சனி, 13 பிப்ரவரி, 2016

டாஸ்மாக் மட்டுமல்ல கல்வி கொள்ளையையும் தடுக்க வேண்டியது அவசியம்!

edit feb 12aanthaireporter.com பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தகப்பன் பற்றிய செய்தியை படித்த கணத்திலிருந்து இரண்டு குழந்தைகளின் தகப்பனாக அதை எப்படி கடந்து போவது என்று தெரியவில்லை. வேதனையாக இருக்கிறது.ஏழை பணக்காரன் என அனைவ ருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய கல்வி இன்று கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவிட்டது. ஒரு கந்து வட்டிக்காரனிடம் மிச்சம் இருக்கும் இரக்கம் கூட இவர்களிடம் இல்லை. கல்வி ஏன் இவ்வளவு சிக்கலாகிப்போனது. இந்த நிலையை ஆய்வு செய்து பார்த்தால் மறைமுகமாக வர்ணாஸ்ரமத்தை இந்த கல்விக்கூடங்கள் கட்டமைக்கின்றன. அன்று சாதியின் பெயரால்.. இன்று வர்க்கத்தின் பெயரால் அவ்வளவுதான் வித்தியாசம்.
ஏதேனும் ஒரு பள்ளிக்கு போன் செய்து உங்கள் பள்ளி கட்டணம் எவ்வளவு என்று கேட்டு பதில் வாங்கி விடுங்கள் பார்ப்போம்.. சொல்லவே மாட்டார்கள்.
நேரில் வாங்க என்பார்கள். ஏனென்றால் எதிரில் இருப்பவர் ரெக்கார்ட் செய்து மாட்டி விட்டுவாரோ என்ற அச்சம்தான். இவர்கள்தான் நம் பிள்ளை களுக்கு நேர்மையை கற்றுக் கொடுக்கப்போகிறார்கள்.
இப்படி ஒரு நிலை வருவதற்கு பள்ளிகள் மட்டுமே காரணமா..என்றால் இல்லை.பெற்றோர்களுக்கும் இதில் பெரும் பங்குண்டு. இவர்கள்தான் தேடி தேடிப்போய் விழுகிறார்கள். தங்கள் குழந்தைகளை முதலீடாக்குகிறார்கள்.அப்புறம் மார்க் இல்ல.. ரேங் இல்ல.. என்று கூறி பிள்ளைகளை தற்கொலைக்கு தள்ளுகிறார்கள்.
தனியார் பள்ளிகளில்தான் நூறு சதவீத தேர்ச்சிக்காக சற்று சுமார் ரக மாணவர்களுக்கு டி.ஸி கொடுக் கும் தடித்தனம் இருந்தது. தற்போது அது அரசுப் பள்ளிகளுக்கும் பரவி விட்டது. ஏற்கனவே நல்லா படிக்கிறவனை பாஸாக்குறதுக்கு நீங்க என்னத்துக்கு வாத்தியாராகணும்.
இந்த ஆசிரியர்களால் மக்கு..உருப்படாதவன் என்று திட்டி தீர்க்கப்பட்ட மாணவர்கள்தான் இன்று உலகை ஆள்கிறார்கள்.அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் எல்லாம் அவர்களிடம் வேலை பார்க்கிறார் கள்.
ஏழை பணக்காரன் என அத்தனை பேருக்கும் கல்வி பொதுப்படையாக்கப்பட்டிருந்தால் ஏன் இந்த நிலை வரப்போகிறது. அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அனைத்தும் அரசுப்பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் வரட்டும்.. அரசுப்ப ள்ளிகளின் தரம் தானாக மேம்படும்.
கல்வியை சாதாரண மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தவர்கள் என்பதால் கிறிஸ்த்துவ மிஷினரிகள் மீது எனக்கு எப்போதும் ஒரு சிறு மரியாதை உண்டு. ஆனால் இன்று நிலை என்ன..
கிறிஸ்த்துவ மிஷினரிகளால் நடத்தப்படும் அல்லது கிறித்துவர்களால் நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிகளில் துளியும் சேவை மனப்பான்மை இல்லை. ஏன் குறிப்பிட்டு கிறித்துவ மிஷினரிகளை குற்றம் சாட்டுகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். வியாபாரிகளுக்கு நடுவில் கல்வி சேவை என்று வந்தவர்களும் இப்படி கொள்ளையர்களாக மாறிவிட்டார்களே என்ற வருத்தம்தான். ஒரு வியாபாரி கொள்ளையடிக்கலாம்.. ஆனால் சேவை செய்வதாக சொல்பவன் அதை செய்யக்கூடாது.
எனக்கும் என் மனைவிக்கும் இந்த பிரபல அப்பாடக்கர் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒருபோதும் ஆசை கிடையாது. பெற்றோராக எளிதில் சென்று ஆசிரியர்களிடம் உரையாடும் சூழல் இருக்கும் பள்ளிகளே எங்கள் விருப்பம்.
அனுபவத்திற்காக சில விசயங்களை செய்வேன். அப்படிதான் ஒருமுறை சேர்க்கவே விரும்பாத ஒரு பள்ளிக்கு இளமாறனை கூட்டிக்கொண்டு நேர்முகத்தேர்வுக்கு சென்றோம். அது அண்ணா நகரில் இருக்கும் பிரபல பள்ளி. வங்கியின் பெயர் கொண்டது.
மூன்று கட்டமாக மாணவர்களையும் பெற்றோர்களையும் சோதித்தார்கள். அதில் ஒன்று பெற்றோரின் வருமானச் சான்று. இன்கம் டாக்ஸ் ஆபிசர்கள் கூட இப்படி சோதிக்க மாட்டார்கள். தங்கள் பள்ளி யில் பீஸ் கட்டும் அளவுக்கு வருமானம் கொண்டவரா என்பதை முதலிலே தெரிந்து கொண்டு விட்டால் நல்லது என்பதுதான் அதன் தந்திரம்.
எல்லா கட்டங்களையும் தாண்டி இறுதியாக செல்போன்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பிரின்ஸிபல் இருக்கும் அறைக்குள் நுழைந்தோம். அவர் ஒரு இருக்கையில் அமர்ந்து எங்களது விண்ணப்பப் படிவத்தை சும்மா மேய்ந்து கொண்டிருந்தார்.அருகே ஒரு பெண் உதவியாளர் நின்று கொண்டி ருந்தார்.
முதல்வர் வாயைத்திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. (அலார்ட்டா இருக்காங்களாமாம்.. ) உதவியாளர் பெண் தான், “எங்க டிரஸ்ட்டுக்கு எவ்வளவு டொனேஷன் கொடுப்பீங்க” என்று கேட்டார்.
நாங்கள் சும்மா சோதிக்கதான் அங்கு சென்றிருந்தோம் என்பதால், “ஒண்ணும் கொடுக்க மாட்டோம்” என்றார் என் மனைவி. அப்போது அந்த பிரின்ஸி முகத்தில் தோன்றிய பாவனையை பார்க்க வேண்டுமே.. மறக்க முடியாதது.
அவ்வளவுதான் நேர்முகம் முடிந்தது. இந்த அனுபவம் நடந்தபோது எல்கேஜி சீட்டுக்கான டொனே ஷன் அமவுண்ட் 75 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயித்திருந்தார்கள். இப்போது ஒண்ணேகால் லட்சம் என் கிறார்கள்.
புது பகுதிக்கு குடியேற இருப்பதால் இளமாறனுக்கு புது பள்ளியை தேட வேண்டியிருந்தது. கடந்த வாரம் ஒரு பள்ளிக் சென்று விண்ணப்பப் படிவம் வாங்கி நிரப்பிக் கொடுத்துவிட்டு கிளம்ப முயலும் போது, ஒரு ஆசிரியை வேகமாக வந்தார். வராண்டாவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த சில மாணவர்களை எழுப்பி, “ஏண்டா பீஸ் கட்டல.. கால் டிக்கெட் கொடுக்க மாட்டோம்..” என்று ஒரு கந்து வட்டிக்காரனைப்போல் சத்தம் போட ஆரம்பித்தார்.
பீஸ் கட்டலைனா கேட்கிறது சகஜமானதுதான். ஆனால் அந்த ஆசிரியை கேட்ட தொனி ஒரு கந்து வட்டிக் கடைக்காரனை மிஞ்சுவதாக இருந்தது. அவரே ஒரு மாணவனைப் பார்த்து, ரவுடி என்றார். தன் குழந்தையைப்போல் நினைக்க வேண்டிய ஒரு மாணவனை ஒரு ஆசிரியை ரவுடி என்று அழைக்கிறார். இவ்வளவிற்கும் அந்த பள்ளி சிஸ்டர்ஸ்களால் நடத்தப்படுகிறது.
வீட்டுக்கு வந்த பின்னர், அந்த பள்ளி முதல்வருக்கு போன் போட்டு, “உங்கள் பள்ளியில் என் குழந் தையை சேர்த்து கொலை செய்ய விரும்பவில்லை. தயவு செய்து எங்கள் விண்ணப்பத்தை கிழித்து குப்பையில் போடுங்கள்” என்று சொன்னப் பிறகே மனம் நிம்மதியானது.
சென்னையை புரட்டிப்போட்ட மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து விடுபடாத நிலையில் மக்கள் இருந்த சூழலில் கே.கே.நகரில் இருக்கும் பிரபல கிறித்துவப் பள்ளி ஒன்றில் பீஸ் கட்டவில்லை என்பதால் சில மாணவர்களுக்கு பாடபுத்தகம் வழங்கவில்லை என்ற தகவல் கிடைத்தது. அந்த பள்ளிக்கு போன் செய்து விசாரித்தேன்.
அதன் பொறுப்பாளர் ஆமா இல்லையென்று மறுக்கவில்லை. மாறாக எனக்கு தகவல் கொடுத்தது எந்த மாணவன் என்று அறிந்து கொள்வதில்தான் குறியாக இருந்தார். “இந்த நேரத்தில் இப்படி கேவலமா நடந்துக்காதீங்க சார்..” என்று கூறிவிட்டு போனை வைத்தேன். மீடியாக்காரர்களுக்கு தகவல் போய் விட்டதால், இப்போது அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் கொடுக்கப் பட்டுவிட்டதாக தகவல் கிடைத்தது.
இதெல்லாம் சும்மா சாம்பிள்தான். பள்ளிகளை ஆய்வு செய்தால் பெற்றோர்களையும் குழந்தை களையும் தெறிக்க விடும் ஆயிரக்கணக்கான உண்மை சம்பவங்கள் வெளிவரும்.
டாஸ்மாக்கை மூடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த கல்வி கொள்ளையர் களிடமிருந்து நம் பிள்ளைகளை காப்பாற்றுவது.
சாராய வியாபாரம் செய்த ரவுடிகள் கல்வி தந்தைகளாகவும்.. அரசாங்கம் சாராய வியாபாரியாகவும் மாறியதால், கல்வி கட்டணம் கட்ட முடியாத ஒரு ஏழை தகப்பன் தன் பிள்ளையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்கு கொண்டுச் சென்று விட்டது. இதைதான் வல்லரசு வளர்ச்சி என்று நமக்கு போதித்து கொண்டிருக்கிறார்கள்.
-கார்ட்டூனிஸ்ட் பாலா

கருத்துகள் இல்லை: