செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழக தேர்தல் மே -14ம் தேதி....18ம் தேதி வாக்கு எண்ணிக்கை....?

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலை மே மாதம் 14ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நாளில் கேரளா, புதுச்சேரிக்கு தேர்தலை நடத்தவும், மே 18ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 12ம் தேதி அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவி காலம் வரும் மே மாதம் 22ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து சட்டசபை தேர்தலை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி, தேர்தல் அதிகாரிகள் அச்சல் குமார் ஜோதி, ஓம்பிரகாஷ்ராவத் ஆகியோர் இன்று மாலையில் புதுச்சேரி சென்று தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துகிறார்கள்.
 
elections for Tamilnadu,Pondy and Kerala states on May 14? இதைத் தொடர்ந்து 10, 11ம்தேதிகளில் நஜீம் ஜைதி தலைமையிலான குழுவினர் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்கள். முதலில் அரசியல் கட்சி பிரதிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், ஊர்க்காவல் படையினர், வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி முழுமையான ஆய்வு நடத்தப்படும். அதன்பிறகு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது 2 கட்டமாக நடத்துவதா? என்பது பற்றி விவாதிக்கப்படும். 
 
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருவதால் ஓட்டுப்பதிவு ஒரே நாளில் இருக்கும் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தலை எப்போது நடத்துவது என்று ஆய்வு செய்யப்படும். பள்ளி, கல்லூரி தேர்வுகள், முக்கிய பண்டிகைகள் எப்போது வருகிறது என்பதற்கு ஏற்ப தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் கடைசி வாரம் வரை பள்ளி இறுதி தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே மே மாதம் தான் தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் மே மாதம் 14ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலை நடத்தவும், மே 18ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், மே 12ம் தேதி அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழகம், புதுச்சேரி, கேரளாவிற்கு மே 14ம் தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மே 18ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தலைமை தேர்தல் அதிகாரிகளின் தென்மாநில பயணம் முடிந்ததும், அவர்கள் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்துவார்கள். அதன்பிறகு தேர்தல் தேதிகளை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 
 
 தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும் என்பதால் ஆளும் கட்சியினர் பரபரப்படைந்துள்ளனர். எனினும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் இந்த மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: