சனி, 28 நவம்பர், 2015

சினிமா புத்தகங்கள்-1 சினிமா ஒரு கனவை போன்றது. கனவில் வரும் இமேஜ்கள் தொடர்ச்சியற்று....

Making moviesதமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது?’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது?’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த புத்தகத்தில் அழகாக விவரிக்கிறார் டேவிட் மேமட். எப்படி ஒரு காட்சியை இயக்குவது என்பதற்கு அவர் சொல்லும் பதில்கள் எப்படி ஒரு காட்சியை எழுதுவது என்பதற்கும் பொருந்துவதால், இந்த புத்தகம் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும்.
இயக்குனரின் வேலை என்ன என்ற பிரதான கேள்விக்கு மேமட் சொல்லும் பதில், “திரைக்கதையில் இருந்து ஷாட் லிஸ்ட் எடுப்பதே இயக்குனரின் வேலை. செட்டில் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. விழிப்பாக இருந்தாலே போதும்.” என்பதே.

கேமராவை எங்கே வைப்பது என்பதை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம், முதலில் ஒரு காட்சி எதைப் பற்றியது என்பதை கண்டுகொண்டாலே போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்றே மேமட் சொல்கிறார். ஒரு காட்சி பல எளிமையான இமேஜ்களின் தொகுப்பாக இருத்தல் வேண்டும் என்கிறார் அவர். “சினிமா ஒரு கனவை போன்றது. கனவில் வரும் இமேஜ்கள் தொடர்ச்சியற்று இருப்பது போல், சினிமாவும் இருத்தல் வேண்டும்.” இது மிக அழகான எளிமையான விளக்கம் என்றே சொல்ல வேண்டும்.
உதாரணமாக ஒரு காட்சி சொல்லலாம்.
ஒரு மைதானத்தில் ஒருவன் மட்டும் மற்றவர்களைவிட அதிகமாக பயிற்சி செய்கிறான் என்பதை எப்படி சொல்லிடலாம்? முதல் ஷாட்டில் (mid-shot) ஒருவன் வேர்க்க ஓடிக்கொண்டிருக்கிறான். அடுத்த ஷாட்டில் பலரும் மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மூன்றாவதாக ஒரு லாங் ஷாட்டில் பெரிய மைதானத்தில் அவன் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறான். இங்கே மூன்று ஷாட்களில் நம்மால் கதையை சொல்லி விட முடிகிறது. இதை தான் மேமட் இமேஜ்களின் தொகுப்பு என்கிறார்.
இமேஜ்களைப் பற்றி சொல்லும் மேமட், ஒவ்வொரு ஷாட்டிற்கும் தனியான கலை உணர்வு இருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு தொகுப்பாக அவை கதையை முன்னெடுத்து சென்றாலே போதும், வேறேந்த ஜோடனைகளும் தேவையில்லை என்கிறார்.
மேலும் அவர் சொல்வது: முழுப் படத்தையும் எப்படி இயக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசிக்காமல் ஒரு காட்சியை எப்படி இயக்கப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். சினிமா இயக்கும் வேலை மலை ஏற்றம் போல. மலையை மொத்தமாக யாரும் ஏறிவிட போவதில்லை. ஏற வேண்டிய அவசியமுமில்லை. ஒவ்வொரு அடியாக தான் ஏறுவோம். அதுபோல ஒவ்வொரு காட்சிகளில் கவனம் செலுத்துங்கள். காட்சிகளாக சொல்ல முடியாத எதுவும் கதைக்கு தேவையில்லாத விவரங்கள். கூடுதல் வசனங்கள் கதைக்கு தேவையில்லை…
மேலும், அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கதை நகர வேண்டும். துண்டுகளாக கதை சொல்ல வேண்டும். கதையின் ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருக்க வேண்டும். அதை ஒழுங்கு நோக்கி நகர்த்தி சென்று கதையை முடித்தல் வேண்டும்…
நடிகரிடம் என்ன விளக்குவது?
“அதிகமாக ஒன்றும் விளக்க வேண்டாம். ஒரு ஷாட்டில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை மட்டும் சொன்னால் போதும். கூடுதலாக எதையும் அவருக்கு சொல்ல வேண்டாம். கதவு மட்டும் கதவைப்போல் காட்சியளித்தால் போதும், கதவிலிருக்கும் தாழ்ப்பாள் கதவைப்போல் தோன்ற வேண்டிய அவசியமில்லை.” அதாவது ஒரு ஷாட்டில் அந்த  ஷாட்டின் நோக்கம் மட்டும் வெளிப்பட்டால் போதும், அதற்கு ஷாட்டின் தேவையை மட்டும் நடிகருக்கு சொன்னால் போதும் என்பதே அவர் சொல்வது.
ஒரு இயக்குனர் பயன்படுத்த வேண்டிய உத்திகள் என்ன?
“இயக்குனரின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் உத்திகள் மட்டுமே அத்தியாவசியமான உண்மையான உத்திகள். இயக்குனரின் காட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட உத்திகள் எதுவும் படத்திற்கு தேவையில்லை.
“சினிமாவிற்கென்று இருக்கும் எளிமையான விதிகளை பின்பற்றுங்கள், சுவாரஸ்யமாக எதையாவது செய்வதாக நினைத்துக் கொண்டு விதிகளை விட்டு விலகி செல்ல வேண்டாம்.”
இங்கே மேமட் புதிய making உத்திகளை எதிர்க்கிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. (அவருக்கு steady cam பயன்படுத்துவதில் உடன்பாடில்லை என்பது வேறு விஷயம்) அவர் சொல்வது ஒரு காட்சியை டைரக்ட் செய்வதற்கான எளிமையான வழியைக் கண்டுகொண்டு அதில் பயணியுங்கள் என்பதே. மேலும் படத்தொகுப்பின் போது காட்சிகளை மெருகேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு காட்சிகளை உருவாக்க கூடாது. சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பின் போதே இறுதியாக காட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவரின் கருத்து.
சினிமாவிற்கான எல்லா உத்திகளையும் சரியாக பின்பற்றியும், படம் சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வது?
“அது நம் கையில் இல்லை, வெற்றி தோல்விகளை பற்றி அலட்டிக் கொள்ளாது முழு கவனத்தோடு படத்தை இயக்குவதே இயக்குனரின் வேலை”
மிக சிறிய இந்த புத்தகத்தில் பெரும் பகுதி மேமட் மாணவர்களுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. உதாரண காட்சிகளை சொல்லி அதை எப்படி இயக்க வேண்டும் (எப்படி எழுத வேண்டும்) என்று அவர் சொல்வதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்.  //aravindhskumar.com/

கருத்துகள் இல்லை: