வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

இறுதிச்சுற்று: தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும்...எதுக்கு பாலசந்தர் பாணி?

வே.மதிமாறன்: ‘முழுமையாக முடிக்கப்பட்ட script பிறகு படமாக எடுக்கப்படுகிறது என்ற முறையான சினிமா பாணி, பெண் குத்துச்சண்டையை முதன்மைப்படுத்துகிறது, அதை விட மிக முக்கியம் இயக்குநர் பெண்.’ இந்தக் காரணங்களால் ‘இறுதிச்சுற்று’படம் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று காலை தற்செயலாகத் தொலைக்காட்சியில் அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி, சூழல் மீனவ கிராமம். வீடு. நாயகியின் தந்தை சாமிக்கண்ணு, குடித்துவிட்டு வந்து ‘நான் இனி சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்’ என்கிறார். மனைவி, மகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘அடப்பாவி காசுக்கு மதம் மாறிட்டியா?’ என்று சாமிக்கண்ணு என்கிற சாமுவேலை தொடப்பைக் கட்டையாலேயே அடிக்கிறார்கள்.
கர்ப்பிணியைக் கொலை செய்த ஆர்.எஸ்.எஸ். மதவெறியன் சினிமா எடுத்தால் கூட இவ்வளவு இந்து மதவெறியுடன் இழிவான காட்சியை வைத்திருப்பானா?
கிறிஸ்துவத்திற்கு மதமாறிய மீனவர்கள் எல்லோரும் சாராயத்திற்கும், பணத்திற்கும் தான் மாறினார்களா?

சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகை, திருந்செந்தூர், ராமேஸ்வரம் வரை மீனவர்கள் இந்துக்கள் தான். ஆனால், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் மீனவர்கள் 100 சதவீதம் கிறஸ்துவர்கள். கத்தோலிக்கக் கிறஸ்துவர்கள்.
இந்து மீனவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும், கிறித்துவ மீனவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. குறிப்பாகக் கல்வியில், பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதுபோன்று.
கிறிஸ்துவ மீனவர்கள் ஏறக்குறைய எல்லோரும் படித்திருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் இந்து மீனவ பெண்களை விட அதிகம் படித்தவர்கள். அதுமட்டுமல்ல சென்னை, கடலூர் போன்ற பகுதிகளில் மனிதர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற இத்துப்போன குடிசைகளிலும், சுகாதரமற்ற சூழலிலும் தான் இந்து மீனவர்கள் வாழ்கிறார்கள்.
தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கிறித்துவ மீனவர்கள் குடியிருப்புகளில் குடிசைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த மீனவர்களின் கல்விக்கு 300 – 400 ஆண்டுகளுக்கு முன் வந்த கிறிஸ்துவ மிஷ்னரிகள் தான் காரணம். மீனவர்களின் மதமாற்றம் அந்தச் சுயமரியாதையை ஒட்டிதான் நடந்தது.
சரி. நூற்றாண்டு சங்கதிகளை விடுங்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 24 அன்று, சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்து மீனவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினார்கள். எத்தனை சுனாமி வந்தாலும் தாங்குக்கூடிய பிரம்மாண்ட சுவர்களைக் கொண்ட பார்த்தசாரதி, கபாலீஸ்வரர் கோயில்களின் மிகப் பெரிய கதவுகள், உயிர்காக்க ஓடி வந்த இந்து மீனவர்களைப் பார்த்ததும் மூடிக் கொண்டது.
திருஞானசம்பதனும், திருநாவுக்கரசும் திரும்ப வந்து, சன் மியுசிக் போல் ஓயாமல் பாடியிருந்தாலும் ஒருபோதும் திறந்திருக்காது.
மயிலையிலிருந்த ராமகிருஷ்ண மடமோ கண்ணை மூடிக் கொண்டு, ‘ஹரே ராம.. ஹரே கிருஷ்ண..’ என்று பஜனை பாடிக் கொண்டிருந்தது.
ஏனென்றால், இந்து மீனவர்களை இந்து கோயில் உள்ளே தங்க வைப்பது ஆகம விதிகளின் கீழ் வராது. காரணம்,
இந்து மதத்திற்கு மனிதர்களின் உயிரை விடவும் ‘புனிதம் – ஆச்சாரம்’ என்ற புனைப்பெயரில் இருக்கிற ‘ தீண்டாமை’ தான் முக்கியம்.
ஆனால், 100 சதவீதம் இந்து மீனவர்களை அதே கடற்கரையிலிருந்த சாந்தோம் தேவாலயம் தான் அடைக்கலம் தந்து பாதுகாத்தது. சுயமரியாதையோடு இந்து மீனவர்கள் அப்போதே கிறிஸ்துவ மதத்திற்கு மாறியிருக்க வேண்டும்.
ஆக, ஒருவர் இந்து மதம் மாறியதற்கே, தொடப்பைக் கட்டையாலேயே அடிப்பது போல் காட்டினால், இந்துக்களின் உயிரை பாதுகாக்காமல் விரட்டியடித்த இந்து ஆகமங்களையும், நிறுவனங்களையும் எதைக் கொண்டு அடிப்பது?
இயக்குநர் சுதா கோங்கரா; மணிரத்தினித்தின் உதவியாளராக இருந்தவராம். இன்னும் என்னென்ன கத்து வைச்சிருக்காரோ?
பாரதியார்;
‘ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக ‘பெண் கல்வி வேண்டும்‘ ‘பெண் கல்வி வேண்டும்‘ என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பாதிரிப் பள்ளிக்கூடத்திற்குப் போய் பைபிள் வாசித்துக் கொண்டுவரும் பொருட்டாகத்தானா? ’ என்று கோபத்துடன் வருத்தப்பட்டார்.
பாரதியின் வரிகளையே கொஞ்சம் மாற்றி இப்படிச் சொல்கிறேன்: , ‘ஐயோ! எத்தனையோ வருஷ்ங்களாக ‘பெண் இயக்குநர் வேண்டும்‘ ‘பெண் இயக்குர் வேண்டும்‘ என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் மணிரத்தினம் மாதிரி சினிமா எடுக்கவரும் பொருட்டாகத்தானா? ’
31 January at 22:50
எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணி?
Mary Kom உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ந்து 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியா பெண். உலகளவில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் 4 ஆவது இடத்தில் இருப்பவர்.
மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்.(ST) கிறிஸ்துவர். இவர் வாழ்கிற மணிப்பூர் மாநிலமே கிறிஸ்துவர்களால் நிரம்பியதுதான்.
இப்படியிருக்க, ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் தன் படத்தில் குத்துச்சண்டை வீரராக உருவாகும் பெண், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய தன் தந்தையைத் தொடப்பக் கட்டையாலேயே, அடிப்பதாகக் காட்டியது, கிறிஸ்துவர்கள் மீது சுதா கோங்கரா செய்த வன்முறை.
நேர்மையாகப் படம் எடுப்பதாக இருந்தால் தன் நாயகியை கிறிஸ்துவராகதான் காட்டியிருக்க வேண்டும். Mary Kom வாழ்க்கை வரலாறு இந்தியில் 2014 ஆம் ஆண்டுத் திரைப்படமாக வந்தது.
பிரியங்கா சோப்ரா தான் Mary Kom ஆக நடித்திருந்தார். அந்தப் படத்தைச் சுதா கோங்கரா கண்டிப்பாகப் பார்த்திருப்பார். இருந்தும், என்ன பயன்?
இந்தியா முழுவதும் குத்துச்சண்டை வீராங்கணைகளை ஒருங்கிணைத்துப் படம் எடுத்ததாகச் சொல்கிறார் சுதா. கண்டிப்பாக அவர்களில் பலர் கிறிஸ்துவர்களாகவும் முஸ்லிம்களாகவும் தான் இருந்திருப்பார்கள். அப்படியிருந்தும் ஏன் இப்படி?
ஒருவேளை அந்தக் கடுப்புலதான் இப்படிக் காட்சி வைத்திருப்பாரோ?
எதுக்கு இந்தப் பாலசந்தர் பாணி. அவர் பாணி சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கே எதிரானது.
3 February

கருத்துகள் இல்லை: