திங்கள், 11 செப்டம்பர், 2017

உயர்நீதிமன்றத்தில் தினகரன் - எடப்பாடி தரப்புக்கள் கடுமையாக வாக்கு வாதம்

மின்னம்பலம் : பொதுக்குழு கூட்டத்தை நடத்த யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தரப்புக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே கடுமையான வாதம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாளை செப்டம்பர் 12 சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டுவதை எதிர்த்து தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இன்று காலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,'பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவதை விட, தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதே சிறந்தது. பொதுகுழுவில் கலந்துகொள்ள விரும்பாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம்" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார் உயர்நீதிமன்ற நீதிபதி. மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக வெற்றிவேலுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து இன்று மதியமே தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்தார் வெற்றிவேல். இதனை ஏற்ற தலைமை நீதிபதி மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். அதன்படி மனுவாக தாக்கல் செய்ய... இன்று மாலை இந்த மேல்முறையீட்டு மனு, ராஜீ ஷக்தேர், அப்துல் குத்தூஸ் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
வெற்றிவேல் தரப்பில் வழக்கறிஞர் ராமானுஜம் வாதாடினார்.
’’காலையில் தனி நீதிபதி எங்கள் தரப்பை வாதிட அனுமதிக்கவே இல்லை. எங்கள் தரப்புக் கருத்துகளை கேட்காமலேயே எங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதிமுகவின் இரு அணிகள் இணைப்பை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில் பொதுக்குழு கூட்டப்படுவதை ஏற்க முடியாது. மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்துள்ளார். அதிமுக தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையம் தினகரனையே தொடர்புகொள்கிறது. எனவே தினகரனால் கூட்டப்படும் பொதுக்குழுவே அதிமுகவின் பொதுக்குழுவாக கருதப்படும். அவர்கள் கூட்டும் பொதுகுழு அதிமுகவின் பொதுகுழுவாக கருதப்படக் கூடாது. பொதுக்குழுவுக்கு யார் அழைப்பு விடுக்கிறார்கள் என்பதே அந்த அழைப்பிதழில் இல்லை. சின்னம், கட்சி தொடர்பான முடிவெடுக்க்க தினகரனுக்கே அதிகாரம் உள்ளது. மேலும் அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் கட்சி எதுவும் இல்லை. எனவே இந்த பெயரில் பொதுக்குழு கூட்டப்படுவது அதிமுக சட்டப்படி தவறு ’’ என்று வாதிட்டார்.
முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.
‘’தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அணிகள் சார்பில்தான் இந்த பொதுக்குழு நடக்க இருக்கிறது. அதிமுக என்ற பெயரைப் பயன்படுத்த தடை இருப்பதால்தான் பொதுக்குழுவுக்கான அழைப்பிதழ்... அதிமுக அம்மா, புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரிலேயே அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே இது இரு அணிகளும் இணைந்து நடத்தும் பொதுக்குழுதான். மேலும் அதிமுக பொதுக்குழு உறுப்பினராகவே இல்லாத தினகரனுக்கு பொதுக்குழுவை கூட்ட எந்த அதிகாரமும் இல்லை. எனவே பொதுக்குழுவைக் கூட்ட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அணிகளைச் சார்ந்த எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.
இரு அணிகளும் இணையக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எப்போதும் சொன்னதில்லை. இரு அணிகளும் இணைந்தது பற்றித்தான் இந்த பொதுக்குழுவில் பேசப் போகிறோம். மேலும் நாங்கள் பொதுக்குழுவைக் கூட்டுவது தவறு என்றால் தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தையே அணுகியிருக்க வேண்டும் ’’ என்று வாதாடினார்.
இன்று மாலை 6.45 அளவில் இரு தரப்பு வாதமும் நிறைவடைந்த நிலையில்... தீர்ப்பை இன்று மாலை 7.15 க்கு வழங்குவதாக அறிவித்து ஒத்தி வைத்திருக்கிறார்கள் நீதிபதிகள்.
பொதுக்குழுவைக் கூட்ட யாருக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பை அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், மற்ற கட்சியினரும் கூட ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: