சனி, 13 பிப்ரவரி, 2016

பாட்டியாலா கோர்ட்டில் ராஜா ஆவேசம்: கொலையுண்டவரை கோர்ட்டில் நிறுத்தட்டுமா?

கிட்டத்தட்ட, கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளேன். சட்டம் வழங்கும்
சலுகைகளை பயன்படுத்தி, என்னை காப்பாற்றி கொள்ளக் கூட நான் விரும்பவில்லை. ஆனால், கொலையுண்ட நபரையே நேரில் அழைத்து வருகிறேன்; நீதி வழங்குங்கள்,” என, முன்னாள் அமைச்சர் ராஜா கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.'2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு விவகாரத்தில், சி.பி.ஐ., தரப்பின் இறுதி வாதம் முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்கள், எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ராஜாவின் வாதம் எப்படியிருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, டில்லி பாட்டியாலா கோர்ட்டில், அவருக்கு சீனியர் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. மாறாக, மனுசர்மா என்ற இளம் வழக்கறிஞரே ஆஜராகி வருகிறார். இருப்பினும், பெரும்பாலான வேளைகளில், ராஜாவே, நீதிபதி ஷைனியின் முன், தன் வாதங்களை வைக்கிறார்.  இது  பிஜேபி மற்றும் அரசு நிர்வாகத்தில் இருக்கும் R.S.S. கைகூலிகள் சேர்ந்து உருவாகிய சதி வழக்கு. அதனால் தான் ஜீரோ லாஸ் என்பதை மாற்றி கற்பனையான 1.76 லட்சம் கோடி என உத்தேச குற்ற சட்டை விநோத்ராய் கூறினார். அந்த விநோத்ராயிக்கு இந்த பிஜேபி அரசில் பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது....
குறிப்பாக, மத்திய தணிக்கை குழு, சி.பி.ஐ., ஆகிய தரப்பினர் தொடுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையையே, கேள்விக்கு உள்ளாக்குவதும், அது தொடர்பான முக்கிய ஆவணங்களை, ஆதாரத்துடன், கோர்ட்டில், ராஜா தரப்பு சமர்ப்பித்தும் வருவதால், வழக்கில் விறுவிறுப்பு காணப்படுகிறது. 


பிரணாப்பை ஏன் விசாரிக்கவில்லை?
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த கொள்கை முடிவு எடுக்க, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தலின்படி, 2007 டிச., 26ம் தேதி, பிரணாப் முகர்ஜி இல்லத்தில், சொலிசிடர் ஜெனரல் வாகனவதி உட்பட, மூவரும் ஆலோசித்தோம். 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை' என்ற கொள்கை முடிவு, அக்கூட்டத்தில் தான் எடுக்கப்பட்டது. இந்த கூட்டமே நடக்கவில்லை என, வாகனவதி கூறும் பொய் வாக்குமூலத்தை, சி.பி.ஐ., ஏற்றுக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.
சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான வாகனவதி, ஒன்றை கூறுகிறார். ராஜாவோ குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளார். இன்னொருவராக, பிரணாப் முகர்ஜி இருந்தாரே! கூட்டம் நடந்ததா இல்லையா என, அவரிடம், சி.பி.ஐ., ஏன் விசாரிக்கவில்லை? தவிர, தன் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி, பிரணாப் முகர்ஜியே, நேரடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். வாகனவதி எழுதிய குறிப்பும் உள்ளது. இந்த இரு கடிதங்களும்,இப்போதும் கூட, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய, பொதுக்கணக்கு குழு ஆய்வறிக்கையின் முக்கிய ஆவணங்களாக உள்ளன. தவிர, பிரணாப் முகர்ஜி இல்லத்தில் நடந்த ஆலோசனை குறித்த ராஜாவின் கடிதம், பிரணாப் முகர்ஜியின் கடிதம், வாகனவதியின் கடிதம் ஆகிய மூன்றையும், பிரதமர் அலுவலகம் பரிசீலித்து, சரியாக உள்ளதென, பிரதமரிடம் கருத்து தெரிவித்த ஆவணமும் உள்ளன. ஆனால், இவை அனைத்தையுமே, சி.பி.ஐ., மறைத்து விட்டது. மாறாக, 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை' என்ற முடிவை, ராஜா தன்னிச்சையாக மேற்கொண்டதாக, தன் குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

அந்த கூட்டம் அதற்காக அல்ல:
புதிய உரிமங்கள் வழங்குவதற்காக, 2008ம் ஆண்டு, ஜன., 9ம் தேதி, ஒரு கூட்டத்தை நடத்த தொலைத் தொடர்பு ஆணையம் திட்டமிட்டதாகவும், அதை வேண்டுமென்றே, ஜன., 15ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டதாகவும், சி.ஏ.ஜி., அறிக்கை கூறுகிறது. இதன்மூலம், மத்திய நிதியமைச்சகத்துக்கு தெரியாமல், புதிய உரிமங்கள் வழங்க திட்டமிடப்பட்டது என்பதே குற்றச்சாட்டு. சி.ஏ.ஜி., அறிக்கை, முதலில் வழக்கமானது அல்ல. மீடியாக்களில் பெரிதாக செய்தி வெளியானதால், இந்த ஆய்வு செய்ததாக குறிப்பிடுகிறது. 2010ம் ஆண்டு, ஆக., 31ம் தேதி, தொலைத் தொடர்பு செயலர் தாமஸ் எழுதினார். அதில், 'ஜன., 9ம் தேதி நடப்பதாக இருந்த அக்கூட்டத்தில், புதிய உரிமங்கள் குறித்து ஆலோசிக்கும் திட்டமிடப்படவில்லை; கூடுதல்ஸ்பெக்ட்ரத்தை அனுபவித்து வரும் பழைய நிறுவனங்களிடமிருந்து, கூடுதல் வருவாய் ஈட்டுவது தொடர்பாக மட்டுமே விவாதிக்கப்பட இருந்தது' என்று குறிப்பிட்டு உள்ளார்.இதை மறைத்துவிட்டு, 'புதிய உரிமங்கள் வழங்குவதற்கான கூட்டம் அது' என, தன் இஷ்டம் போல முடிவெடுத்து, சி.ஏ.ஜி., தவறாக அறிக்கை தயாரித்துள்ளது. ஆக, அடிப்படையே தவறாக உள்ள அந்த அறிக்கையை வைத்து, சி.பி.ஐ., தொடர்ந்த இந்த வழக்கும் தவறானது. இவ்வழக்கின் மூல கர்த்தாவான, சி.ஏ.ஜி.,யை, கோர்ட் சம்மன் செய்ய வேண்டும்.

ஏலமா விட சொன்னார் சிதம்பரம்?
மேலும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம், ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடச் சொல்லி குறிப்பு எழுதியதாகவும், அது மீறப்பட்டதாகவும் சொல்வதும் தவறு. அவர், தன் கடிதத்தில் குறிப்பிடுவதெல்லாம், கூடுதல் ஸ்பெக்ட்ரத்தை மட்டுமே.அக்கடிதத்தில், 'ஏற்கனவே உள்ள நிறுவனங்கள், குறிப்பிட்ட அளவுக்கும் அதிகமாக, ஸ்பெக்ட்ரத்தை அனுபவித்து வருகின்றனர். எனவே, புதியவர்களுக்கோ, பழையவர்களுக்கோ, இனிமேல் யார் கேட்டாலும், கூடுதலாக உள்ள ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும்' என, குறிப்பிடுகிறார். சிதம்பரத்தின் கடிதத்தை முழுவதுமாக கவனத்தில் கொள்ளாமல், தங்களது வசதிக்கேற்ற வரிகளை மட்டும் எடுத்து, என் மீது குற்றஞ்சாட்டுவது தவறு.

ஆவணங்களை நேரில் நிறுத்துகிறேன்:
ஒரு கட்டத்தில், நீதிபதியை நோக்கி, ராஜா, “சி.ஏ.ஜி., தயாரித்த தவறான அறிக்கையை, அப்படியே சுப்ரீம் கோர்ட்டும் ஏற்றுக் கொண்டதால், 15 மாதங்கள், நான் சிறையில் இருந்தேன். இது, எனக்கு இழைக்கப்பட்ட அநீதி. நான், இவ்வழக்கில், கிட்டத்தட்ட கொலைக் குற்றவாளி போல நிறுத்தப்பட்டு உள்ளேன். நிரபராதி என நிரூபிக்க, சட்டம் வழங்கும் சலுகைகளை கூட, நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், நான் கொலை செய்துவிட்டதாக, அனைவராலும் கூறப்படும் நபரையே, அசைக்க முடியாத ஆவணங்கள் வடிவத்தில், நேரில் அழைத்து வந்து, உங்கள் முன் நிறுத்துகிறேன். அப்போதாவது, எனக்கு நீதி கிடைக்கட்டும்,” என்றார்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை: