திங்கள், 26 மார்ச், 2018

15 கொலை; 18 பாலியல் வன்கொடுமை!- ஆராயி வழக்கில் சிக்கிய தில்லைநாதனின் வரலாறு

தில்லைநாயகம்விகடன் -சி.ய.ஆனந்தகுமார்: தமிழகத்தையே உலுக்கிய விழுப்புரம், வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ;ஆராயி வழக்கில் தில்லைநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப்பற்றி அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 21-ம் தேதி இரவு, தனது 10 வயது மகன் சமயன் மற்றும் 14 வயது மகள் தனத்துடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், 10 வயதுச் சிறுவன் சமயனைக் கொலை செய்ததோடு, கொடூரமாக சிறுமி தனத்தை பாலியல் வன்கொடுமை செய்து, ஆராயியை தலையில் தாக்கினார். பலத்த காயமடைந்த இருவரும் சுயநினைவின்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இந்த வழக்கில், கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த ஒருவரைக் கைதுசெய்து விசாரணையைத் தொடங்கியது விழுப்புரம் மாவட்ட போலீஸ். கைதுசெய்யப்பட்டுள்ள தில்லைநாதன் செய்த கொலைகள் அனைத்தும் ஆராயிக்கு நடந்த கொடூரத்தைப் போன்ற பாணிதான்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``2008-ம் ஆண்டில், புவனகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்புள்ள ஒரு குடிசை வீட்டில் ராஜாம்பாள் என்கிற மூதாட்டியும் அவருடைய பேத்தியும் தூங்கிக்கொண்டிருந்தனர். அந்தக் குடிசைக்குள் நுழைந்த நபர், பாட்டியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப் போட்டுவிட்டு, அருகில் படுத்திருந்த பேத்தியை வன்கொடுமை செய்தான். அடுத்து குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கொத்தவாச்சேரி கிராமத்தில், இரண்டு வீடுகளில் இரவில் நுழைந்து கணவர், குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கி, பெண்களை வன்கொடுமை செய்த சம்பவங்கள் நடந்தன. இதில், குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டாலும், குற்றங்கள் குறையவில்லை. இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு, நாகப்பட்டினம், அரியலூர் மாவட்டங்களில் இதே பாணியில் கொலைகள் நடக்க ஆரம்பித்தன.
சீர்காழியில், பெயின்டர் பாண்டியன் வீடு, டேனியல்ராஜ் என்பவர் வீடு, ஜெயங்கொண்டத்தில் வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் வீடுகளில் இதேபாணியில் சம்பவங்கள் நடந்தன. அதே வருடம், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஆர்.ஐ., செல்வம் அடித்துக் கொல்லப்பட்டார். அடுத்து, ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவார்தலைப்பு புகழேந்தி என்பவர் வீடு, தென்னவநல்லூர் ஆனந்தி வீடு உள்ளிட்ட இடங்களில் இதே பாணியில் கொலை மற்றும் வன்கொடுமைகள் நடந்திருந்தன. கடைசிவரை அரியலூர் போலீஸார் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வேலவிநாயகர்குப்பத்தில் திருட வந்த ஒருவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவன் சொன்ன அனைத்தும், போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. தில்லைநாதன் கூறிய பட்டியல்கள் அனைத்தும் திகில் கதைகளாக இருந்தன. அதில் கொடுமை என்னவென்றால், இந்தக் கொலைகளில் பலரைத் தேவையில்லாமல் குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்பியது.
கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி கள்ளிக்காட்டுத் தெருதான் தில்லைநாதனுக்குச் சொந்த ஊர். ஜோசியம் பார்த்து வந்த அவனது தந்தை இறந்து விட்டார். அம்மா மட்டும்தான். தில்லைநாதன் சிறுவயதிலிருந்தே கொஞ்சம் முரட்டுத்தனமாய் இருப்பானாம். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சாப்பாட்டில் மண்ணை அள்ளிப் போடுவது, நடு வீட்டில் மலம் கழிப்பது என அவனது செயல்கள் அத்தனையும் சைக்கோத்தனமாக இருக்கும். கொஞ்சம் விவரம் தெரிந்ததும், திருட்டு வழக்கில் சிக்கி சில தடவை சிறைக்குப் போனான். கடந்த 2010–ம் ஆண்டு மட்டும், 33 சம்பவங்களில் 15 கொலையும் 18 பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான். சைக்கோவாகவே வலம் வந்த தில்லைநாதன், ஊரில் தனியாக இருக்கும் வீடுகளைக் குறிவைத்து, இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்து, எல்லோரையும் அப்படியே அடித்துப் போட்டுவிட்டு, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துவிடுவான். அப்போது குழந்தைகள் யாரும் விழித்துக்கொண்டால், கால்களைப் பிடித்துத் தூக்கி தலையைச் சுவரில் அடித்துக் கொலை செய்வானாம்.
2010ல் சைக்கோ தில்லைநாயகத்தை என்கவுன்டர் செய்ய போலீஸ் முடிவு செய்திருந்தது. ஆனால், அவன் சிறைக்கு அனுப்பப்பட்டான். திருச்சி சிறையில் இருந்த தில்லைநாதன், கடந்த 2016 ல் வெளியே வந்துள்ளான். மீண்டும் தனது பாணியில் விழுப்புரம், வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி குடும்பத்தாருக்கும் இவனால் துயரம் நேர்ந்துள்ளது'' என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: