வெள்ளி, 3 ஜூன், 2016

திமுகவில் கடும் உள்வீட்டு விசாரணை... உள்ளடி வேலை பார்த்தவங்களுக்கு சீட்டு காலி?

சட்டசபை தேர்தலில், கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலை பார்த்து, கட்சித் தோல்விக்கு காரணமாக இருந்தவர்கள் மீது தலைமைக்கு குவியும் புகார்கள் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க துவங்கி உள்ளது தி.மு.க., அதில் முதல் பலி - அ.தி.மு.க., அமைச்சரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை எப்படியும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக, கடந்த இரண் டாண்டு களாக கடும் பணியாற்றி வந்தார், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின். கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும், தேர்தல் பணியில் ஈடுபட துாண்டினார். அந்தப் பணியில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட மொத்த குடும்பமும், தீவிரமாக களம் இறங்கி செயல்பட்டது. கட்சியின் மகளிர் அணி செயலர் கனிமொழியும், களம் இறங்கி பணியாற்றினார்.


இருந்த போதும், கட்சி தோல்வி அடைந்ததில், ஒட்டுமொத்த தி.மு.க.,வும் கலங்கி நிற்கிறது.
தி.மு.க., கூட்டணி கிட்டத்தட்ட நுாறு இடங்களில் வெற்றியை பெற்றிருந்தாலும்,

ஆட்சி அமைக்கத் தேவையான, 118 என்ற மந்திர எண்ணை தொடாததற்குக் காரணம், கட்சிக்குள் இருந்தபடியே உள்ளடி வேலையில் ஈடுபட்ட கட்சிக்காரர்கள் தான் என்பதை, கட்சித் தலைமை உணர்ந்தது.

அதற்கேற்றபடி, கட்சியில் இருந்தபடியே உள்ளடி வேலை பார்த்தவர்கள் குறித்து, கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத் துக்கு, ஏகப்பட்ட கடிதங்கள் ஆதாரத்துடன் வந்து குவிகின்றன. இப்படிப்பட்ட புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள் பலரும், கட்சித் தலைமையை வற்புறுத்தி வந்தனர்.

இந்நிலையில், வேலுார் மேற்கு மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியச் செயலர் சூரியகுமார் மற்றும் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலர் கே.சி.அழகிரி ஆகியோரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.இதில், அ.தி.மு.க., வேலுார் மாவட்ட செயலரும், வணிகவரித் துறை அமைச்சருமான கே.சி.வீரமணியின் சகோதரர் தான் கே.சி.அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது. தன் சகோதரர் ஜோலார்பேட்டையில் போட்டியிட, அவருடைய வெற்றிக்காக, அனைத்து வேலைகளையும் அழகிரி செய்தார் என்பது தான் குற்றச்சாட்டு.

இது குறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது:நீக்கப்பட்ட இருவருமே, கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டார் என்ற காரணத்துக்காக தான் நீக்கப்பட்டுள்ளனர். ஜோலார்பேட்டையில் தனக்கு, தி.மு.க., சார்பில், 'சீட்' கொடுப்பர் என எதிர்பார்த்த அழகிரிக்கு, 'சீட்' கிடைக்கவில்லை என்றதும், சகோதரர் வீரமணி வெற்றிக்காக பாடுபட்டார். அதே போலவே, சூரியகுமாரும், அ.தி.மு.க., வெற்றிக்காக பாடுபட்டுள்ளார். இவர்களைப் போலவே, தமிழகம் முழுவதும் பலர், சொந்த கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தலில் செயல்பட்டு தோற்கடித்துள்ளனர்.

குறிப்பாக, திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலர் துரைராஜ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் வேணு, முன்னாள் அமைச்சர் இழித்துரை ராமச்சந்திரன், கோவை வீரகோபால் ஆகியோர் மீது, ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளன.இப்படி வந்திருக்கும் புகார்கள் மீது தீவிர விசாரணை நடக்கிறது. புகார்கள் உண்மையென்றால், மாவட்ட செயலர்களாக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதனால், பல மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.- நமது நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை: