சனி, 15 அக்டோபர், 2016

ஊராட்சி ஒன்றிய தலைவர் வெட்டி கொலை ! திருவள்ளூர் மேல்மனம்பேடு ஊராட்சி ...

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே நடைபயிற்சி சென்ற மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மணம்பேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பி.எஸ்.கோல்டு என்கிற பி.எஸ்.தங்கராஜ்(வயது 50). இவர் மேல்மணம்பேடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவருக்கு நிறைமதி(45) என்ற மனைவி உள்ளார், குழந்தைகள் இல்லை. தங்கராஜ் இதே ஊராட்சியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேல்மணம்பேடு ஊராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அவரது மனைவி நிறைமதி வேட்புமனு தாக்கல் செய்தார்.


வெட்டி கொலை

இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் தங்கராஜ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான வெங்கடேஷ், மணி, லட்சுமிபதி, குகன், சுப்பிரமணி ஆகியோருடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மேல்மணம்பேடு – பட்டாபிராம் செல்லும் சாலையில் அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர்களது பின்னால் 3 மோட்டார் சைக்கிள்களில் ‘ஹெல்மட்’ அணிந்துவந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்து நின்றது.

அந்த கும்பல் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜை சுற்றிவளைத்து கத்தியால் வெட்ட முயன்றனர். இதனால் பதறிப்போன அவர் அவர்களை தடுக்க முயன்றபோது அவரது இடது கையில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரை சுற்றிவளைத்த அந்த கும்பல் கழுத்தில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

போலீசில் புகார்

இதைப்பார்த்த அவருடன் வந்த நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் அவர்களை கத்தியை காட்டி மிரட்டியதைத் தொடர்ந்து அனைவரும் அலறியடித்தபடி தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து தங்கராஜின் உறவினர் நித்யானந்தன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈ.டி.சாம்சன், கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டு ஈஸ்வரன், வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

தேர்தல் விரோதமா?

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ராம்போ வரவழைக்கப்பட்டு, அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தவாறு கீழ்மணம்பேடு பஸ் நிலையம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி நின்றுவிட்டது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் விசாரணையில் 1998–ம் ஆண்டு மேல்மணம்பேடு பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்கராஜுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதற்கு பழிக்குப்பழி வாங்கவே மர்மநபர்கள் அவரை படுகொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த ஊராட்சியில் தங்கராஜின் மனைவி நிறைமதி போட்டியிடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே தேர்தல் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை மறியல், கடையடைப்பு

ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் மேல்மணம்பேட்டில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அவ்வழியாக சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொலையை கண்டித்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈ.டி.சாம்சன் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் மேல்மணம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது  dailythanthi.com

கருத்துகள் இல்லை: