மேலிருக்கும் புகைப்படத்தில் இருப்பவள்தான் நந்தினி.குழந்தையென்றும் விவரம் அறிந்தவள் என்றும் கணித்திட முடியாத அப்பாவி முகம். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமம் சொந்த ஊர். வசதியின்மையால் ஒன்பதாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் அம்மாவுடன் சித்தாள் வேலைக்குச் சென்றிருக்கிறாள்.
கடந்த 29ந்தேதி திடீரேன நந்தினி காணாமல் போக அடுத்த நாளே அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் கீழ்மாளிகை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். மணிகண்டனும் நந்தினியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மணிகண்டன் அந்த பகுதியின் இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் என்பது கூடுதல் தகவல்.
நந்தினியின் தாய் ராசாக்கிளி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டனை விசாரித்தனர் போலீசார் அதில், ஆறு மாத கால கர்ப்பமாக இருந்த நந்தினியை கீழ்மாளிகைக்கு அழைத்துச் சென்று நன்பர்களுடன் கூட்டுப் பாலியல் வன்முறை செய்து அந்தப் பகுதி கிணற்றில் வீசியுள்ளார் மணிகண்டன் என்பது புலனாகியுள்ளது, மேலும் நந்தினியின் வயிற்றில் இருந்த ஆறு மாத சிசுவையும் வெளியே எடுத்து எரித்துள்ளனர் என்பது போன்ற திடுக்கிடும் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். நந்தினியைக் காணவில்லை என்றே மக்கள் நம்பி வந்த நிலையில் 17 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கீழ்மாளிகை கிணற்றிலிருந்து மேலெழும்பி வந்துள்ளது. ஆனால் நிகழ்த்தப்பட்ட குற்றம் அனைத்தும் அறிந்தும் மணிகண்டன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை தயக்கம் காட்டி வருவதாக அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நந்தினியின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்கிச் செல்லுமாறு போலிசாரால் அவரது உறவினர்கள் நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆயிரம் பாதுகாப்புகள் அந்த பெருவெளியில் கிடைத்தாலும் இப்படியான செயல்களை நாம் மறுப்பதற்கில்லை. மெரினாவில் நியாயம் கேட்க அமர்ந்திருக்கும் மக்கள் காளை மாடுகளுக்காக போராடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நந்தினி போன்ற வஞ்சிக்கப்படும் உயிர்களுக்காகவும் குரல் எழுப்புங்கள். 68 ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஜனநாயக நாட்டில் தற்போதுதான் மக்களின் குரலை செவிமடுத்துக் கேட்கத் தொடங்கியிருக்கிறது அரசியல்புறம். ஜல்லிக்கட்டு மட்டுமே எங்கள் பிரச்னையில்லை என்று தொடர்ந்து ஒலிக்கச் செய்யுங்கள். சென்னைக் கடற்கரையைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் சிறு நகரங்களுக்கும், அதைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பல தமிழக மாவட்டங்களுக்கும் தற்போது கடலோரம் அமர்ந்திருக்கும் லட்சோப லட்சம் மக்கள்தான் தலைவர்கள். அனைத்து உரிமை மீறலுக்கும் எதிராய் இனி ஓங்கி ஒலிக்கட்டும் இந்த அடையாளமற்ற குரல்கள். ஐஸ்வர்யா விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக