சனி, 15 அக்டோபர், 2016

அப்பல்லோடா ...!!! சிங்கப்பூர் டாக்டர்கள் வருகை .. முதல்வருக்கு உடல்பயிற்சிகளை (பிசியோதெரபி)..

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர்
ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சிங்கப்பூர் பிசியோதெரபி பயிற்சி நிபுணர்கள் நாளை சென்னை வர உள்ளனர். சென்னை: முதல்-அமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்று (சனிக்கிழமை) டாக்டர்கள் 24-வது நாளாக சிகிச்சை அளித்தனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே ஆலோசனை வழங்கி வருகிறார்.


நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள், இதய சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருத்துவ நிபுணர்கள், செயற்கை சுவாச சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நோய் தொற்று சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள். இதன் காரணமாக அவரது உடல் நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் சென்னை வந்து விட்டு சென்ற லண்டன் டாக்டர் ரிச்சர்டு நேற்று மீண்டும் வந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையைத் தொடங்கியுள்ளார். நேற்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் நிதிஷ் நாயக், கில்னானி, அஞ்சன் திரிகா ஆகியோருடன் இணைந்து இதுவரை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகளை ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் அவர்கள் ஆலோசித்தனர். அடுத்தகட்டமாக ஜெயலலிதாவுக்கு எத்தகைய சிகிச்சை முறைகளை மேற்கொள்வது என்பது பற்றியும் விவாதித்தனர். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணம் பெறத்தக்க வகையிலான சிகிச்சைகளை தொடங்க அவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பொதுவாக உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் செயல்பாட்டை பொறுத்து “பிசியோதெரபி” பயிற்சி அளிக்கப்படும்.

சிலருக்கு பிசியோதெரபி பயிற்சிகளை எப்படி செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அந்த பயிற்சியை உடல் நலம் பாதித்தவர்களையே செய்யச் சொல்வார்கள்.

சில பிசியோதெரபி பயிற்சிகளை அதற்குரிய நிபுணர்களே அளிப்பார்கள்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிசியோதெரபி பயிற்சி அளிப்பதில் உலக அளவில் சிறப்புப் பெற்ற மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க நேற்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அந்த மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் பேசினார்கள். இவர்களது அழைப்பை சிங்கப்பூர் பிசியோதெரபி பயிற்சி நிபுணர்கள் ஏற்றுக் கொண்டனர்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அவர்கள் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை வர உள்ளனர். மொத்தம் இரண்டு பிசியோதெரபி பயிற்சி நிபுணர்கள் வர உள்ளனர்.

சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் அளிக்கும் பயிற்சிக்குப் பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நலம் மேலும் விரைவான முன்னேற்றத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவதற்காக அ.தி.மு.க.வினர் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள், பூஜைகள் செய்து வருகிறார்கள்  மாலைமலர்,காம்

கருத்துகள் இல்லை: