செவ்வாய், 31 மே, 2016

உலகில் அடிமைகள்: இந்தியா 1.83 கோடி பேருடன் சர்வதேச அளவில் முதலிடம்

கோப்புப் படம்: ஏஎஃப்பி
கோப்புப் படம்: ஏஎஃப்பி
சர்வதேச அளவில் 4.6 கோடி பேர் நவீன அடிமைகளாக இருப்பதாகவும், அந்த எண்ணிக்கையில் 1.83 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அதேவேளையில், நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடப்படும்போது, சதவீத அடிப்படையிலான நாடுகள் பட்டியலில் வடகொரியா முதலிடத்தில் உள்ளது.
பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தல் ஆகியவற்றில் அச்சுறுத்தலுடன் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுபவர்கள், கொத்தடிமைத் தொழிலாளர்களே நவீன அடிமைகள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான 'வாக் ப்ரீ பவுண்டேஷன்' நிறுவனம் சர்வதேச அளவில் நவீன அடிமைகள் குறித்த இந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை ‘குலோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:
* உலகம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 4.58 கோடி பேர் நவீன அடிமைகளாக உள்ளனர். இது கடந்த 2014-ம் ஆண்டில் 3.58 கோடியாக இருந்தது.
* அடிமைகள் அதிகம் உள்ள 167 நாடுகள் பட்டியலில் (எண்ணிக்கை அடிப்படையில்) 1.83 கோடியுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது கடந்த 2014-ல் 1.43 கோடியாக இருந்தது.
* இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா (33.9 லட்சம்), பாகிஸ்தான் (21.3 லட்சம்), வங்கதேசம் (15.3 லட்சம்) மற்றும் உஸ்பெகிஸ்தான் (12.3 லட்சம்) ஆகிய ஆசிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
* உலகில் உள்ள மொத்த நவீன அடிமைகளில் 58 சதவீதம் பேர் (2.66 கோடி) இந்த 5 நாடுகளில் உள்ளனர்.
* இந்தப் பட்டியலில் சதவீத அடிப்படையில் வடகொரியா முதலிடத்தில் உள்ளது. அதாவது, அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 4.37 சதவீதம் பேர் அடிமைகளாக உள்ளனர்.
* சதவீத அடிப்படையிலான பட்டியலில், உஸ்பெக்ஸ்தான், கம்போடியா, இந்தியா மற்றும் கத்தார் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
அடிமைகள் அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், அடிமைத்தனத்தை ஒழிக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஆள் கடத்தல், அடிமைத்தனம், குழந்தை பருவ பாலியல், கட்டாய திருமணம் ஆகியவற்றை கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்த பவுண்டேசன் தலைவர் ஆண்ட்ரூ பாரஸ்ட் கூறும்போது, “அடிமைத்தனத்தை ஒழிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும். குறிப்பாக, உலகின் முதல் 10 பொருளாதார நாடுகள், பிரிட்டன் நவீன அடிமை சட்டம் 2015-ஐ போல கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும்” என்றார்.   //tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: