவனாக இருந்த குற்றாலீசுவரன் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான கடல் பகுதியை 16 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

தற்போது ராஜேசுவர பிரபு தற்போது 11 மணி நேரம், 58 நிமிடத்தில் இதே தூரத்தை நீந்தி கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: