சனி, 16 செப்டம்பர், 2017

கனிமொழி :அரசிடமிருந்து 14 வருடங்களில் 2 ஆயிரத்து 300 கோடிகள் முழுங்கிய ராஜா முத்தையா மருத்தவ கல்லூரி

 கனிமொழி : உகாண்டா பிரதமர் உடம்பு சரியில்லைன்னா  தமிழ்நாட்டுக்குதாம்மா வந்து மருத்துவம் செய்துகொள்வேன்’ என்று என்னிடம் சொன்னார். அவர் மட்டுமில்லை. உலகத்தின் பல தலைவர்கள், பலர் தமிழ்நாட்டுக்குத்தான் மருத்துவம் பார்க்க வருகிறார்கள். ஆனால், இவர்களைத்தான் தரமில்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறந்த மெடிக்கல் டூரிஸம் நடக்கும் மாநிலமாக இருக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் நிர்வாகத்துக்கு எதிராக 15 நாள்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி கலந்துகொண்டு திமுகவின் முழு ஆதரவைத் தெரிவித்தார், திமுக மகளிரணிச் செயலாளரும் கழக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. போராட்டத்தை வாழ்த்தி அவர் பேசுகையில், “தான் நிர்வாகம் செய்கிறேன் என்று சொல்லி அரசே எடுத்துக்கொண்ட பல்கலைக்கழகம் இது. அன்றைய முதல்வரே இதுபற்றி சட்டமன்றத்தில் அறிவித்தார். அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மருத்துவக் கல்லூரியில் நியாயமான கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை. பொதுவாக தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 13 ஆயிரம், 14 ஆயிரம் என்றுதான் கட்டணம் இருக்கிறது. ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்ஸுக்கு 5 லட்சத்துக்கு 82 ஆயிரம், பி.டி.எஸ்ஸுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 9 லட்சம் வசூலிக்கப்படுகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்.

மக்களுக்கு எந்த சேவையும் அவர்கள் செய்வது கிடையாது. எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இலவச மருத்துவச் சேவை நடக்கும்போது, இந்தக் கல்லூரியில் மட்டும் மருத்துவச் சேவைக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதையும் எதிர்த்து மக்களுக்கான போராட்டமாகவும் இதை மாற்றியிருக்கிறீர்கள்.
அரசிடமிருந்து 14 வருடங்களில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் இதுவரை இந்தப் பல்கலைக்கழகம் மானியமாகப் பெற்றிருக்கிறார்கள். அரசாங்கத்திடம் இருந்து மானியம் பெற்றுவரும் கல்லூரி, மாணவர்களிடம் அதிகபட்ச கட்டணம் வசூலித்து, மருத்துவச் சேவைக்கும் கட்டணம் வசூலித்து, அடிப்படை வசதிகளையும் செய்யாமல் இருக்கிறது. இதை எதிர்த்து நடக்கும் இது, நியாயமான போராட்டம். மக்களுக்கான அறப்போராட்டம் இது.
இன்று தமிழ்நாட்டின் நிலை என்ன தெரியுமா? நேற்று காலை நீட் தேர்வுக்கு எதிரான ஓர் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களோடு நானும் கலந்துகொண்டேன். அப்போது அவர் என்னிடம், ‘நீ எந்த போராட்டத்தை முடிச்சிட்டு வந்தே?’ என்று கேட்டார். நான் சொன்னேன். அப்போது அவர், ‘முன்பு திருமணங்களில் சந்தித்துக்கொண்டால் அடுத்து எந்த கல்யாணம் போகப் போறே என்று கேட்போம். இன்று அடுத்து என்ன ஆர்பாட்டம் என்ன என்று கேட்கும் நிலை உருவாகிவிட்டது’ என்றார். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை.
மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய மாநில அரசும் இல்லை, மத்திய அரசும் இல்லை. நீட் தேர்வால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். இன்றும் சிறந்த ‘மெடிக்கல் ஹப்’ தமிழ்நாடுதான். சமீபத்தில் நான் உகாண்டாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது அந்நாட்டின் பிரதமரைச் சந்தித்தேன். அப்போது அவர், ‘எனக்கு உடம்பு சரியில்லைன்னா நான் தமிழ்நாட்டுக்குதாம்மா வந்து மருத்துவம் செய்துகொள்வேன்’ என்று சொன்னார். அவர் மட்டுமில்லை. உலகத்தின் பல தலைவர்கள், பலர் தமிழ்நாட்டுக்குத்தான் மருத்துவம் பார்க்க வருகிறார்கள். ஆனால், இவர்களைத்தான் தரமில்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறந்த மெடிக்கல் டூரிஸம் நடக்கும் மாநிலமாக இருக்கிறது.
உங்கள் பிரச்னையை 15 நாள்களாகப் போராடுகிறீர்கள். ஆனால், ஓர் அமைச்சர்கூட, ஓர் அதிகாரி கூட வந்து என்னவென்று கேட்கவில்லை என்பது வெட்கக்கேடான நிலை. ஆனால், திமுக உங்கள் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிக்கிறது. ஏனென்றால் இது நியாயத்துக்கான போராட்டம். உங்களின் போராட்டம். வெற்றி பெற வாழ்த்துகள்” என்று முடித்தார் கனிமொழி எம்.பி.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: