ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சிங்களவர்களின் இதயத்தை உலுக்கத் தொடங்கி... தமிழினியின் "ஒரு கூர்வாளின் நிழலில்"

இலங்கையில் போருக்குப் பின்னும் நீடிக்கும் கசப்பான சூழலின் இடையே
சிறு பூங்கொத்தை நீட்டியிருக்கிறது ஒரு புத்தகம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழினி எழுதி, அவரது இறப்புக்குப் பின் வெளிவந்த ‘ஒரு கூர்வாளின் நிழலில்…’ புத்தகம். தமிழில் ‘காலச்சுவடு பதிப்பகம்’ இந்தப் புத்தகத் தைக் கொண்டுவந்தபோதே இங்கு அதிர்வுகள் ஏற்பட்டன. இப்போது சிங்களச் சூழலிலும் அதிர்வுகள் உருவாக்கி யிருக்கின்றன. இதுகுறித்து இந்த மாதம் ‘அம்ருதா’ இத ழில் ஒரு கருத்துத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் எம்.ரிஷான் ஷெரீப். வெளியான ஒரே மாதத்தில் இரு பதிப்பு களை இப்புத்தகம் கண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் ரிஷான் ஷெரீப், புத்தகத்தைப் படித்த சிங்கள இளைஞர்களின் கருத்துகளையும் தொகுத்திருக்கிறார். போரின் குரூரத்தை தமிழினியின் எழுத்து அவர்களின் இதயத்துக்குக் கொண்டுசென்றிருப்பதை இந்தப் பதிவில் உணர முடிகிறது


பள்ளியில் படிக்கும் வயதிலேயே சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராட முடிவெடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர் தமிழினி. அங்கு தொடங்கி ஈழப் போரின் முடிவில் அங்குள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டு, விடுதலைப் புலிகள் இயக்கம் அழித்தொழிக்கப்படுவது வரையிலான 18 ஆண்டு காலப் போராளி வாழ்க்கை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. அதனூடே ‘இறுதிப் போர்’ அவலங்களைப் பதிவுசெய்திருக்கிறார் தமிழினி. போரில் தமிழ் மக்களுக்கு இலங்கை ராணுவம் இழைத்த கொடுமைகளை விலாவரியாக எழுதியிருக்கும் தமிழினி, மறுபுறம் விடுதலைப் புலிகள் இயக்கம் தம் சொந்த மக்களுக்கு இழைத்த துரோகங்களையும் நேர்மையாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒரு போர் கடைசியில் யாருக்குமே நிம்மதியைத் தருவதில்லை என்பதையும் இலங்கை போன்ற ஒரு தேசத்தின் அமைதி அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமித்த மகிழ்ச்சியில் இருக்கிறது என்பதையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்…’ நூல்.
சிங்களவர்களின் இதயத்தை இந்நூல் உலுக்கத் தொடங்கியிருப்பதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. எனினும், தமிழ் மக்களுக்கு இந்நூல் சொல்லும் கூடுதல் சேதி ஒன்று உண்டு. நம் தரப்பு நியாயங்களை நம்மைத் தாண்டி மாற்றுத்தரப்பிடம் கொண்டுசேர்ப்பதன் முக்கியத்துவமே அது. தமிழ் – சிங்களச் சமூகங்கள் இடையிலான இடைவிடாத உரையாடலின் தேவையைத் தமிழினியின் எழுத்து மேலும் அழுத்திச் சொல்கிறது.

கருத்துகள் இல்லை: