சனி, 15 அக்டோபர், 2016

வதந்தி என்ற பெயரில் கைதா? - கண்டிக்கும் ராமதாஸ்!

மின்னம்பலம்.காம் : தமிழக முதல்வர் தொடர்பாக வதந்தி பரப்பியதாக இதுவரை பலர் பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கோவையைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய கைதுகள் எதையோ திசை திருப்பவும், யாரையோ அச்சுறுத்தவும் செய்யப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 24 நாட்கள் ஆகின்றன. மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது உடல்நிலை தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழக காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து வதந்தி பரப்புவதாக 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்த தமிழக காவல்துறையினர் அவர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறை கூறும் காரணம் நம்பும்படியாக இல்லை.
கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி புனிதா தேவி என்பவர் சொந்த வேலைக்காக அங்குள்ள வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரும், அவருக்கு தெரிந்த இன்னொருவரும் அரசியல் நடப்புகள் பற்றி பேசியுள்ளனர். அடுத்த சிறிது நேரத்தில் அவர்களின் உரையாடல் முதல்வரின் உடல்நிலை குறித்து திரும்பியுள்ளது. அதைக் கேட்ட வங்கி ஊழியர்களான ரமேஷ், சுரேஷ் ஆகியோர் முதல்வரின் உடல்நிலை குறித்து சில ஐயங்களை புனிதா தேவியிடம் கேட்டுள்ளனர். அவற்றுக்கு புனிதா தேவி விளக்கமளித்திருக்கலாம் அல்லது கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் இருவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து எதிர்மறையான தகவல்களை தெரிவித்ததாக காவல்துறையில் புனிதா புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வங்கி ஊழியர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
உண்மையில் வங்கியில் நடந்தது வேறு. வங்கி ஊழியர்கள் இருவரும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தங்களின் செல்பேசியில் வந்த செய்தி குறித்து பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதைப் பார்த்த அதிமுக நிர்வாகி, அவரது யூகத்தின் அளித்த புகாரின் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இதில் உள்ளூர் அரசியலும் இருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி அளித்த அழுத்தத்தின் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இது முழுக்க அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. கட்சி எல்லைகளைக் கடந்து அனைவருமே முதலமைச்சர் நலம் பெற வேண்டுகின்றனர். இவற்றைத் தாண்டி முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் ஒருகட்டத்தில் பரவின. எனினும், கடந்த 6ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனை விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட்ட பிறகு வதந்திகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. ஆனாலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பொதுமக்கள் உரையாடுவது தொடர்கிறது. இது இயல்பான ஒன்று தான். இதற்காக வழக்குப்பதிவு செய்து மக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது என்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.
தமிழக மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை தான் தமிழகத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகளையும், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இயற்கையான ஒன்று தான். முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே அவரது உடல்நிலை குறித்த உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி இருந்தால், முதலமைச்சரின் உடல்நிலை என்பது விவாதத்துக்குரிய பொருளாக இல்லாமல், நலம் பெற வேண்டுதலுக்குரிய பொருளாக மாறியிருக்கும். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அடுத்த நாளே முதலமைச்சர் முழுமையாக குணமடைந்து வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கி விட்டார் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம் தான், அடுத்த சில நாட்களில் முதல்வருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது, இன்னும் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்தது. இத்தகைய முன்னுக்குப்பின் முரணான தகவல்கள்தான் மருத்துவமனை அளிக்கும் தகவல்கள் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தி, வதந்திகள் பரவ வாய்ப்பை உருவாக்கின என்பதை எவரும் மறுக்க முடியாது.
முதலமைச்சரின் உடல்நிலை குறித்து ஐந்து நாட்களாக எந்த மருத்துவ அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், ஒவ்வொருவரும் தாங்கள் கேள்விப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க முடியாது. இதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் 90% மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி, முதலமைச்சரின் உடல்நலம் குறித்து பேசிக் கொள்பவர்கள் அனைவரும் அவருக்கு எதிரானவர்கள் அல்ல... அவர் மீது கொண்ட அக்கறை காரணமாகத் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். உள்நோக்கத்துடன் முதல்வரின் உடல்நிலை குறித்தும், மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் திட்டமிட்டு வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வங்கியில் பேசிக் கொண்டிருந்தார்கள், தெருமுனையில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று அதிமுக-வினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் கைது செய்வது அரசியல் பழிவாங்கலுக்கும், அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படுவதற்கும், ஜனநாயக படுகொலைக்கும் வழிவகுத்துவிடும்.
எனவே, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். முதலமைச்சரின் உடல்நிலை குறித்த உண்மைகளை அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையாக தினமும் வெளியிட்டு முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதை அரசு தடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: