ஞாயிறு, 9 அக்டோபர், 2016

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு முன் பட்டாசு கொழுத்தியது யார் ஆதரவாளர்கள்?


ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையில் இருப்பதால் துணை முதல்வர் பொறுப்புக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமா... எடப்பாடி பழனிசாமியா என்ற யுத்தம் இப்போது அதிமுக-வில் தொடங்கி இருக்கிறது. பன்னீர் மீது சசிகலா குடும்பத்தினர் கோபத்தில் இருப்பதால், பொறுப்பு முதல்வர் அல்லது துணை முதல்வர் வாய்ப்பு எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. பழனிசாமி வீட்டுக்கு முன்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடிக்கத் தயாராக இருந்ததையும், பழனிசாமி குடும்பத்தார் அவர்களை திட்டி அனுப்பியதையும் மின்னம்பலத்தில் எழுதியிருக்கிறோம். இந்த விவகாரத்தை கவனித்த உளவுத்துறை போலீஸ், அரசுக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது.
அதில், ‘எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு முன்பு பட்டாசு வெடிக்க காத்திருந்தவர்கள் செம்மலை மற்றும் எம்.கே.செல்வராஜ் ஆதரவாளர்கள். இதில் செம்மலை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிசாமியோ கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி, செம்மலை, எம்.கே.செல்வராஜ் ஆகிய மூவருமே தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு முன்பு பட்டாசு வெடித்தால் அது அவருக்கு சிக்கலை உண்டாக்கிவிடும் என்பதால்தான் இப்படி ஒரு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்' என்று சொல்லப்பட்டு இருந்ததாம். இந்த தகவல்கள் அனைத்தும் சசிகலா பார்வைக்கும் போயிருக்கிறது. ‘செம்மலை, செல்வராஜ் ஆகிய இரண்டு பேர்கிட்டயும் விசாரணை நடத்துங்க...’ என்று கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் சசிகலா. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான காய் நகர்த்தல் நிறைய இருந்தாலும் அதையும் தாண்டி ரேசில் முன்னேறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: