சனி, 4 ஜூன், 2016

புதுச்சேரியில் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் அமைச்சர்கள்.. வைத்திலிங்கம் சபாநாயகர்

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை நாளை மறுதினம் பதவியேற்க உள்ளது. புதுவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சர் பதவிக்கு முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர். வைத்திலிங்கம் விலகி கொண்டதால் நாராயணசாமி, நமச்சிவாயம் இடையே போட்டி உருவானது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலானோர் நாராயணசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் பதவி ஏற்பு தள்ளிப்போனது. முதல்-அமைச்சர் பதவி போட்டியில் இருந்து விலகிய வைத்திலிங்கம் தனக்கு 2-ம் நிலை அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டார். அதே பதவியை நமச்சிவாயமும் கேட்டார். இதனால் யாருக்கு 2-ம் நிலை அமைச்சர் பதவி வழங்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.


இதுதவிர பலரும் அமைச்சர் பதவி கேட்டார்கள். ஆனால் புதுவையில் முதல்-அமைச்சர் உள்பட 6 பேர் தான் அமைச்சர்களாக இருக்க முடியும். அதிகம் பேர் பதவி கேட்டதால் அமைச்சர் பதவி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டது.

இதனால் நாராயணசாமி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், வைத்திலிங்கம், கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களிடம் வற்புறுத்தி வந்தனர்.

அதிகம் பேர் அமைச்சர் பதவி கேட்பதால் வைத்திலிங்கத்திற்கு சபாநாயகர் பதவி தருவதாக கூறினார்கள். ஆனால் அதை அவர் ஏற்க மறுத்து வந்தார். மேலிட தலைவர்கள் வற்புறுத்தியும் அவர் பிடிவாதமாக இருந்தார்.

இந்த நிலையில் டெல்லி சென்றிருந்த புதுவை தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து பிரச்சனை பற்றி கூறினார்கள். வைத்திலிங்கமும் சோனியாவை தனியாக சந்தித்து தனக்கு அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஆனால் அவரது கோரிக்கையை மேலிட தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வைத்திலிங்கத்துக்கு சபாநாயகர் பதவி வழங்குவது என்று முடிவு எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து யார்-யார் அமைச்சர்கள் என்று முடிவு எடுக்கப்பட்டது. நமச்சிவாயத்துக்கு 2-ம் நிலை அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 4 பேர் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று மாலை டெல்லியில் இருந்து திரும்பிய நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ஜூன் 6-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என உறுதி செய்தார்.

எனவே, முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆறுபேர் கொண்ட புதிய அமைச்சரவை நாளை மறுநாள் (6-ம் தேதி) பதவி ஏற்றுக் கொள்கிறது. புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் பகல் 12.10 மணியளவில் முதலமைச்சராக நாராயணசாமி பதவியேற்க உள்ளார். மேலும், நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணா ராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். அவர்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: