சனி, 31 மார்ச், 2018

குதிரையில் சென்றதற்காக தலித் இளைஞர் கொலை!.. குஜராத்தில் வெறியாட்டம்

குதிரையில் சென்றதற்காக தலித் இளைஞர் கொலை!மின்னம்பலம் :குஜராத்தில் தலித் இளைஞர் ஒருவர் குதிரையில் சவாரி செய்ததற்காக மூன்று பேரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்திலுள்ள டிம்பி கிராமத்தைச் சேர்ந்த கலு ரத்தோட் என்பவரின் மகன் பிரதீப் ரத்தோட். இவர் தலித் இனத்தைச் சேர்ந்தவர். இவர் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டுத் தன் தந்தைக்கு உதவியாக வயலில் வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்குச் சொந்தமான வயலைப் பார்த்துவருவதற்குக் குதிரையில் சென்றுவந்துள்ளார். தலித் மக்கள் குதிரையில் செல்வது பிடிக்காத அந்தப் பகுதியின் ஆதிக்கச் சாதி இளைஞர்கள், இனிமேல் நீ குதிரையில் செல்லக் கூடாது; இதுவே கடைசி முறை என்று மிரட்டியுள்ளனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத அந்த இளைஞர் வழக்கம்போல் குதிரையில் சென்றுவந்துள்ளார். வயலுக்குச் சென்ற பிரதீப் நேற்று (மார்ச் 30) பிணமாக மீட்கப்பட்டுள்ளார். பிரதீப்பைக் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு கொலைசெய்துள்ளனர். குதிரையையும் கொன்றுள்ளனர்.

இது குறித்து பிரதீப்பின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கொலைக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என பிரதீப்பின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேறு சாதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
குஜராத் மாநிலத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த மக்கள் சொந்தமாகக் குதிரைகளை வாங்கவோ வளர்க்கவோ கூடாது என ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மக்கள் தடை விதித்துள்ளனர். இந்த ஊரில் 3,000 பேர் வசித்துவருகின்றனர். அதில், 10 சதவிகித மக்கள் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

கருத்துகள் இல்லை: