சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலராக பதவியேற்றுள்ள சசிகலா நடராஜன், விரைவில் முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்குள் நிலைமை சற்று மாறிவிட்டது.
என்றாலும், அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பான்மையான பலம் சசிகலாவுக்கு
இருப்பதாகவும், அவர் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என்றும் செம்மலை
தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அதிமுக தலைமையகத்தில் சசிகலா தலைமையில்
இன்று எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலரை
நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை என்று தேர்தல் ஆணைய
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்த விவரங்கள் தேர்தல் ஆணையத்தால்
அதிமுகவுக்கு விரைவில் அனுப்பப்பட இருப்பதாகவும் செய்தித்
தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்
மரணத்தைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலராக சசிகலா
நியமிக்கப்பட்டதை எதிர்த்து கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து ஆராய்ந்த
தேர்தல் ஆணையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றினால் மட்டுமே இடைக்கால பொதுச் செயலாளரை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தொடர்ந்து 5 ஆண்டுகள் அதிமுக
கட்சியில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச் செயலராக பதவியேற்க
முடியும் என்ற விதியை நீக்கித்தான், சசிகலா இடைக்கால பொதுச் செயலராக
பதவியேற்றார்.
ஆனால், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்
செயலராக யாரும் பதவியேற்க வழி செய்யும் வகையில் விதி இல்லாததால்,
சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்
செயலராக சசிகலா பதவியேற்பதை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச் செயலர் பதவியில் சசிகலா
நீடிப்பதில் சிக்கல் இருக்கும் நிலையில், அவர் முதல்வராக பதவியேற்பதிலும்
சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக வழக்குரைஞர் விஜயன் கூறியுள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்
கூறியிருப்பதாவது, அந்நியச் செலாவணி முறைகேட்டு வழக்கில், சசிகலா தரப்பில்
தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இன்னும் ஒரு வாரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.
எனவே, அவர் பதவியேற்பில் சட்ட சிக்கல் உள்ளது.
அதே போல, இந்திய அரசியலமைப்பு 10வது
விதியின்படி, நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உறுப்பினராக இருக்க
வேண்டும். ஆனால், சசிகலா இன்னும் உறுப்பினர் ஆகவில்லை.
மேலும், சட்டமன்ற உறுப்பினராக அவையில்
அமர்வதற்கு பிரமாணம் எடுக்க வேண்டும். அப்படியே முதல்வராக பொறுப்பேற்றுக்
கொண்டு சட்டப்பேரவைக்குள் வந்தாலும் 6 மாத காலம் உறுப்பினராக இல்லாமல்
எப்படி சட்டப்பேரவையில் அமர முடியும்.
இந்த சூழ்நிலையில்தான், சசிகலா முதல்வராக
பதவியேற்பதில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யவே,
வித்யாசாகர் ராவ் சென்னையில் இருந்து கிளம்பினார் என்றும், அதற்கு சரியான
தீர்வு கிடைத்ததும் அவர் சென்னை திரும்புவார் என்றும் தகவல்கள்
வெளியாகியுள்ளன. தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக