திங்கள், 25 செப்டம்பர், 2017

J.H. A. Tremenheere பஞ்சமி நிலங்களுக்காக போராடிய ஆங்கிலேய அதிகாரி திரமென்ஹீர்!

ஆங்கிலேயரான சார்லஸ் வில்லியம் திரமென்ஹீர் என்பவருக்கும் ஆங்கிலேய பெண்மணியான கமிலா எலிசா கீரீக் என்பவருக்கும்  புனேவில் 1853  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாளன்று பிறந்தவர் ஜேம்ஸ் ஹென்றி அப்பெர்லே திரமென்ஹீர். தன் பள்ளிப்படிப்பையும், கல்லூரி படிப்பையும் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிலையங்களான லேன்சிங் மற்றும் செல்டென்ஹம் கல்லூரியில் பயின்றார். கல்லூரி படிப்பினை வெற்றிகரமாக முடித்த திரமென்ஹீர் இந்தியாவிற்கு ஐ.சி.ஸ் அதிகாரியாக பொறுப்பேற்று பல பகுதிகளில் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தார். இந்த செய்திகளை மார்னி ஹொவ் என்பவரும் செல்டென்ஹம் கல்லூரி ஆவணக்காப்பக அதிகாரிகளும் உறுதி செய்கிறார்கள்.

இங்கிலாந்து  செல்டென்ஹம் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட புகைப்படம்
திரமென்ஹீர், அமெரிக்க பெண்மணியான ஜெஸ்ஸி அர்வேன் என்பவரை 1887 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாளன்று  அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்ததை பற்றி 1887 ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் 19ஆம் நாள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய திரமென்ஹீர் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆட்சியராக பணியில் இருந்தபோது அம்மாவட்டத்தில் இருந்த தலித் மக்கள் பற்றிய குறிப்பினை(பறையர் இன மக்கள் பற்றிய குறிப்புகள்) ஆங்கிலேய அரசுக்கு 1891 இல்  தெரியப்படுத்தினார்.
அது அரசு ஆணை எண் (1010 /1892 ) என்று வெளியிடப்பட்டது. இந்த குறிப்பில் தான் தலித்களுக்கு நிலஒதுக்கீடு முறையின் கீழ் நிலங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலங்கள் தான் பிற்காலத்தில் பஞ்சமி நிலங்கள் என்று அழைக்கப்பட்டது.
மிராசுதாரர் முறை, ரயத்வாரி முறை ஆகியவை நடைமுறையில் இருந்து வந்த சூழலில் தலித் மக்களின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை விளக்கிய அவர், ஆங்கிலேய அரசு தலித் மக்களின் நலனில் பெரிய அளவில் அக்கறை கொள்ளவில்லை என்றும் அவர்கள் வாழும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறந்துவைக்கப்பட்டு இருப்பதையும் கடுமையாக சாடினார். பள்ளிகளில் ஆசிரியர்களிடம் மேலோங்கி இருக்கும் சாதிய உணர்வும் கூட தலித் மக்கள் கல்வியறிவு பெறுவதில் மிகப்பெரிய தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தலித் மக்கள் வாழும் வீட்டுமனை மீது மிராசுதாரர்கள் தொடுக்கும் வழக்கு தொடர்பான செய்திகளை கீழ் நீதிமன்றங்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், தலித்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஒருவரை அரசு நியமிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்படலாம் என்றும், அந்த  நடைமுறை குறித்து மாவட்டம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்றும் திரமென்ஹீர் தெரிவித்தார்.
தலித் மக்களுக்கு சொந்தமான இடத்தை கள்ளத்தனமாக மிராசுதாரர்கள் தங்கள் பெயரில் எழுதி வைத்து கொள்வதையும், கிராம மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் பொய்வழக்குகளில் தலித்கள் சிக்கவைப்பது பற்றியும், கோவிலுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படாத நிலைமையையும் வேதனையோடு பதிவு செய்தார். திரமென்ஹீரின் அறிக்கை தலித்களின் சுகாதாரம்,  கல்வி, அவர்கள் சந்திக்கும் வன்கொடுமைகள், ஆங்கிலேய அரசு மேற்கொள்ள வேண்டிய  தீர்வுகள் என அனைத்தையும் உள்ளடக்கியதாக  இருந்தது.
இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் தன்னுடைய பறையன் இதழில் ஊழலை ஒழிப்பதில் சமர்த்தர் என்றும் மக்களின் நண்பர் என்றும் 1897ஆம் ஆண்டு வெளியான இதழில் இவரை பாராட்டினார். திரமென்ஹீருடைய செங்கல்பட்டு பறையர் இன  மக்கள் பற்றிய முழு அறிக்கையை எழுத்து பதிப்பும், தமிழில் நூலாக வெளியிட்டு இருக்கிறது.
இலக்கியங்களின் மீது ஆர்வம் கொண்டிருந்த திரமென்ஹீர்  “தி லெஸ்பியா ஆப் காட்டுள்ஸ்” என்ற கவிதை நூல் ஒன்றினை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டா. 28 அக்டோபர் 1912 அன்று உடல்நலக்குறைவால் திரமென்ஹீர்,  ஸ்காட்லாந்தில் இயற்கை எய்தினார்.
அவர் பரிந்துரை செய்த பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டத்தில் 1994ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 10ஆம் நாள் ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோர் அரச வன்கொடுமைக்கு பலியானார்கள். அவர்களின் குடும்பத்திற்கும் அரசு உதவ முன்வரவில்லை, இன்னமும் பஞ்சமி நிலங்கள் தலித்களுக்கும் முறையாக வழங்கப்படவும் இல்லை.
ஆங்கிலேய அதிகாரியாக இருந்துகொண்டு ஆங்கிலேயே அரசை விமர்சித்து தலித்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட திரமென்ஹீர் போன்ற நேர்மையான அதிகாரிகள் சுதந்திர இந்தியாவின் இப்போதைய உடனடி தேவையாக இருக்கிறது.
– அ .அசோக்
முதலாமாண்டு, முதுகலை மாணவர்
தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், தரமணி
மின்னஞ்சல்: ashokmail2000 @gmail .com
nakkeeran

கருத்துகள் இல்லை: