சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் சாய்சுபோதயா என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் ‘பாங்க் ஆப் மகாராஷ்டிரா’ என்ற வங்கியும், வணிக வளாகமும் உள்ளது.
வங்கியின் மேலாளர் வெங்கடேஷ் (45) வங்கியின் அருகே நிறுத்தி இருந்த காரை வெளியே செல்வதற்காக ஓட்டி வந்தார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.
கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், குடியிருப்பின் வாசல் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்த 5 பேர் மீதும் மோதியது. தொடர்ந்து ஓடிய கார், அங்குள்ள ஒரு கட்டிடத்தில் மோதி நின்றது.
அங்கிருந்தவர்கள் 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி அப்துல்ரகீம், பியாரிலால் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த வங்கி மேலாளர் வெங்கடேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக