வெள்ளி, 30 மார்ச், 2018

அதிமுக எம்பிக்கள் பதவி விலகவும் மாட்டாரகள் .. தற்கொலை செய்யவும் மாட்டார்கள் .. ஒரு நாள் உண்ணாவிரதம் ..

tamilthehindu :காவிரி மேலாண்மை வாரியத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் அதிமுகவுக்குள் பல்வேறு குழப்பங்கள், பலவித குரல்கள் ஒழிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தை நாடுவது, ராஜினாமா செய்வது, உண்ணாவிரதம் என பல குரல்கள் ஒலிப்பதால் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
காவிரி பிரச்சினையில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், அதற்கு 6 வார கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், காவிரி நீர் கர்நாடகாவுக்கு சொந்தமல்ல என்றும் ஆணித்தரமாக தெரிவித்தது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. 6 வார காலத்திற்குள் வாரியத்தை அமைக்க அழுத்தம் தரவேண்டும் என மாநில அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், அதிமுக சார்பில் ஒரே பதில் 6 வாரம் இருக்கிறது, பொறுமை காப்போம் என்று கூறிவந்தனர்.

அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப்பேரவையில் தீர்மானம் என நிறைவேற்றி எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்த போதும் இறுதி நாள் வரை பொறுப்போம் என்று கூறிவந்தனர். இறுதி நாளும் வந்தது. ஆனால் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
மாநிலத்தை ஆளும் அதிமுக அரசுக்குள் காவிரி மேலாண்மை விவகாரத்தில் பல குரல்கள் எழுவதை மட்டும் தமிழக மக்கள் பார்க்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளவும் தயங்க மாட்டோம் என்று பேசினார்.
இது அவருடைய தனிப்பட்ட கருத்து என பி.எம்.குமார் எம்.பி. பேசினார். அது தவறல்ல சரியான கருத்துதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மறுநாள் அருண்மொழிதேவன் உட்பட 5 எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்தனர், பின்னர் மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று தெரிவித்தனர்.
அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை செய்தியாளர்களிடம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்தார். ஆனால் திருமண விழாவில் கலந்துகொண்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தின் உணர்வை காட்ட அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி அன்று உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை அமைக்கும் விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசின் சரியான நிலைப்பாடு இல்லாத காரணத்தால் மத்திய அரசு அதை பயன்படுத்திக்கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. தங்கள் மீது ரெய்டு வரும் என்ற பயத்தில் துணிச்சலான எந்த முடிவையும் அதிமுக தலைவர்கள் எடுக்கத் தயங்குகின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முயற்சியில் அதிமுகவில் ஒருமித்த குரலாக இல்லாமல் ஆளாளுக்கு கருத்து சொல்வது இந்தப் பிரச்சினையில் அதிமுகவின் தெளிவற்ற நிலையையே காட்டுவதாக உள்ளது. ஜெயலலிதா ஆட்சி என்று கூறும் அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவின் உறுதியான நிலையில் இல்லாமல் ஆளாளுக்கு தனிக்கருத்து கூறி வருவது கவனிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை: