இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கை:
அரசு அதிகாரிகளை தேர்தல் பணிக்குப் பயன்படுத்திய ஜெ.வுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படாதா?
12-6-1975 - இந்தியாவின் நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அன்று தான் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பை அளித்த நீதிபதியின் பெயர் ஜகன் மோகன்லால் சின்ஹா. ஆம், அவருடைய பெயரும் சின்ஹாதான்! இந்திரா காந்தி தனது தேர்தல் வெற்றிக்காக இந்திய சர்க்காரின் கெஜட் பதிவு பெற்ற அதிகாரியாகப் பணியாற்றிய யஷ்பால்கபூர் அவர்களை தனது தேர்தல் வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்திக் கொண்ட விதி மீறலையும் இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களில் உத்தரபிரதேச அரசு செய்த ஏற்பாடுகளையும், போலீஸ் படைகளை அங்கு காவல் போட்ட வகையில் விதி மீறல் செய்தார் என்பதையும் நீதிபதி அப்போது தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இது 1975.
2016 ஆம் ஆண்டு மே 12ஆம் தேதியோடு பிரசாரத்தை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, அதற்குப் பிறகு அறிக்கைகள் வாயிலாக வாக்குகளைக் கேட்டு வந்தார். அவ்வாறு மே 14ஆம் தேதி மதியம் 1.06 மணிக்கு அ.தி.மு.க. தோழர்களுக்கு ஜெயலலிதா விடுத்த அறிக்கையை, போயஸ் கார்டனிலிருந்து, முதலமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி, அரசிடமிருந்து மாதந்தோறும் ஊதியம் பெற்று வரும், தங்கையன் என்பவர், தலைமைச் செயலகத்திலுள்ள செய்தி வெளியீட்டுப் பிரிவுக்கு அனுப்புகிறார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்ட இயக்குநர் குமரகுருபரன், கூடுதல் இயக்குனர் எழிலரசன், உதவி இயக்குநர் சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அலுவலர் கலைநேசன் (இவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் தம்பி), அமைச்சர் வைத்திலிங்கத்தோட சொந்தக்காரரான உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராகுல், ஓ.பி.எஸ்.க்கு நெருக்கமானவரான துணை இயக்குநர் செல்வராஜ், (இவர்கள் அனைவரும் அரசிடம் மாதந்தோறும் ஊதியம் பெறுவோராகும்) ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, உடனடியாக அனைத்து மாவட்ட பி.ஆர்.ஓ. அலுவலகங்களுக்கும் ஜெயலலிதாவின் கட்சி அறிக்கையை அனுப்பி, அதனை ஊடகங்களுக்கு அனுப்பச் செய்திருக்கிறார்கள்.
இது பற்றி தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உடனடியாக கழக அமைப்புச் செயலாளர் மூலமாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் இல்லை. தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருப்பார்கள். கட்சி சம்பந்தப்பட்ட அறிக்கைகளை எல்லாம் அந்தந்த கட்சி அலுவலகத்திலிருந்து தான் ஊடகங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அ.தி.மு.க. கட்சி சம்மந்தப்பட்ட அறிக்கையை கட்சி அலுவலகத்திலிருந்து அனுப்பாமல், அரசு மெயில் ஐ.டி. மூலம் அனுப்பியிருக் கிறார்கள்.
1975ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அரசு அலுவலரைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதற்காக, இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 2016இல் அதே குற்றத்தைச் செய்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுமா? செயல்படாதா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு செய்யும் கமிஷனா என்று திமுக தலைவர் கருணாநிதி ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக